தக்காளி

தக்காளி, இதனை உண்ணக்கூடிய பழவரிசையிலும், காய்கறிகளின் வரிசையிலும் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளியானது சூப்பர் பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.

குளிர்ச்சித் தன்மை உடைய தக்காளியை விஷப்பழம் என்றே ஆரம்ப காலத்தில் கருதினர். பின் இதன் ருசி மற்றும் பயன்பாட்டின் காரணமாக கடந்த 200 ஆண்டுகளில் இப்பழம் மக்களிடையே மிகப்பெரிய புகழினை அடைந்து விட்டது.

இன்றைக்கு உலக நாடுகள் எல்லாவற்றிலும் இது பயிர் செய்யப்படுகிறது.

இப்பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா என்று கருதப்படுகிறது. ஆனால் ஸ்பானியர்களால் உலகெங்கும் இது பரப்பப்பட்டது.

தக்காளியானது ஓராண்டு மட்டுமே உயிர் வாழும் செடி வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இச்செடி 1-3 மீ உயரம் வரை வளரும் தன்மையுடையது.

தக்காளியின் அறிவியல் பெயர் சோலானம் லைக்கோ பெர்சிகம் என்பதாகும். கத்தரிக்காய், மிளகாய், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட தாவரங்கள் சோலானேசியே என்ற நிழல் சேர் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை.

அடிப்படையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் இப்பழம் செயல்பாட்டு உணவு என்று அழைக்கப்படுகிறது.

தக்காளியானது சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு, வெளிர் சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களில் விளைவிக்கப்படுகிறது. எனினும் தக்காளியின் நிறம் சிவப்பு என்றே பொதுவாக அறியப்படுகிறது.

இப்பழமானது உள்ளே சாறு நிறைந்த வெளிர் சிவப்பான மென்மையான சதைப்பகுதியையும், அதனுள்ளே மஞ்சள் நிற எண்ணற்ற விதைகளையும் கொண்டுள்ளது. இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையினை உடையது.

இப்பழத் தாவரம் எளிதாக பயிர் செய்யக்கூடியதாகவும், எளிதில் வளரக்கூடியதாகவும் இருப்பதால் பல நாடுகளின் உணவுப் பட்டியலில் இது நிலையான இடத்தினைப் பெற்றுள்ளது.

 

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் போன்றவைகள் காணப்படுகின்றன.

இப்பழத்தில் தாதுஉப்புக்களான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவைகள் காணப்படுகின்றன.

நுண்ஊட்டச்சத்துக்களான பீட்டா கரோடீன், ஆல்பா கரோடீன், லைக்கோபீன், லுடீன் ஸீக்ஸாத்தைன் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன.

கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்சத்து போன்றவற்றையும் இப்பழம் கொண்டுள்ளது.

 

தக்காளியின் மருத்துவப் பண்புகள்

ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகளின் மூலம்

தக்காளியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகளவு காணப்படுகின்றன. இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தின் போது வெளியாகும் ப்ரீரேடிக்கல்களினால் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

கர்ப்பப்பை வாய், மலக்குடல், தொண்டை மற்றும் உணவுக்குழாய், இனப்பெருக்க உறுப்பு, மார்பகம் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதை இப்பழத்தின் லைக்கோபீன்கள் பாதுகாக்கின்றன.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்தல் மற்றும் இதயப் பாதுகாப்பு

தக்காளியில் உள்ள லைக்கோபீன்கள் உடலில் கொலஸ்ட்ராலினைத் தடைசெய்கிறது. இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் டிரைகிளிசைராய்டுகளின் அளவினைக் குறைக்கிறது.

கெட்ட கொழுப்புக்கள் மற்றும் டிரைகிளிசராய்டுகள் இரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. எனவே தக்காளியை உணவில் சேர்க்கும்போது மாரடைப்பு வருவது தடை செய்யப்படுகிறது.

சிகரெட் புகையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க

தக்காளியில் கௌமாரிக் அமிலம் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் ஆகிய இரு அமிலங்கள் காணப்படுகின்றன. இவ்வமிலங்கள் சிகரெட்டினால் உடலில் உருவாகும் நைட்ரோசமைன் என்ற வேதிப்பொருட்களைத் தடைசெய்கின்றன.

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ-வானது சிகரெட்டினால் உடலில் ஏற்படும் பாதிப்பினைக் குறைத்து நுரையீரல் புற்றுநோய் வராமல் தடைசெய்கிறது.

தெளிவான கண்பார்வைக்கு

இப்பழத்தில் அதிகஅளவு விட்டமின் ஏ காணப்படுகிறது. இது கண்பார்வையை தெளிவாக்குகிறது. விட்டமின் ஏ-வானது கண்தசை அழற்சி நோய், மாலைக்கண் நோய் ஆகியவை வராமல் தடைசெய்கிறது.

எனவே தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டு கண்நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதோடு தெளிவான கண் பார்வையையும் பெறலாம்.

நல்ல செரிமானத்திற்கு

தக்காளியில் காணப்படும் நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இது மஞ்சள் காமாலை வராமல் தடைசெய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

மேலும் இப்பழத்தில் காணப்படும் நார்சத்து உணவுப் பாதையில் செரிமானம் நன்கு நடைபெறத் தூண்டுவதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் வழிசெய்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க

தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் இரத்த குழாய்கள் மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டம் நடைபெற காரணமாகிறது.

சர்க்கரை நோய்க்கு

இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் மனஅழுத்தத்தினால் ஏற்படும் டைப் -2 சர்க்கரை நோய் வராமல் தடைசெய்கிறது.

ஆரோக்கியமான சருமத்தினைப் பெற

தக்காளியானது சருமம், கேசம், பற்கள், எலும்புகள் பராமரிப்பிற்கு துணைபுரிகிறது. சூரிய வெப்பத்தினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இப்பழத்தின் சாற்றினைத் தடவ நிவாரணம் கிடைக்கும்.

தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் வரும் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம். சரும நோய்களுக்கான மருந்து தயாரிப்பில் இப்பழம் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் பாதை தொற்றிலிருந்து பாதுகாப்பு

இப்பழம் சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. இப்பழத்தில் காணப்படும் நீர்சத்து சிறுநீரை தூண்டிவிட்டு அதிக நீர், அதிகப்படியான உப்புக்கள், யூரிக் அமிலம் ஆகியவை உடலில் இருந்து வெளியேற காரணமாகிறது. எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து சிறுநீர் பாதை தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

 

தக்காளியைத் தேர்வு செய்யும் முறை

இப்பழத்தினைத் தேர்வு செய்யும்போது புதிய, உறுதியான, சீரான அளவிலான பழங்களைத் தேர்வு செய்யவும். தக்காளியின் மேற்தோல் சுருங்கி, கீறல் விழுந்து, மிகவும் மெதுவாக இருக்கும் பழங்களைத் தவிர்த்து விடவும்.

உறுதியான மேற்தோல் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறப் பழங்களை அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். நன்கு பழுத்த தக்காளி எளிதில் அழுகிவிடும் ஆதலால் இதனை குளிர்பதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

இப்பழத்தினை புதிதாக உள்ள போதே பயன்படுத்தும் போது அதில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகளை முழுவதும் பெறலாம்.

இப்பழத்தினை உபயோகிக்கும்போது தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தலாம். தக்காளியானது அப்படியேவோ, சமையலிலோ பயன்படுத்தப்படுகிறது.

தக்காளி ஜாம், கெச்சப், சட்டினி, சாலட், சூப், பழச்சாறு, பழக்கலவை மற்றும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச் சத்துக்களும், ருசியும் கூடிய தக்காளியை சுவைத்து மகிழ்ந்து நல்வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.