கிருஷ்ணதேவ ராயனிங்கு கால்பதித்த கிருஷ்ணகிரி
அதியமான் ஆண்டபூமி தகடூராம் தருமபுரி
மாங்கனியின் சுவையுணர்த்தும் மாநகரம் சேலம்
கறிக்கோழி முட்டைக்குப் பெயருள்ள நாமக்கல்
பழங்கோட்டை சிறைச்சாலை உடனுள்ள வேலூர்
எழில்கொஞ்சும் ஏலகிரி மலைகொண்ட திருப்பத்தூர்
தோல்பொருளும் காலணியும் உருவாக்கும் இராணிப்பேட்டை
அண்ணாமலையான் ஆட்கொண்ட கிரியூராம் திருவண்ணாமலை
செஞ்சிக்கோட்டை புகழின்றும் விஞ்சிநிற்கும் விழுப்புரம்
கல்வராயன் மலைநங்கை கோமுகிஆறுள்ள கள்ளக்குறிச்சி
உச்சிப்பிள்ளை யாருறையும் மலைக்கோட்டை திருச்சி
சோழநாடு சோறுடைத்த நெற்களஞ்சியம் தஞ்சை
ஒய்யாரத் தேரிங்கு நடம்புரியும் திருவாரூர்
தென்னிந்திய மான்செஸ்டர் ஜவுளியாலை கோவை
கொடிகாத்த குமரனை அர்ப்பணித்த திருப்பூர்
கனரக வாகனத்தை உயிரூட்டும் கரூர்
தந்தை பெரியாரை பகலவனாக்கிய ஈரோடு
முத்துலட்சுமி அம்மையைப் பெற்றெடுத்த புதுக்கோட்டை
முத்துக் குளித்தலை கற்றறிந்த துறைமுகத்து தூத்துக்குடி
பேரழகு மயில்நின்று விளையாடும் மயிலாடுதுறை
முக்கடலும் சங்கமிக்கும் அய்யன்புகழ் குமரிமுனை
முத்தமிழை தான்வளர்த்த மீனாட்சிவாழ் மாமதுரை
சுரளிநீர் வீழ்ச்சியிலே தேனிசைக்கும் தேனி
இருட்டுக்கடை அல்வாவால் பெயர்போன திருநெல்வேலி
ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகொண்ட தென்காசி
தமிழ்காந்தி அண்ணாவை பிறப்பித்த காஞ்சிபுரம்
பறவைகள் சரணிக்கும் வேடந்தாங்கல் செங்கல்பட்டு
மருதுபாண்டியர்கள் வாழ்ந்தபூமி சிவகங்கை
கர்மவீரர் காமராசர் பிறந்தநகர் விருதுநகர்
விஞ்ஞானி அப்துல் கலாம் அவதரித்த இராமநாதபுரம்
பூட்டுக்கு பதிலுரைக்கும் சாவியாய் திண்டுக்கல்
மலைகளின் அரசியாய்த் திகழ்கின்ற உதகை
கடலோரச் சங்கீதம் காதிசைக்கும் கடலூர்
காயிதே மில்லத்தை நமக்கீந்த நாகை
மிகப்பெரிய பால்பண்ணை பலர்க்குதவும் பெரம்பலூர்
கங்கைகொண்ட சோழபுரம் ஆட்கொண்ட அரியலூர்
தொழிற்சாலை சூழ்ந்துள்ள திருநகரம் திருவள்ளுர்
இத்தனைமா வட்டங்களின் புகழுரைத்தோம் என்றாலும்
தமிழகத்து உயிர்நாடி என்றழைப்போம் உன்னை
வந்தாரை வாழவைக்கும் மாநகர்தான் சென்னை
தமிழகத்து தலைநகராம் சிங்காரச் சென்னை

சிவா.தேவராசு
ஓசுர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com