தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் முக்கிய உணவுப் பொருளாகும். இப்போது தக்காளி சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – ½ கிலோ கிராம்
சின்ன வெங்காயம் – ¼ கிலோ கிராம்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – மூன்று பல்
பச்சை மிளகாய் – 2 (சிறியது)
மிளகு – 10 (எண்ணிக்கையில்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்ல எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளியை நான்காக அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நேர்வாகில் அரிந்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடிக்கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
கடுகு வெடித்தவுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கிய நிலையில் அரிந்த தக்காளி, சிறுதுண்டுகளாக உள்ள இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கவும். தக்காளி தோல் நீங்கி சுருளானதும் அடுப்பை அணைத்து விடவும்.
இக்கலவை நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.சுவையான தக்காளி சட்னி தயார்.
இது இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகிய உணவு வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் வாசனையுடன் சுவை கூடும். வெளியூர் பயணங்களின் போது இச்சட்டினியைத் தயார் செய்து எடுத்துச் செல்லலாம். நன்கு வதக்கி விடுவதால் கெட்டுப் போகாது.
குறிப்பு
இச்சட்டினியை தயார் செய்யும் போது விருப்பம் உள்ளவர்கள் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வத்தல் சேர்த்து தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
மறுமொழி இடவும்