விண்ணை முட்டும் அளவு அறிவியல் வளர்ச்சியை நோக்கி உலகம் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்தகைய அறிவியலுக்கே சவால் விடும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.
உதாரணமாக மருத்துவத்துறையின் வளர்ச்சி என்பது பல கொடிய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் சில நோய்களிடம் தோல்வியடைந்து கொண்டு வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அப்படிப்பட்ட நோய்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க நோயாக தசைச்சிதைவு நோய் இருப்பது வருத்தமளிக்கக் கூடியதாகவே உள்ளது .
தசைச்சிதைவு நோய் என்பது குழந்தை கருவில் உருவாகும்போதே மரபணுக் குறைபாடுகளால் ஏற்படும் நோய். தசை நார்கள் (Muscle fibers) ஒன்றிணைந்து தசைத்தொகுப்பு உண்டாகிறது. அந்த தசை நார்களில் ஏற்படும் புரதக் குறைபாடே இந்நோய்க்கு முக்கிய காரணம்.
இதன் காரணமாக தசை தன் கட்டுப்பாட்டை இழந்து இறுகும் நிலையை அடைவதால் உடல் தனது கட்டுக்கோப்பை இழக்கிறது. பொதுவாக மனித உடலில் இரண்டு வகையான தசைகள் உண்டு.
1. இயங்கு தசைகள் – உதாரணமாக நுரையீரல் மற்றும் இதயத் தசைகள்; இவை மனிதக் கட்டுப்பாடின்றி தாமாகவே இயங்குபவை.
2. இயக்குதசைகள் – உடலிலுள்ள மனிதனால் இயக்கப்படும் மற்ற உடல் தசைகள்.
தசைச்சிதைவு நோயானது முதலில் இயக்கு தசைகளையே பாதிக்கிறது. இந்தியாவில் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே இந்நோய் அதிகமாகத் தாக்குகிறது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .
இந்நோய்ப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை. இந்நோயை மருத்துவ உலகம் ஒன்பது வகையாக வகைப்படுத்தியுள்ளது.
இதில் சோகம் என்னவென்றால் உலகம் முழுவதும் பெரும் பொருட்செலவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னும் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது சோகமான செய்தியே.
தற்போதைய நிலையில் மருத்துவர்கள் உயிர் காக்கும் நிலையை கைவிரிக்கும் அளவுக்கே இந்நோய்க்கான சிகிச்சை முறை உள்ளது. இந்நோய் பாதிப்பினை உடல் இயக்கப் பரிசோதனை மற்றும் திசுச் சோதனைகள் (Muscle biopsy) மூலம் அறியலாம் .
அறிகுறிகள்
நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவது, நடப்பதில் ஓடுவதில் சிரமம், தசைகள் தளர்ந்த நிலை, உட்கார்ந்த நிலையிலிருந்தோ, படுத்த நிலையிலிருந்தோ எழுவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
மேலும் உடல் தோரணையில் (Gait) மாற்றம், கால் நுனி விரல்களால் நடப்பது, தசை மற்றும் மூட்டுகளில் இறுக்கம், கற்றலில் குறைபாடு போன்றவை முக்கிய முதன்மை அறிகுறிகளாகும் .
ஆங்கில மருத்துவ முறைகளில் இந்நோயை தற்போது குணப்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனினும் வலிகளுக்கு மருந்துகள், மூட்டு இறுக்கத்திற்கு அறுவை சிகிச்சைகள், இதயத் தசைகளில் பாதிப்பு ஏற்பட்டால் இதயத் துடிப்பிற்கு இதய மின்னியக்கி (Pacemaker) போன்ற தற்காலிக சிகிச்சைமுறைகள் அளிக்கப்படுகின்றன .
இந்நோயாளிகளை மருத்துவ உலகம் கைவிட்டால் கூட ஒரு ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி உள்ளது. இயன் முறை மருத்துவத்தின் மூலம் இந்நோயாளிகளுக்கு வாழ்நாளைத் தள்ளிப்போடும் சிகிச்சையளிக்க முடியும் என்பது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இந்நோய்க்கான இயன்முறை சிகிச்சையினை சற்று விரிவாகவே பார்ப்போம் .
பிசியோதெரபி சிகிச்சையின் நோக்கம்
தசைச்சிதைவைத் தடுத்தல், தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைத்தல், தசை மற்றும் மூட்டுகளில் இறுக்கத்தைப் போக்குதல், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தினைக் குறைத்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம்.
மேலும் உடல் தோரணையை சரிசெய்தல், ஊனநிலையைத் தவிர்த்தல், சரியான முறையில் உபகரணங்களின் துணைகொண்டு உட்கார, நிற்க, நடக்கவைத்தல் அன்றாட நிகழ்வுகளுக்கு ஏதுவாக நோயாளியைத் தயார் செய்தல் ஆகியவை.
மின்சிகிச்சையின் மூலம் அளிக்கப்படும் மெழுகு ஒத்தடம் (Wax Therapy), அல்ட்ராசவுண்ட் (Ultrasound), வெப்ப சிகிச்சைகள் (Heat Therapy) ஆகியவை தசை, மூட்டு , எலும்பு மற்றும் நரம்பு வலிகளைக் குறைக்கும் .
உடலியக்கப் பயிற்சிகள் தசைச்சிதைவு, மூட்டுகளின் இறுக்கம் இவற்றைக் குறைப்பதுடன் தசையின் கட்டுறுதியை நிலை நிறுத்துவதோடு தசைகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.
பிசியோதெரபி மருத்துவரின் மேற்பார்வையின்படி நிற்கும் நிலைப்பயிற்சி, மண்டியிடுதல், உடல் தோரணையுடன் நடத்தல் மற்றும் தசையை வலுவாக்கும்.
உடலியக்கப் பயிற்சிகளை மேற்கொண்டால் நல்ல பலனைப் பெற முடியும். இது மட்டுமின்றி நீரியல் சிகிச்சை (Hydro Therapy), இதய மற்றும் நுரையீரல் தசைகளுக்கான மூச்சுப்பயிற்சி முக்கியமானதாகும்.
இயங்கு தசைகளான நுரையீரல் மற்றும் இதய தசைகள் பாதிப்படையாமல் இருக்க மூச்சுப் பயிற்சியானது அவசியமாகும்.
ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 40 லிருந்து 50 நிமிடங்கள் கண்டிப்பாக மூச்சுப் பயிற்சியினை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும். இதனால் சுவாசம் எளிதாவதுடன், நுரையீரல் பலம் பெறும்.
உடலியக்கப் பயிற்சிகள் செய்யும் போது கண்டிப்பாக பிஸியோதெரபி மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செய்ய வேண்டும் .
முகத்தில் ஏற்படும் தசை இறுக்கத்தால் பேச்சு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனைப்படி, பேச்சுப் பயிற்சியாளரின் (Speech therapist) அறிவுறுத்தலின்படி, பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் .
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் எனப்படும் தொழில் முறை சிகிச்சையாளரின் பங்கும் இத்தகைய நோயாளிகளுக்கு அவசியம்.
தினசரி வாழ்க்கை முறைக்கு ஏதுவாகவும் தொழில் மற்றும் வீடு சார்ந்த சூழ்நிலைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொழில் முறை சிகிச்சையாளர் மேற்கொள்ள உதவுவார்.
மனோதிடத்துடன் தொடர் பிசியோதெரபி சிகிச்சை மற்றும் உடலியக்கப் பயிற்சியினை மேற்கொண்டால் தசைச்சிதைவு நோய் தாக்கம் குறைவதுடன், உயிரிழப்பிலிருந்து நாட்களை தள்ளிப் போடலாம்.
க.கார்த்திகேயன் அவர்கள்தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர். ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர். விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர். முகவரி:
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065
|
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!