தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

தக்காளி ஊறுகாய் தக்காளியைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். தக்காளி விலை குறைவான நேரங்களில் வாங்கி ஊறுகாய் தயார் செய்து உபயோகிக்கலாம்.

பயணங்களின் போது கொண்டு செல்லும் உணவிற்கு தொட்டுக்கறியாக பயன்படுத்த இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

சுவையான தக்காளி ஊறுகாய் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தக்காளி – ½ கிலோ கிராம்

வெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

மிளகாய் வற்றல் – 15 எண்ணம்

பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

வெந்தயம் – 2 ஸ்பூன்

கடுகு – 2 ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 குழிக்கரண்டி

கறிவேப்பிலை – 5 கீற்றுகள்

கடுகு – 2 ஸ்பூன்

தக்காளி ஊறுகாய் – செய்முறை

முதலில் தக்காளியை கழுவி துடைத்துக் கொள்ளவும். பின் அதனை மிகவும் சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி கழுவி துடைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

வற்றலை காம்பு நீக்கி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

 

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

வெறும் வாணலியில் வெந்தயத்தையும், கடுகையும் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை உருவி அலசிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் அதனுடன் பொடியாக வெட்டி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

 

தக்காளியைச் சேர்த்து வதக்கும்போது
தக்காளியைச் சேர்த்து வதக்கும்போது

 

ஓரிரு நிமிடங்கள் கழித்து வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும்போது
வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும்போது

 

தக்காளி பாதி வதங்கியதும் மிளகாய் வற்றல் பொடி, தேவையான கல் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.

 

மிளகாய் வற்றல் பொடி, கல் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கும் போது
மிளகாய் வற்றல் பொடி, கல் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கும் போது

 

ஓரளவு எண்ணெய் பிரிந்தவுடன் அதனுடன் வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்.

 

வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கும் போது
வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கும் போது

 

தக்காளி நன்கு மசிந்து வெந்து எண்ணெய் மேலே நன்றாகப் பிரிந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.

 

சுவையான தக்காளி ஊறுகாய்
சுவையான தக்காளி ஊறுகாய்

 

இதனை நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும். இவ்வாறு செய்வதால் ஊறுகாய் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இது இட்லி, தோசை, சப்பாத்தி, கலவை சாத வகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றது.

குறிப்பு

இந்த ஊறுகாய்க்கு நன்கு பழுத்த நாட்டுத் தக்காளியைத் தேர்வு செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் எலுமிச்சை சாற்றினையோ, புளிச்சாற்றினையோ சேர்த்து ஊறுகாய் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

2 Replies to “தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.