தங்க மங்கை பி. டி. உஷா

இந்தியாவின் தங்க மங்கை எனப் புகழப்படும் பி. டி. உஷா புகழ் பெற்ற தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986களில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்னரும் இவருக்கு பின்னரும் வேறு எந்த இந்தியரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியத் தடகளங்களின் ராணி என்றே குறிப்பிடப்படுகிறார்.

பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா என்பதே பி.டி.உஷா என்பதன் விரிவாக்கம் ஆகும்.பய்யோலி என்ற ஊரில் பிறந்ததால் இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் தடகளத்துறையில் தனக்கென தனி இடம்பிடித்துள்ளார்.

 

சர்வதேச சாதனைகள்

முதன்முதலில் சர்வதேச அளவில் 1980ல் பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற ஓபன் நேசனல் மீட் என்ற போட்டியில் கலந்து கொண்டு தடகளப் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களை வென்றார். பின் அதே ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.

ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்தார் உஷா. பின் 1982ல் புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு 100மீ, 200மீ தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1982-ல் சியோலில் நடைபெற்ற உலக ஜூனியர் இன்விட்டேசன் மீட் (தற்போது உலக ஜூனியர் தடகளசாம்பியன் ஷிப்) என்ற போட்டியில் கலந்து கொண்டு 200மீ தடகள ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 100 மீ பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

பின் அடுத்த வருடம் குவைத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்றார். இப்போட்டியில் 400மீ தடகளப் பிரிவில் தங்கம் வென்று புதிய சாதனை செய்தார்.

1984ல் லாஸ்ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில் அரையிறுதியில் முதலாவதாக வந்தவர், இறுதிப் போட்டியில் 1/100 விநாடியில் வெங்கலப்பதக்க வாய்ப்பை இழந்தார். இந்நிகழ்வு 1960-ல் ஒலிம்பிக்கில் மில்காசிங் பதக்க வாய்ப்பை இழந்ததை நினைவுறுத்தியது. ஆனாலும் இந்திய தடகள வரலாற்றில் இந்நிகழ்வு ஒரு முக்கியமானதாகும்.

இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இறுதிசுற்றில் நுழைந்த இந்தியாவின் முதல் தடகள பெண் வீரர் என்ற புகழினை அடைந்தார். அவர் இப்போட்டியில் இலக்கினை 55.42 விநாடிகளில் கடந்தார். ஒலிம்பிக்கில் இதுவே இதுவரை தேசிய சாதனையாக உள்ளது.

1985-ல் இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்றார். அதில் ஐந்து தங்கப்பதக்கங்களும், ஒரு வெண்கலமும் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டிச் சென்றார். இதன் மூலம் தனி ஒரு தடகள வீரர் ஒரே சர்வதேசப் போட்டியில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையும் படைத்தார்.

பின் 1986-ல் சியோலில் நடைபெற்ற 10-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று தடகளப் பிரிவில் 200மீ, 400மீ, 400மீ தடைதாண்டும் ஓட்டம், 4X400 மீ தொடர் ஓட்டம் ஆகியவற்றில் மொத்தம் 4 தங்கமும், ஒரு வெள்ளியும் உள்ளிட்ட 5 பதக்கங்களைக் கைப்பற்றினார்.

1988ல் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் பதக்கம் பெற முடியவில்லை. ஆனாலும் தளராத மனதுடன் 1989ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய ட்ராக் கூட்டமைப்பு போட்டியில் பங்கேற்று 4 தங்கமும், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றார்.

உஷா ஓய்வு பெற எண்ணியிருந்த நிலையில் குறுகிய கால பயிற்சிக்குப் பின் 1990ல் பீஜ்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

 

ஆரம்பக்கல்வி மற்றும் தடகள வீராங்கனையாக திருப்புமுனை

பி.டி.உஷா கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் பய்யோலி என்ற கிராமத்தில் 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 நாள் பைத்தல், லட்சுமி என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

ஆரம்பக் கல்வி கற்கும் போதே தடகளப் போட்டியாளருக்கான திறன் மிக்கவராக உஷா விளங்கினார். பள்ளியில் நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடினார். 1976-ல் கேரள மாநில அரசு பெண்களுக்கான பிரத்யோக விளையாட்டுப் பள்ளியை கண்ணூரில் தொடங்கியது.

உஷா கோழிக்கோடு மாவட்டத்தின் சார்பில் அவ்விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்தார். அப்பள்ளியில் அவரது பயிற்சியாளரான ஓ.எம்.நம்பியாரால் இனம் காணப்பட்டார். இதுவே அவரது வாழ்வின் தடகள வீராங்கனையாக உருவாக திருப்புமுனையாக அமைந்தது. ஓ.எம்.நம்பியாரிடம் பயிற்சி மேற்கொண்ட நாற்பது பெண்களில் குறிப்பிடத்தக்கவர் பி.டி.உஷா.

1979ம் ஆண்டில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டியில் உஷா கலந்து கொண்டு தனிப்பட்ட சாம்பியன்ஷிப் வாங்கியதன் மூலம் தனக்கென்ற அடையாளத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
திருமணம்

1991-ல் உஷா தடகளப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் வி.சீனிவாசன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு உஜ்வால் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்குப் பின் கணவரின் ஊக்கத்தோடு மீண்டும் தடகளப் போட்டிக்குத் திரும்பினார்.

1998-ல் ஜப்பானில் ஆசிய ட்ராக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 200மீ, 400மீ தடகளப் பிரிவில் வெண்கலம் பதக்கங்களைப் பெற்றார். உஷா இப்போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தேசிய சாதனை செய்து தனக்குள் இருந்த தடகளத் திறமையை வெளிப்படுத்தினார்.

2000-ம் ஆண்டு சர்வதேச தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது கோழிக்கோடு அருகே கொய்லாண்டி என்ற இடத்தில் பெண்களுக்கான உஷா தடகளப்பள்ளி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

10-12 வயது வரையுள்ள சிறுமியர் இப்பள்ளியில் பயிற்சி பெறுகின்றனர். இவரது பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவி டின்டுலூகா 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800மீ தடகளப் பிரிவில் அரை இறுதிவரை முன்னேறினார். சீனாவின் வுகான் நகரில் நடைபெற்ற 21 ஆசிய தடகளப் போட்டியில் டின்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விருதுகளும் மரியாதைகளும்

உஷாவின் சீரிய முயற்சி மற்றும் திறமையினைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு இவருக்கு 1983ல் அர்ஜூனா விருதையும், 1985-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த தடகள வீரருக்கான விருதினை 1984,1985,1986,1987, மற்றும் 1989ல் உஷா பெற்றுள்ளார்.

1985, 1986 ஆண்டுகளில் உலகின் சிறந்த தடகள வீரருக்கான விருதினைப் பெற்றுள்ளார். 1985-ல் ஜாகார்தாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

1986ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் சிறந்த தடகள வீரருக்கான அடிடாஸ் தங்க ஷீவினை வென்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் இந்த மில்லினியத்தின் சிறந்த பெண் விளையாட்டு வீரர் என்று உஷாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளது.

கேரள அரசு விளையாட்டு பத்திரிக்கையாளர் விருதினை 1999-ல் உஷாவிற்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. பி.டி.உஷா மொத்தம் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

ஏழ்மை நிறைந்த சூழ்நிலையிலும் கடினமாக உழைத்து விடா முயற்சியுடன் சுமார் 10 ஆண்டு காலம் தடகளத்தில் கோலோச்சிய‌ இந்தியாவின் தங்க மங்கையான பி.டி.உஷாவைப் பாராட்டுவோம்.

– வ.முனீஸ்வரன்