ஸ்பெசல் தக்காளி சாதம் செய்வது எப்படி?

சுவையான ஸ்பெசல் தக்காளி சாதம்

ஸ்பெசல் தக்காளி சாதம் என்பது அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று.

இப்போது தக்காளியுடன் பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு எளிதாகச் செய்யும் ஸ்பெசல் தக்காளி சாத செய்முறையை விளக்கியுள்ளேன்.

நீங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து ருசியுங்கள்.

 

தேவையான பொருட்கள்

தேவையான காய்கறிகள்
தேவையான காய்கறிகள்

பொன்னிப் புழுங்கல் அரிசி – 400 கிராம்

தக்காளி – 500 கிராம்

முருங்கை பீன்ஸ் – 25 கிராம்

பட்டாணி – 25 கிராம்

பீன்ஸ் – 25 கிராம்

கேரட் – 25 கிராம்

காலிபிளவர் – 25 கிராம்

மீல்மேக்கர் – 25 கிராம்

எலுமிச்சை பழம் – 1 மூடி

நெய் – 25 கிராம்

கொத்த மல்லி இலை – 10 தண்டுகள் (மீடியம் சைஸ்)

புதினா இலை – 20 எண்ணம்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

பெருஞ்சீரகம் – 4 ஸ்பூன்

பட்டை – ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

அன்னாசிப்பூ – 1 எண்ணம்

கடல்பாசி – சிறிதளவு

சாதிப்பத்ரி – 3 இதழ்கள்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப்பூண்டு – 3 பற்கள் (பெரியது)

கசகசா – 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 6 எண்ணம்

தேங்காய் – ½ மூடி

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

 

செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு அதில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு அரிசியை குலுக்கி எலுமிச்சை சாறு எல்லா இடத்திலும் பரவுமாறு செய்யவும்.

கொத்த மல்லி, புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட், முருங்கை பீன்ஸ், தக்காளி ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி அதில் காலிபிளவர் மற்றும் மீல்மேக்கர் ஆகியவற்றை தனித்துத் தனியாக போடவும்.

சிறிது நேரம் கழித்து மீல்மேக்கரை நன்கு பிழிந்து விட்டு சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். காலிபிளவர் துண்டுகளை வெளியே எடுத்துவிடவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து காம்பு நீக்கிய பச்சை மிளகாயுடன் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி தோல் உரித்த வெள்ளைப்பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கசகசாவை சிறிதளவு நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன் முந்திரிப்பருப்பு, தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கடல்பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.

தாளிக்கும் போது
தாளிக்கும் போது

அதனுடன் வெட்டி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகளைப் போட்டவுடன்
காய்கறிகளைப் போட்டவுடன்

 

தக்காளி சேர்த்ததும்
தக்காளி சேர்த்ததும்

 

மசாலா சேர்க்க வேண்டிய பதத்தில்
மசாலா சேர்க்க வேண்டிய பதத்தில்

 

காய்கறிகள் பாதி வெந்த நிலையில் வெங்காயம் பச்சை மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து இஞ்சி வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து கசகசா முந்திரி தேங்காய் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன் பரபரப்பாக அரைத்து வைத்துள்ள கரம் மசாலாப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.

தண்ணீர் சேர்க்கத் தயார் நிலையில்
தண்ணீர் சேர்க்கத் தயார் நிலையில்

 

பின் அதனுடன் 800 கிராம் அளவிற்கு (தண்ணீர் அரிசிக்கு இரண்டு பங்கு) சேர்த்துக் கிளறி விடவும். அதனுடன் பொன்னி அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.

அரிசி சேர்த்து மூடத் தயார் நிலையில்
அரிசி சேர்த்து மூடத் தயார் நிலையில்

 

ஒரு விசில் வந்தவுடன் தணலை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

குக்கரில் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தக்காளி சாதத்தை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான ஸ்பெசல் தக்காளி சாதம் தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து உண்ணலாம்.

ஸ்பெசல் தக்காளி சாதம்
ஸ்பெசல் தக்காளி சாதம்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு நூக்கோல், டர்னிப் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி காய்கறிக் கலவையுடன் சேர்த்து வதக்கி தக்காளி சாதத்தைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Comments

“ஸ்பெசல் தக்காளி சாதம் செய்வது எப்படி?” மீது ஒரு மறுமொழி

  1. Kanagaraj

    Entha tips vegetable briyani mathiri erkkirathu

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.