தகவலின் ஊடே வந்த நினைவுகள் – சிறுகதை

‘சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்’ என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

‘சில ஆண்டுகளுக்கு முன் அவனது மகன் வெளிநாடு சென்றுவிட்டான். புதியதாக இரண்டு அடுக்கு மாளிகை கட்டி விட்டான்’ என்ற தகவல் வந்தபோது ‘என் மகனே சென்றது போலவும், நானே வீடு கட்டி விட்டது போலவும்’ சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

மற்றவர் பார்வையில் அவன் எப்படியோ எனது பார்வையில் எனக்கு அவன் நல்ல‌வன்தான். சிறுவயது நண்பன் அல்ல, இருபது ஆண்டுகளாகதான் அவனை எனக்கு தெரியும்.

நான் அந்த ஊரில் எனது குடும்பத்தோடு குடியேறும்போது எனக்கு நாற்பது வயது. இப்போது, எனக்கு அறுபது வயது. இப்போது நான் அந்த ஊரில் இல்லை. அவன் என்னைவிட பத்து வயது மூத்தவன்.

ஒருநாள் விறகு அடுப்பில் ஆட்டுக்கறி குழம்பு வெந்து கொண்டிருந்தது. 

வீட்டுக்கு பின்புறம் இருந்த சீமைக்கருவேலம் மரக்காட்டிற்குள் ஆத்தாடித் தேவர் என்பவர் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார்.

ஆத்தாடித் தேவர் அவர் பேச்சுக்கு பேச்சு ‘ஆத்தாடி… ஆத்தாடி’ என்று சொல்லுவார். அதனால் அவரை இந்த பேரு வந்து ஒட்டிக்கொண்டது என்று நினைக்கிறேன். அவரது உண்மையான பேரு ஒண்டிப்புலித்தேவர்.

எங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வம்பளம்தான் அவரது ஊர்.

‘அடுப்புல கறி வேகுது. ஒரு நூறு மில்லி சாராயம் குடித்தால் நல்ல கறி சாப்பிடலாம்’ மனது கெடந்து தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த நேரம் கையில் சுத்தமாக பணம் இல்லை. கடன் சொல்லி கல்யாணிபுரம் குளுவ நாயக்கரிடம் கறி வாங்கியாச்சு’

குழுவ நாயக்கர் வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் ஆடு, கோழி என ஏதாவது பிடித்து வந்து வெட்டி போடுவார்.

கறி தேவைப்படுவோர்கள் கையில் பணம் இருந்தால் கொடுத்தும் வாங்கிக்கலாம். இல்லையென்றால் வாங்கிவிட்டு மறுவாரம் ஞாயிற்றுகிழமை அன்றும் கொடுக்கலாம். கடன் கொடுத்து வாங்க கூடியவர்.

‘சாராயத்துக்கு என்ன வழி பண்றது’ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரரின் குரல்.

“அருணகிரி, மாப்ள அருணகிரி.”என்றான் சண்முகம். எனக்கு அவர் மச்சான் முறை. இருவரும்தான் ஒண்ணா சேர்ந்துதான் வேலைக்கு போவோம். 

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘அறுக்க தெரியாதவ இடுப்புல ஆயிரத்தி எட்டு அரிவாள்’ என்று. அதுபோலதான் சண்முகமும்.

வித விதமாக மண்வெட்டி வைத்திருப்பான். திருப்பாச்சி அரிவாளில் இருந்து எல்லா ஊர் அரிவாட்களும் விதவிதமாக கோடாரிகளும் வைத்திருப்பான்.

ஆனால் மண்வெட்டி தவிர வேற எதையும் பிடித்து வெட்டத் தெரியாது. அவரது ஆயுதங்கள் என் கைபட்டே தேய்ந்து போகும். இருவரும் விவசாய கூலிகள்தான்.

சண்முகத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்து “என்ன மச்சான்” என்றேன்.

“வா ஆளுக்கொரு 100 மில்லி போடலாம்.” என்றான்.

“அட, போ மச்சான். எங்கிட்ட பைசா இல்ல.”

“என்ன மாப்ள நீ. நான்தான கூப்பிடுறேன். பைசா இல்லேன்னு நீ ஏன் கவலைப்படுற? எங்கிட்ட இல்லாம கூப்பிடுவேனா? வா மாப்ள.”

“ம்… சரி மச்சான். அடுப்புல கறி வெந்துகிட்டு இருக்கு. ஒரு கிண்ணத்துல எடுத்துட்டு வர்றேன்.”

வீட்டுக்குள் சென்று சிறிய கிண்ணம் நிறைய கறியோடு வெளியே வந்தேன். இருவரும் சேர்ந்து ஆத்தாடி தேவர் சாராயம் விற்கும் இடத்தை நோக்கி சென்றோம்.

அப்போதுதான் ஆத்தாடித்தேவர் சாராயத்தை வடித்து எடுத்து வந்து வைத்துக் கொண்டு சாராயத்தின் திடம் எப்படி இருக்கிறது என்று சுடலையை குடிக்க வைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

சுடலை குடிப்பதற்காகவே பிறவி எடுத்தவன். வேலை வெட்டிக்கு போவதில்லை. சரக்கின் திடத்தை தான் பார்த்தால் தனக்கு போதை ஏறி வியாபாரம் கெட்டு போகும் என்பதால் சுடலையை உடன் வைத்திருந்தார் ஆத்தாடி தேவர்.

சுடலையை தனது சரக்குக்கு விளம்பரமாகவும் பயன்படுத்திக் கொண்டார். போதையில் அவன் விழுந்து கிடக்கும்போது அவனை காட்டி தனது சரக்கின் தரம் பற்றி சொல்லி சரக்கை விற்பனை செய்வார்.

முதல் கிளாசை ஊற்றிக் கொடுத்தார். அதை வாங்கி குடித்து பார்த்து விட்டு “தேவர, தொண்டைய கருக்கு போட்டு அறுத்தால அறுக்குது ரொம்ப திடமா இருக்குது.” என்றான்.

“ஆத்தாடி” என்றவாறு ஆத்தாடி தேவர் ஒரு இரண்டு லிட்டர் தண்ணீரை மொத்த சாராயத்தில் ஊற்றிவிட்டு, மறுபடியும் ஒரு நூறு மில்லி சரக்கை ஊற்றி கொடுத்து சுடலையை குடிக்க சொன்னார்.

அவன் மறுபடியும் சரக்கை வாங்கி ‘மடக்’கென்று ஒரே வாயில் குடித்துவிட்டு “இப்ப கொஞ்சம் தொண்ட அறுப்பு இல்ல. ஆனா, இவ்வளவு திடமா தொடர்ந்து ரெண்டு நாளு குடிச்சான்னா குடலு வெந்து போயிடும்.” 

ஆத்தாடித்தேவர் மறுபடியும் ஒரு இரண்டு லிட்டர் தண்ணீரை மொத்த சரக்கில் ஊற்றிவிட்டு மீண்டும் ஒரு நூறு மில்லி சரக்கை ஊற்றி கொடுக்க அதையும் வாங்கி சுடலை ஒரே மடக்கில் குடித்துவிட்டு “இன்னும் திடமாதான் இருக்கு தேவர.”

“அப்படியா. அப்ப, இன்னும் ஒரு ரெண்டு லிட்டர் ஊற்றலாம்ன்னு சொல்றயா?”

“ஊத்துனா பக்குவம் சரியா இருக்கும்.” 

ஆத்தாடி தேவர் மீண்டும் ஒரு இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றிவிட்டு ஒரு நூறு மில்லி சரக்கை கிளாஸில் ஊற்றி “இப்ப சொல்லு.” என்று சுடலையை பார்க்க அவன் போதையில் கீழே விழுந்து புலம்பியபடி கிடந்தான்.

நானும் சண்முகமும் அங்கே வந்து சேர்ந்தோம்.

“ஒரு கிளாஸ் சாராயம் தான் குடிச்சான்; பய சுருண்டு போயிட்டான்.” என்று தனது சரக்கை பற்றி பெருமையடித்து கொண்டார் ஆத்தாடி தேவர்.

அவரது பேச்சுக்கு தாளம் தட்டுவது போல் “தேவர, உம்ம சரக்கோட திடத்த பத்தி நீரு சொல்லிதான் தெரிஞ்சுக்கணுமா? சரி, ரெண்டு கிளாஸ் ஊத்தும்.” என்று சண்முகம் பத்து ரூபாயை சட்டை பைக்குள் இருந்து எடுத்து கொடுத்தான்.

“ஆத்தாடி” என்றவாறு பணத்தை வாங்கி கண்ணில் ஒத்தி சட்டை பைக்குள் வைத்துவிட்டு இரண்டு கிளாசில் சாராயத்தை ஊற்றி தந்து விட்டு “ஆத்தாடி, அப்படி கொஞ்சம் தள்ளி போயிருங்க.” என்றார்.

சரக்கை கையில் வாங்கிய நாங்கள் சற்று தள்ளி சென்று ஒரு சீமைக்கருவேல மரத்தின் அடியில் அமர்ந்து சரக்கை குடித்தபடி கறியை சுவைத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கே சாராயம் குடிப்பதற்காக ஆவுடையப்ப தேவர் வந்தார். ஆத்தாடி தேவரிடம் ஐந்து ரூபாய் பணத்தை கொடுத்து “ஒரு கிளாஸ் கொடுண்ணே… ”

ஆவுடையப்ப தேவர் கையில் ஒரு கிளாஸ் சாராயத்தை ஊற்றி கொடுத்துவிட்டு “அந்தப்பக்கம் சண்முகமும் அருணகிரியும் கறி ஆக்கிக் கொண்டு வச்சிகிட்டு சரக்கு போட்டுட்டு இருக்கானுங்க. நீயும் போ” என்று சொல்ல.

சரக்கை வாங்கிய ஆவுடையப்ப தேவர் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஆவுடையப்பனை பார்த்ததும் “வாங்க தேவர” என்றார் சண்முகம்.

“நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கீங்களா?” என்றவாறு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்.

அமர்ந்தவர் வேட்டி மடியில் இருந்து ஒரு ஊறுகாய் பாக்கெட்டை எடுத்து கையால் திருகி பிய்க்க போன ஆவுடையப்ப தேவரிடம்  “ஆம், கறிய எடுத்து வாயில போட்டுட்டு அடியும்” என்றேன்.

சொல்வதற்காகவே காத்திருந்தது போல கறியை காலி செய்துவிட்டு பாத்திரத்தை நக்கி சரக்கை குடித்தார்.

“தேவர, அருணகிரி பொண்டாட்டிக்கு உன்னால ஒரு வேல மிச்சம் நக்கியே பாத்திரத்தை கழுவிட்டேயேய்யா” என்று கேலி செய்தார் சண்முகம்.

அப்போது “எப்பா, குடிச்சா வீட்ட பார்த்து போங்க. போலீஸ் வந்திட போகுது.” என்றார் ஆத்தாடி தேவர்.

மூவரும் கிளம்பி அவரவர் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானோம்.

அப்போது சண்முகம் என்னிடம் ஐந்து ரூபாயை தந்து “மாப்பிள எனக்கு கொஞ்சம் போதை அதிகமான மாதிரி இருக்குது. நான் அப்படியே போய் வீட்டுல படுத்துக்கறேன். நீ தேவர்கூட போயி அவர் வீட்டு பக்கத்துல இருக்கிற சிவன் நாடார் கடையில ஆளுக்கு ஒரு கட்டு பீடி வாங்கிட்டு வா.” என்றார்.

நான் ஆவுடையப்ப தேவரோடு சென்றேன். சண்முகம் வீட்டுக்கு போனார்.

ஆவுடையப்ப தேவருக்கு என் மீது ஏதோ ஒரு பழைய வன்மம் இருந்திருக்கிறது.

அது போதை ஆனவுடன் ஞாபகத்துக்கு வர பாதி வழியில் ஆவுடையப்ப தேவர் என்னிடம் வம்பு பேசியவாறு என்னை அடிக்க கையை ஓங்கினார்.

நான் சிறிதும் தாமதிக்காமல் அவரின் இடுப்பு மேலே எட்டி உதைத்து சாக்கடைக் குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டு பீடி கட்டு வாங்காமலே வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டேன்.

என் மீதான வன்மத்திற்கு காரணம் சுமார் ஒரு இருபது வருடத்திற்கு முன்பு பக்கத்து ஊரான ராசாபுரத்தில்தான் நான் இருந்தேன். எனக்கு தற்போது இருப்பதுதான் எனது சொந்த ஊர் என்று தெரியாது.

நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்து விட என் தாய் என்னை தூக்கிக்கொண்டு அவரது தாய் ஊரான வம்பிளம் சென்றுவிட்டாள்.

அதன்பிறகு என் அம்மாவை ராசாபுரத்தில் இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார்கள். நானும் என் தாயுடனே ராசாபுரத்தில் வசித்து வந்தேன்.

எனக்கு ஒரு பதினெட்டு வயது இருக்கும். நானும் சக்திவேலும் தியாகராஜன் என்பவரின் பண்ணையில் வேலை செய்தோம்.

ஒருநாள் தியாகராஜன் மாட்டு வண்டியில் நாகர்கோவில் சந்தையில் மிளகாய் வற்றலை கொண்டு போய் விற்றுவிட்டு வர சொன்னார். நான் சக்திவேல் இருவரும் சென்றோம்.

சென்றுவிட்டு திரும்பி வரும்போது காலாங்கரை கிராமத்தில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. நாங்கள் காலாங்கரை கிராமத்திற்குள் வரும்போது நேரம் இரவு ஒன்பது மணி இருக்கும்.

சக்கிவேல் என்னிடம் “திருவிழா பார்த்துவிட்டு போகலாம்” என்றான்.

நானும் “சரி” யென சம்மதிக்க இருவரும் ஊருக்குள் சென்று ஒரு ஒதுக்கு புறத்தில் வண்டியில் பூட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து இருபக்க சக்கரத்தில் மாடுகளை கட்டி விட்டு, சக்கரங்கள் உருண்டுவிடாதவாறு கல்லால் சக்கரங்களுக்கு அண்டை கொடுத்துவிட்டு, வண்டியில் இருந்த வைக்கோலை மாட்டுக்கு வைத்துவிட்டு திருவிழா பார்க்க சென்றோம்.

திருவிழாவில் கரகாட்டம் வைத்திருந்தார்கள். இருவரும் முதலில் இறைவனை தரிசித்துவிட்டு வந்து கரகாட்டம் பார்க்க அமர்ந்தோம்.

சிறிது நேரம் கரகாட்டம் பார்த்து கொண்டிருக்கும் போது சுற்றும் முற்றும் பார்த்தேன்.

ஊரில் உள்ள இளைஞர்களும் பெருசுகளும் போதையில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களை பார்த்த எனக்கும் ஆசை வர சக்தியிடம் சொல்லிவிட்டு நான் ஒரு நூறு மில்லி ஏத்திவிட்டு வரலாம் என்று போனேன். சக்திக்கு அந்த பழக்கம் இல்லை. அதனால் “வரவில்லை” என்று சொல்லி விட்டான்.

நீரோடையின் கரையில் அமர்ந்து ஒருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார்.

நான் அவரிடம் சென்று “ஒரு நூறு மில்லி ஊற்றுங்கள்” என்றேன்.

அவர் என்னை உச்சி முதல் பாதம் வரை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் ஒரு டம்ளரில் 100 மில்லி சரக்கை ஊற்றித் தந்தார். நான் சரக்கை வாங்கி ‘மடக்’ என்று குடித்துவிட்டு தம்ளரை திருப்பிக் கொடுத்தேன்.

அவர் டம்ளரை வாங்கி வைத்துக்கொண்டு வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். நான் எனது மடியில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

அவர் என்னிடம் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். நான் ‘ஏன் இந்த ஆள் நம்மிடம் காசு வாங்க மறுக்கிறார்’ என்று யோசித்தவாறு சென்றேன்.

அப்போது ஆவுடையப்ப தேவரும் முருக தேவரும் சேர்ந்து வம்பிளத்தை சேர்ந்த ‘மந்திரம்’ என்பவரை தண்ணீரில் மூழ்கடித்து மூழ்கடித்து தூக்கி நிறுத்தி அடித்துக் கொண்டிருந்தனர்.

நான் என் மாமா வீட்டிற்கு அடிக்கடி வம்பிளம் சென்று வருவதால் எனக்கு மந்திரத்தை தெரியும். நடப்பதை பார்த்ததும் “மந்திரத்த அடிப்பது யாருல?” என்றேன்.

என்னை பார்த்ததும் ஆவுடையப்ப தேவரும் முருக தேவரும் மந்திரத்தை விட்டுட்டு ஓடிவிட்டனர்.

முருகனை ஊரில் ‘குப்பை முருகன்’ என்று அழைப்பார்கள். பொதுவாக கிராமத்தில் வீட்டுக்கு ஒரு குப்பை குழி இருக்கும்.

ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் சாணத்தையும் வீட்டை கூட்டும்போது கிடைக்கும் குப்பைகளையும் அதில் கொட்டி வைப்பார்கள்.

அந்த குப்பைகளை வாங்க, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். அவர்களுக்கு சாணம் வாங்கி கொடுப்பதை தொழிலாக செய்து வந்ததால் அவனை ‘குப்பை முருகன்’ என்று அழைத்தனர்.

என்னுடன் இருக்கும் சக்திவேலு மறவர் பிரிவை சார்ந்தவன்தான். நான் மந்திரத்தை தூக்கி நிறுத்தி அவர்கள் அவனை அடிப்பதற்கான காரணத்தை கேட்டேன்.

ஆவுடையப்ப தேவரும் முருக தேவரும் சாராயம் குடித்து கொண்டிருக்கும் போது, சாராயம் குடிக்க வந்த மந்திரத்தின் கால் ஆவுடையப்ப தேவரின் மேல் பட மந்திரம் மன்னிப்பும் கேட்டும், அவனது மன்னிப்பை ஏற்று கொள்ளாது அடித்து உதைத்து இருக்கிறார்கள்.

நான் மந்திரத்தை மீட்டு வம்பிளத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் வந்து கரகாட்டம் பார்க்க அமர்ந்தேன்.

ஆவுடையப்ப தேவரும் முருக தேவரும் என்னை பற்றி விசாரித்திருக்கின்றனர். நான் வழிப்போக்கன் என்று தெரிந்ததும் கூட்டத்தில் வைத்து சுத்து போட்டு என்னை தூக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

நான் எந்த நினைப்பும் இல்லாமல் ஆட்டம் பார்ப்பதில் கண்ணாக இருந்ததால் என்னை சுற்றி நடப்பது எதுவும் எனக்கு தெரியவில்லை.

திருவிழா நடத்துவது பட்டியல் இனத்தவர்கள். அதனால், அவர்களால் கூட்டத்துக்குள் இறங்கி பிரச்சனை செய்து என்னை தூக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவர்கள் சுற்று போடும் விஷயம் எனக்கே தெரிந்துவிட்டது.

நான் நம்மேல் கைபடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் சர்வ சாதாரணமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தேன்.

நான் இது பற்றி சக்திவேலியிடம்கூட எதுவும் சொல்லவில்லை.

க‌ரகாட்டம் முடிந்ததும் இருவரும் வண்டியில் மாட்டை பூட்டி கிளம்ப தயாரானோம்.

அப்போது ஆவுடையப்ப தேவர் முருக தேவர் இருவரும் வண்டியை தடுத்தவாறு நின்று கொண்டனர். என்னிடம் “எந்த ஊரு?” என்றார் ஆவுடையப்ப தேவர்.

சக்திவேல் என்னிடம் “வண்டியில இருந்து ஒரு பாரக்கம்ப புடுங்கு” என்றான்.

ஆவுடையப்ப தேவர் முருகத்தேவர் இருவரும் பாதையில் இருந்து விலகி சென்றனர். நாங்கள் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றோம்.

என்ன பிரச்சினை என்று சக்திவேல் என்னிடம் விசாரித்தான்.

வீடு வரை நடந்ததை நான் சக்திவேலிடம் சொல்ல இருவரும் சிரித்தபடி சென்றோம்.

ஊருக்கு சென்றதும் என்னிடம் சாரயத்திற்கு காசு வேண்டாம் என்று சொன்னவரை பற்றி சொன்னேன்.

அவரின் அடையாளத்தை பற்றி கேட்ட என் அம்மா “அவர்தான் உன் சித்தப்பா. உன் அப்பாவின் தம்பி” என்றார்.

“உன் அப்பா இறந்த உடனே நான் உன்னை தூக்கிக்கொண்டு வம்பிளம் வந்துவிட்டேன். உன் அப்பா மோகினி அடித்து இறந்து விட்டார். செய்வினை கோளாறு சாபக்கேடு என்று பலவிதமாக சொன்னார்கள் இவை எதுவும் உன்னை தாக்கிவிட கூடுமோ என்ற அச்சத்தில் நான் அந்த ஊர் போகவில்லை. அதன்பிறகு அவர்களுக்கும் நமக்குமான உறவு விட்டு போச்சி” என்றார்.

எனக்கு அங்கே ஒரு வீட்டு மனைக்கு உரிய நிலம் இருப்பதாக சொன்னார். அந்த மனையில்தான் தற்போது நான் வீடும் கட்டியுள்ளேன்.

அந்த சம்பவத்திற்கு பிறகு சிறிது காலங்கள் கழித்து என் சித்தப்பா மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் கால் வைத்து மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்.

அப்போது அவரது பையனுக்கு மூன்று வயது. என் தந்தை இறந்தபோது எனக்கு மூன்று வயது. அவர்தான் என்னை வைத்துக்கொண்டு என் தந்தைக்கு கொள்ளி வைத்தார் என்று என் அம்மா சொன்னார்.

அந்த கடனை நான் அவர் மகனை வைத்துக்கொண்டு கொள்ளி வைத்து அடைத்தேன்.

சமீபத்தில் குற‌த்தியூர் சென்றிருந்த போது சக்திவேலை சந்திக்க நேரிட்டது. அவன் குடிக்கு அடிமையாகி இருந்தான். நான் குடியை விட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிவிட்டது.

ரக்சன் கிருத்திக்
கைபேசி: 8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.