தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார்.
அவர் தன்னுடைய குதிரை மற்றும் நாயுடனே வியாபாரப் பயணம் செய்வது வழக்கம்.
ஒருசமயம் வியாபாரத்திற்காக, பொருட்களையும் உணவினையும் கழுதையில் ஏற்றிக் கொண்டும், நாயை அழைத்துக் கொண்டும் சென்றார்.
பயணத்தின் இடையில் களைப்படைந்த, கன்னியப்பன் கழுதையை புல் மேய விட்டுவிட்டு, அருகில் இருந்த மரத்தடியில் படுத்து உறங்கினார்.
கழுதை புற்களை வயிராற மேய்ந்தது.
பயணக் களைப்பாலும் தின்பதற்கு ஏதும் இல்லாததாலும் நாய் பசியால் மிகவும் வாடியது.
பசி வயிற்றை கிள்ளியதை உணர்ந்த நாய் கழுதையிடம் “நண்பனே, எனக்கு மிகவும் பசிக்கிறது. நமது எஜமானரோ நன்கு படுத்து உறங்குகிறார். நீ கொஞ்சம் சாய்ந்து படுத்துக் கொள். உன் முதுகில் உள்ள உணவு மூட்டையிலிருந்து சிறிது உணவை எடுத்து நான் உண்கின்றேன்” என்றது.
ஆனால் கழுதையோ, நாயின் பேச்சினை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. புற்களை உண்பதிலேயே கவனத்தைச் செலுத்தி வயிறார புற்களை தின்று கொண்டிருந்தது.
நாயும் விடாமல் கழுதையிடம் கெஞ்சியது.
நாயின் கெஞ்சல் கழுதையை எரிச்சல் படுத்தியது.
உடனே அது எரிச்சலுடன் “ஏன் அவசரப்படுகிறாய்? நமது எஜமாசனர் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் விழித்தெழுந்து உண்ணும் போது உனக்கும் உணவு தருவார். அதுவரை நீ ஏன் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாய். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உனக்கு தெரியாதா?” என்று கேட்டது.
நாயுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது. பின்னர் பசியுடன் அது சோர்ந்து படுத்தது.
கழுதை, நாயை கண்டு கொள்ளாமல், புற்களை மேய்ந்து கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில் அவ்வழியே ஓநாய் ஒன்று வந்தது.
அதனைப் பார்த்ததும் கழுதை நாயிடம் “நண்பனே, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று.” என்று பதறிக் கூறியது.
படுத்திருந்த நாயோ “ஏன் பதறுகிறாய் நண்பா? கொஞ்சம் பொறுமையாக இரு. உறங்கும் எஜமானர் இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து இங்கே வருவார். அவர் நிச்சயம் உனக்கு உதவி செய்வார்.” என்று அமைதியாகக் கூறியது.
பிறருக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் நாம் உதவினால்தான், நமக்கு தக்க நேரத்தில் உதவி கிடைக்கும். ஆதலால் தக்க நேரத்தில் உதவி செய் என்ற உண்மையை இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
மறுமொழி இடவும்