தடுப்பூசிகளின் துணைகொண்டு
துணிவுடன் கொரோனாவை எதிர்கொள்வோம்!
அனுதினமும் அதிகரிக்கும்
அகால மரணங்களுக்கு முடிவில்லை!
ஆர்ப்பரித்தாடும் கொரோனாவின்
அதிபயங்கர இரண்டாம் அலை!
இன்னுயிர் நீத்தோரை
இம்மண்ணில் புதைக்கவும் எரியூட்டவும்
இடுகாட்டிலும் இடமில்லாத
இயல்பறியா துர்பாக்கிய நிலை!
ஈடில்லாதச் சொந்தங்களுக்கு
ஈமச்சடங்குகளை இறுதியாக
ஈகையுடன் செய்ய இயலாது
ஈனப்பிறவிகளான இழிநிலை!
உயிர்களைக் காக்க
உயிர்கொடுத்துப் போராடும்
மருத்துவர்களின்
செவிலியர்களின்
முன்களப் பணியாளர்களின்
உன்னத சேவையினை
உளமாறப் பாராட்ட
உள்ளத்தில் வார்த்தையில்லை!
ஊசலாடும் உயிர்களின்
உயிர்காக்கும் மருத்துவமனைகளில்
படுக்கைகள்
ஆக்சிஜன்
மருந்துகள்
மாத்திரைகள்
போதிய இருப்பிலில்லை!
எங்கு பார்த்தாலும்
வாழ்வா சாவா
மரணப் போராட்டங்கள்
மரண ஓலங்கள்
கொடூர கொரோனா
எல்லோருக்குமே
ஏற்படுத்தியுள்ளது
எண்ணிலடங்கா பாதிப்புகளை!
ஏனிந்த
கொள்ளைநோய் கொரோனாவின்
கோரத்தாண்டவ உச்சபட்ச நிலை!
ஐயகோ!
ஒப்பில்லாத மனிதவினம்
எதிர்கொள்ளும் எண்ணிலடங்கா
வேதனைகளையும் சோதனைகளையும்
பார்க்க-கேட்க-சொல்ல முடியவில்லை!
ஓயுமா ஓயாதா
உன்னத உறவுகளை
கொடூரக் கொரோனாவிற்கு
தொடர் பலிகொடுக்கும் பறிகொடுக்கும்
அந்தோ பரிதாப அவல நிலை!
ஔடதமாய்
மனிதவுயிர்களை
கொரோனாவிலிருந்து பாதுகாக்க
அல்லும்-பகலும் அயராதுழைத்து
அரிய தடுப்பூசிகளை
அகிலத்திற்கு கொடையாய் அளித்திட்ட
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின்
அளவில்லாத திறமைக்கு
வானமே எல்லை!
எஃகு போல் வலிமையுடன்
எமக் கொரோனாவை
எதிர்த்துப் போராடி
கொரோனா போரில்
மாண்டு விடாமல்
மீண்டு வரவேண்டி
மதிநுட்பத்தின் வழிநடந்து
மரணத்திலிருந்து மனிதவினத்தை
மீட்கும் கொரோனா தடுப்பூசிகளை
துணிந்து செலுத்திக்கொண்டு
துணிவுடன் கொரோனாவை
எதிர்கொள்வதைத் தவிர
எந்தவொரு மாற்று உபாயமும்
மனிதவினத்திற்கில்லை!
கவிஞர் ராசி. பாஸ்கர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!