தடாதகையாரின் திருமணப் படலம்

தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது.

மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஐந்தாவது படலம் ஆகும். சோமசுந்தரர் அமைத்த இம்மையில் நன்மை தருவார் ஆலயம் ஏற்பட்ட விதம், இறைவனான சோமசுந்தரர் பாண்டிய நாட்டை ஆண்ட விதம் ஆகியவற்றையும் இப்படலம் குறிப்பிடுகிறது.

இனி உலகத்தின் அன்னையான தடாதகையாரின் திருமணப் படலம் பற்றிப் பார்ப்போம்.

காஞ்சன மாலையின் ஏக்கம்

உலக நாயகியான அங்கயற்கண்ணி அம்மை வளர்ந்தும் இறைவனின் திருவாக்கின்படி பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நீதிவழியில் ஆட்சி செய்தார்.

தடாதகையின் அன்னையான காஞ்சன மாலை தன் மகளின் ஆட்சித்திறனைப் பார்த்து மெய்சிலிர்த்தாள்.

திருமண வயதை தன் மகள் எட்டியதை உணர்ந்த அத்தாய் தன் மகளிடம் “அழகும் அறிவும் உடைய உனக்கு திருமணம் இன்னும் கைகூடவில்லையே” என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள்.

காஞ்சன மாலை கூறியதை கேட்ட தாடதகை “அன்னையே நீங்கள் எண்ணிய எண்ணம் நடக்கும்போதுதான் நடக்கும். அதனால் நீங்கள் வருத்தங்கொள்ள வேண்டாம்.

நான் எட்டு திசைகளிலும் சென்று இப்பூவுலகம் முழுவதும் என் வெற்றியை நாட்டி வருவேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்” என்று கூறி விரைந்து போருக்கு புறப்பட ஆயத்தமானார்.

மீனாட்சி அன்னையின் திக் விசயம்

எட்டு திசைகளையும் வெல்லும் நோக்கில் தம் பெரும் படையினருடன் தடாதகை போருக்கு புறப்பட்டார்.

நால்வகைப் படையினரோடு அமைச்சர்களும், சிற்றரசர்களும் தடாதகையைப் பின் தொடர்ந்தனர்.

அவர் வடநாடு, கீழ்நாடு, மேல்நாடு என எல்லா திசைகளிலும் உள்ள நாடுகளில் தன்னுடைய வெற்றிக் கொடியை நாட்டினார்.

பின் இந்திரலோகத்தை அடைந்தபோது இந்திரன் போர்களம் வராமலேயே நீங்கினான். இந்திரலோகத்தை தனதாக்கியபின் அம்மையார் திருகையிலையை நோக்கிச் சென்றார்.

திருகையாலயத்தில் சிவபிரானை தடாதகை காணல்

திருகையாலயத்தை மீனாட்சி அம்மையார் அடைந்த செய்தியை திருநந்திதேவர் இறைவனான சிவபெருமானிடம் தெரிவித்தார்.

சிவபெருமானும் தம் சிவகணங்களை அனுப்பி தடாதகையுடன் போரிடச் செய்தார். சிவகணங்களுடன் நடந்த போரில் தடாதகை எளிதில் வெற்றி வாகை சூடினார்.

தடாதகையின் வெற்றியை திருநந்திதேவர் கயிலைநாதனிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிவபெருமான் பிநாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.

இறைபரம்பொருளை நேரில் கண்டதும் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே அவர் தன்னுடைய நினைவு வரப்பெற்றவராய் இறைவனின்பால் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்தார்.

இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் அங்கையற்கண்ணியிடம் “அம்மையே சிவபெருமானான இப்பேரழகனே தங்களின் மணவாளன்” என்று கூறினார். அதனைக் கேட்ட மீனாட்சி அம்மையார் பேரன்பு பெருக நின்றார்.

இறைவனார் தடாதகைக்கு அருளுதல்

இறைவனார் “நீ திக்விசயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல்வாயாக” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இறைவனிடம் அன்பினையும், உயிரினையும் வைத்த அங்கயற்கண்ணம்மை தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார்.

மீனாட்சி திருமணத்தை பற்றி அறிவித்தல்

மதுரை திரும்பிய மீனாட்சி தன் அன்னையான காஞ்சன மாலையிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த காஞ்சன மாலை மீனாட்சியின் திருமணச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார்.

மீனாட்சியின் திருமணம் பற்றி செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன.

மீனாட்சியின் திருமணம் பற்றி அறிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளையும், நகரங்களையும் அலங்கரித்தனர். மீனாட்சியின் திருமணம் பற்றியே மதுரை மாநகர் முழுவதும் பேசப்பட்டது.

திருமணத்திற்கான மண்டபம் பொன்னாலும், நவமணிகளாலும் உண்டாக்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை தருவோர் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டன.

திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது.

இறைவனார் மணமகனாக மதுரை நோக்கி புறப்படுதல்

சிவபிரானின் திருமணச்செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையை அடைந்து ‘அர அர’ என்று துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர்.

குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார்.

இறைவனை வரவேற்றல்

இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள்.

காஞ்சன மாலை இறைவனாரிடம் “உலக இயக்கத்திற்கு காரணமானவரே, தாங்கள் தடாதகை பிராட்டியாரை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும்” என்று விண்ணப்பித்தாள்.

இறைவனும் “அவ்வாறே ஆகுக” என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரைநகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் எழுந்தருளினார்.

இறைவனின் அழகினைப் பார்த்த மதுரை மக்கள் சுந்தரனான இந்த ஈஸ்வரனே மீனாட்சியை மணம்புரிய வந்தான் என்று எண்ணினர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்

உலக அன்னையான மீனாட்சிக்கு பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர்.

திருமால் மீனாட்சியை தாரை வார்த்து சொக்கருக்கு கொடுக்க மீனாட்சி சொக்கநாதர் திருமணம் இனிது நிறைவேறியது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

இன்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

இறைவனார் நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கினார். அதில் இன்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபாடு நடத்தினார்.

எல்லோருக்கும் நற்பேற்றினை வழங்கும் இறைவனனான சிவபெருமான் வழிபட்ட இடம் என்ற பெருமையை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலையே சாரும்.

இக்கோவில் தற்போது மதுரையின் நடுவே அமைந்துள்ளது. பின் சிவபிரானார் பாண்டிய நாட்டின் அரசனாக நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தார்.

இப்படலம் கூறும் கருத்து

இறைவனின் மீது கொண்ட பேரன்பானது அவரை சொந்தமாக்கும் என்பதை காஞ்சன மாலை மூலம் இப்படலம் விளக்குகிறது.

முந்தைய படலம் தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

அடுத்த படலம் வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்

– வ.முனீஸ்வரன்

One Reply to “தடாதகையாரின் திருமணப் படலம்”

Comments are closed.