தரகர் கொண்டு வந்திருந்த மாப்பிள்ளைகளின் ஃபோட்டோக்களை அலசி, தனது தங்கை மாலதிக்கு நல்ல பொருத்தமான மாப்பிள்ளையாக ஒன்றை தேர்வு செய்ய பார்த்துக் கொண்டிருந்தான் வினீஷ்.
“பேரு விஸ்வநாதன், பி.இ படிச்சுட்டு சென்னையில் ஆட்டோமொஃபைல் கம்பெனியில வேல, பார்க்கிறாரு. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, சொந்த பந்தமெல்லாம் நிறைய உண்டு. ஆனா அம்மா அப்பா கிடையாது” தரகர் சொல்லிவிட்டு வினீஷ்சின் பதிலுக்கு காத்திருந்தார்.
“மாலதி, உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு. மேற்கொண்டு அவர பொண்ணு பார்க்க வரசொல்லலாம்”
“இந்த மாப்பிள்ள வேண்டாம் அண்ணா, வேற யாரையாவது பாருங்களேன்!’’
“இந்த மாப்பிள்ளைக்கு என்னம்மா குறைச்சல்? இவர் வீட்டுல மாமனார் மாமியார் தொல்லை எல்லாம் கிடையாது”
“சின்ன வயசில நம்ம அம்மா அப்பா இறந்துட்டாங்க, அதனால அம்மா அப்பாவோட அன்பு நம்ம ரெண்டு பேருக்கும் கிடைக்காம போச்சு, நான் போற இடத்துல மாமனார் மாமியார் இருந்து அவங்கள என் அம்மா அப்பாவ நினச்சி அவங்ககிட்ட அன்பா நடந்து அவங்க அன்ப வாங்கணும்னு விரும்பறேன் அண்ணா!’’ சொல்லிவிட்டு சமையலறைக்கு நடந்து போன தனது தங்கச்சியை பெருமையாகப் பார்த்தான் வினீஷ்.
M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172