தக்காளி குருமா செய்வது எப்படி?

தக்காளி குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவைகளுக்கு அருமையான தொட்டுக்கறி.

தக்காளியில் சட்னி மட்டுமே செய்தவர்கள் இந்த குருமாவை தயார் செய்யலாம். இதனை தயார் செய்யும் நேரமும் குறைவு என்பதோடு செய்யும் முறையும் எளிது.

இதில் கிராம்பு, பட்டை, சோம்பு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

இனி சுவையான தக்காளி குருமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தர அளவுடையது)

கொத்த மல்லி இலை – 2 கம்பு

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

கறிவேப்பிலை – 2 கீற்று

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)

மசாலா பொடி ‍- 1&1/2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி ‍- 1/4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசால் தயார் செய்ய

சின்ன வெங்காயம் – 15 எண்ணம்

தக்காளி – 3 எண்ணம் (நடுத்தர அளவு)

பொரிகடலை – 1 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 5 எண்ணம்

கசகசா – 1 டீஸ்பூன்

பட்டை – ஆட்காட்டி விரல் அளவு

கிராம்பு – 3 எண்ணம்

சோம்பு – ‍ 1&1/2 டீஸ்பூன்

மிளகு – 15 எண்ணம்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

சோம்பு ‍ 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சு இலை – 1 எண்ணம் (சிறியது)

பட்டை ‍ 1/2 சுண்டுவிரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

தக்காளி குருமா செய்முறை

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் மிகவும் பொடிதாக நறுக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்யவும்.

தக்காளியை அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அலசி பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி நீளவாக்கில் பாதியளவு கீறவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் மசாலாவுக்குத் தேவையான சின்ன வெங்காயம், பொரிகடலை, மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, முந்திரிப் பருப்பு மற்றும் கசகசா ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

மசாலா தயாரிக்க தக்காளியைத் தவிர மற்றவைகளைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

தேவையான மசாலா தயார்.

தேவையான மசாலா

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, பிரிஞ்சு இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

தாளிதம் செய்யும் போது

அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் எளிதாக வதங்கி விடும்.

வெங்காயத்தைச் சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்ததும்

அதனுடன் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இஞ்சி, பூண்டினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் மல்லி இலை சேர்த்துக் கிளறவும்.

மல்லி இலையை சேர்த்ததும்

அதில் மசாலா பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்
மசாலாவைக் கிளறும் போது

அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதினைச் சேர்த்து ஒருசேரக் கிளறி 1 நிமிடம் வதக்கவும்.

அரைத்த விழுதினை சேர்த்ததும்
அரைத்த விழுதினை வதக்கியதும்

அதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

அரைத்த விழுதினை வதக்கியதும்

கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 -8 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் திறந்து பார்த்தால் எண்ணெய் பிரிந்து இருக்கும். சுவையான தக்காளி குருமா தயார்.

தக்காளி குருமா
தக்காளி குருமா

குறிப்பு

மசாலா தயார் செய்யும் போது அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தக்காளியை தவிர மற்ற பொருட்களை முதலில் நன்கு அரைத்துக் கொள்ளவும். தக்காளியைச் சேர்த்து அரைக்கும்போது, தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் மற்ற பொருட்களை சரியாக அரைபடாது.

விருப்பமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்திற்குப் பதிலாக தேங்காயையும், பொரிகடலைக்குப் பதிலாக வறுத்த நிலக்கடலையையும், மிளகிற்குப் பதிலாக பச்சை மிளகாயையும் பயன்படுத்தி மசாலா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்