தக்காளி தோசை

தக்காளி தோசை செய்வது எப்படி?

தக்காளி தோசை அசத்தலான சுவையுடன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அருமையான தோசை.

இது பார்ப்பதற்கு அழகான நிறத்துடன் இருப்பதோடு இதனுடைய சுவையும் அலாதி.

சாதாரண இட்லி மாவுடன் தக்காளி மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து இத்தோசை செய்யப்படுகிறது.

இட்லி மாவு வீட்டில் இருந்தால் இதனை எளிதில் தயார் செய்து விடலாம். இனி சுவையான தக்காளி தோசை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கெட்டியான இட்லி மாவு – 2 கப் (10 தோசைகள் ஊற்றும் அளவு)

தக்காளி – 4 எண்ணம் (மீடியம் சைஸ்)

சீரகம் ‍ – 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6 எண்ணம்

வெள்ளைப்பூண்டு – 4 பற்கள் (மீடியம் சைஸ்)

கறிவேப்பிலை – 5 கீற்று

பெருங்காயம் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – தோசை சுட தேவையான அளவு

தக்காளி தோசை செய்முறை

கெட்டியான இட்லி மாவினை வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியை சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலைக் காம்பு நீக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

ஓரளவு அரைபட்டதும் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

தக்காளி சேர்த்ததும்

மிக்ஸியில் அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

தக்காளி விழுதுடன் தேவையான உப்பு மற்றும் பெருங்காயப் பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

அரைத்த தக்காளி விழுது

கெட்டியான இட்லி மாவுடன் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

மாவு தோசை ஊற்றும் அளவில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவையான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

மாவு நீர்த்து இருந்தால் அதனுடன் அரிசி மாவு சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்.

தேவையான பதத்தில் மாவு

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் மாவினை ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

தோசையாக ஊற்றியதும்

பின்னர் தோசையைச் சுற்றிலும் கடலை எண்ணெய் விடவும்.

தோசை வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும். சுவையான தக்காளி தோசை தயார்.

திருப்பிப் போட்டதும்

கெட்டியான தேங்காய் சட்னி, கொத்த மல்லி சட்னி, நிலக்கடலை சட்னி ஆகியவை இதனுடன் சுவைக்க மிகப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

மாவு நீர்த்து இருந்தால் விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு ரவையை மாவில் கலந்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தோசை வார்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் மாவில் வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து தோசை வார்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.