தட்டான் பூச்சிகளின் தேவதை என்று சூழியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் இடத்தில் தட்டான் பூச்சியைப் பார்த்தால், அவ்விடத்தில் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் வாழும் இப்பூமியில் நம்முடைய சூழல் அமைப்பு அழகானது மற்றும் அவசியமானதும் கூட.
சூழியல் என்பது ஒரு உயிரினத்தின் வாழிடத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரற்ற பொருட்களை உள்ளடக்கியது.
எந்த ஒரு உயிரினமும் சூழலியலில் உள்ள மற்றவற்றுடன் தொடர்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
ஆதலால் மனிதனின் செயல்பாடுகளினால் சூழலில் உள்ள ஏதேனும் ஓர் உயிரினம் எண்ணிக்கையில் குறையும் போதோ, முற்றிலும் அழிய நேரும் போதோ, அது சூழியலுக்கும் அதில் உள்ள ஏனைய உயிரினங்களுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பினை விளைவிக்கிறது.
எடுத்துக்காட்டாக இன்றைக்கு தவளைகள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
தவளைகள் குறைவதற்கு முக்கிய காரணம், மனித செயல்பாடுகளால் அவற்றின் வாழிடமான குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அழிக்கப்படுவதும், நீர் மாசுபாடு அடைவதும் ஆகும்.
தவளை கொசுக்களை உணவாக உண்ணும். தவளை குறைந்து விட்டதால் கொசுக்கள் பெருகிவிட்டன.
கொசுக்களின் பெருக்கத்தினால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து, மனித உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கின்றன.
தவளை சூழியலின்படி மனிதனுக்கு அவசியமான ஒன்றாக இன்றைக்கு உள்ளது. அவ்வாறே சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த தட்டான் பூச்சியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தட்டான் பூச்சி
தட்டான் பூச்சி நம்மூரில் பொதுவாக மழை காலங்களில் காணப்படும். இது தும்பி என்றும் அழைக்கப்படுகிறது.
‘தட்டான் எட்டப் பறந்தால் கிட்ட மழை; கிட்டப் பறந்தால் எட்ட மழை’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதில் எட்ட என்பது உயரமாக, கிட்ட என்பது தாழ்வாக என்பதைக் குறிக்கும். அதாவது தட்டான் தாழ்வாகப் பறந்தால், அருகிலே மழை பெய்யும்; உயரமாகப் பறந்தால் சில கிலோமீட்டர் தள்ளி மழை பெய்யும்.
இது மற்ற பூச்சிகளைப் போல மனிதர்களைக் கொட்டுவதோ, கடிப்பதோ, நோய்களைப் பரப்புவதோ இல்லை.
தட்டானில் சுமார் 7000 இனங்கள் உலகெங்கும் காணப்படுகின்றன. இது உலகில் அன்டார்டிக்காவைத் தவிர எல்லா கண்டங்களிலும் வாழுகிறது.
இவை சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றியவை.
இது ஓடோனாட்டா என்னும் ‘பற்கள் உள்ள’ பூச்சியினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தட்டானின் உடல் அமைப்பு
தட்டானின் உடலானது கண்ணைக் கவரும் விதத்தில் மெல்லிய கம்பிபோல் நீண்டிருக்கும். இதனுடைய உடலினை தலைப்பகுதி, நெஞ்சுப்பகுதி, நீண்ட வயிற்றுப்பகுதி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
இதனுடைய தலையின் பெரும்பான்மையான இடத்தினை கண்கள் கொண்டுள்ளன. கண்களைத் தவிர வாயும், இரண்டு உணர்விழைகளும் தலையில் அமைந்துள்ளன.
தட்டானின் கண்கள் கூட்டுக்கண்களாகும். இக்கூட்டுக்கண்களில் சுமார் 28,000 லென்சுகள் காணப்படுகின்றன. ஆகவே இவற்றால் 360 டிகிரியிலும் பார்வையைச் செலுத்த இயலும். இந்த அபார பார்வைத்திறனே இதனை திறமையான வேட்டையாளியாக மாற்றி உள்ளது.
இப்பூச்சியால் மனிதனால் கண்டு உணர இயலாத புறஊதாக்கதிர்களையும் உணர முடியும். இப்பூச்சி தன்னுடைய மூளையின் 80 சதவீதத்தை அனைத்து காட்சித் தகவல்களையும் செயலாக்கம் செய்யப் பயன்படுத்துகிறது.
இதனுடைய நெஞ்சுப்பகுதியில் வலைப்பின்னல் போன்ற ஒளி ஊடுருவும் நான்கு இறக்கைகளும், நுண்ணிய மயிர்கள் கொண்ட ஆறு கால்களும் இணைந்துள்ளன.
தட்டானால் நான்கு இறக்கைகளையும் தனித்தனியே அசைக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
இப்பூச்சிக்கு கீழிறக்கை மேலிறக்கையைவிட அகலமாகக் காணப்படும். இதனால் இறக்கைகளை உடலோடு மடக்கி வைக்க இயலாது.
இப்பூச்சியால் இறக்கைகளை மேலும் கீழும் அசைக்கவும், முன்னும் பின்னும் சுழற்றவும் முடியும்.
எனவே தட்டானால் மேல் நோக்கி, கீழ் நோக்கி, பின்னோக்கி, முன்னோக்கி பறக்கவும், பறந்தபடி ஒரே இடத்தில் நிற்கவும் முடியும். அதே போல் இப்பூச்சியால் வேகமாகவோ, மெதுவாகவோ திடீரென்று திரும்ப இயலும்.
இது மணிக்கு 30 கிமீ வேகத்தில் பறக்கிறது. பூச்சியினங்களில் அதிவேகமாகப் பறக்கும் திறனுடையது என்ற பெருமை இப்பூச்சியையே சாரும்.
இப்பூச்சி தன்னுடைய ஆறு கால்களையும் கூடை போல் பயன்படுத்தி எதிரிகளை அபாரமாக வேட்டையாடுகிறது. ஆறு கால்களைக் கொண்டிருந்தபோதிலும் இப்பூச்சியால் நடக்க இயலாது.
இதனுடைய நீண்ட கம்பி போன்ற வயிற்றுப்பகுதியில் கழிவுவாய், கொடுக்கு, இனப்பெருக்க உறுப்பு ஆகியவை காணப்படுகின்றன.
இப்பூச்சியானது சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் காணப்படுகிறது.
தட்டான் பூச்சியின் இயல்புகள்
தட்டான் நீரிலும் நிலத்திலும் வாழும் வகையைச் சார்ந்தது. இது லார்வா பருவத்தில் தண்ணீரிலும், வளர்ந்த முழுப்பூச்சி பருவத்தில் நிலத்திலும் வாழும் இயல்புடையது.
தட்டானானது தன் வாழ்நாளில் முட்டை, லார்வா, வளர்ந்த பூச்சி என்னும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
வளர்ந்த தட்டானது நன்னீரின் மேற்பரப்பிலோ அல்லது நீர்த்தாவரங்களிலோ சுமார் 1,500 முட்டைகளை இடுகிறது. இப்பூச்சியின் பெரும்பான்மையான இனங்களின் முட்டைகள் 5-15 நாட்களில் பொரித்து விடுகின்றன. குளிர் பிரதேசங்களில் இவற்றின் முட்டைகள் பொரிய 7 மாதங்கள் வரை ஆகின்றன.
அம்முட்டைகளிலிந்து லார்வாக்கள் வெளி வந்ததும் அவை நீருக்கு அடியில் சென்று வாழ்கின்றன. தட்டானின் லார்வாப் பருவம், அதனுடைய இனத்தைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து வருடங்களாக இருக்கிறது.
லார்வா பருவத்தில் இருக்கும் தட்டான் 15 முதல் 17 முறை தன்னுடைய தோலினை உரிக்கிறது. தோலுரிப்பு முழுவதும் முடிந்ததும் அடிவயிற்றுப் பகுதி பிளந்து நீண்ட குழல் போன்ற பின்உறுப்பு நீட்சி அடைவதோடு இறக்கைகள் வளர்ந்து முழுப்பூச்சியாக தண்ணீருக்கு வெளியே வந்து பறக்கிறது.
இப்பூச்சி வாழ்நாளின் பெரும் பகுதியை லார்வா நிலையிலேயே கழிக்கிறது. லார்வா நிலையில் இருக்கும்போது இது நீரில் உள்ள கொசுக்களின் முட்டைகள், லார்வாக்கள், தன்னைவிட சிறிதாக உள்ள பூச்சிகள், புழுக்கள், மீன்கள் ஆகியவற்றை உணவாக்குகிறது.
வளர்ந்த பூச்சியானது பறந்து கொண்டே சிறுபூச்சிகள், கொசுக்கள், ஈக்கள், பட்டாம் பூச்சிகள் ஆகியவற்றை உண்ணுகிறது.
இது ஒருநாளைக்கு முப்பது முதல் நூறு வரை எண்ணிக்கை கொண்ட கொசுக்களை உண்ணுகிறது.
இப்பூச்சியின் வேட்டை முயற்சியில் 95 சதவீதம் வரை வெற்றி வாய்ப்பினைப் பெறுகிறது. வளர்ந்த தட்டான்கள் இனத்தைப் பொறுத்து சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை மட்டுமே உயிர் வாழ்கின்றன.
தட்டானின் சூழியல் முக்கியத்துவம்
தட்டானது லார்வாப் பருவத்தில் நீரில் உள்ள கொசுக்களின் முட்டைகளை உணவாக்குகிறது. வளர்ந்த நிலையில் கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் பூச்சிகளை உண்ணுகிறது.
இது மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்கும் இயற்கை பூச்சிகொல்லியாக செயல்பட்டு பூச்சி மாசுபாட்டைக் குறைக்கிறது.
மேலும் இப்பூச்சி கொசுக்கள், ஈக்கள் உள்ளிட்ட கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்கும் செயற்கை பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டினையும் குறைக்கிறது.
இதனால் நம்முடைய பொருளாதாரம் மிச்சமாவதோடு, செயற்கை பூச்சி கொல்லிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டினால் உண்டாகும் சுற்றுப்புறசூழல் சீர்கேடுகளும் குறைகின்றன.
வளமான, சுத்தமான நீர்வாழிடத்திற்கான அறிகுறியாக இப்பூச்சி சூழியலாளர்களால் அறியப்படுகிறது. ஏனெனில் முட்டை, லார்வா, வளர்ந்த நிலை என இப்பூசியின் எல்லா நிலையிலும் இதற்கு நன்னீர் வாழிடமே தேவை.
ஆகவே தட்டான் பூச்சிகளை ஓரிடத்தில் அதிகளவு காண நேர்ந்தால், அவ்விடத்தில் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தட்டான் பூச்சியானது கொசு, ஈ, சிறுபூச்சிகளை உணவாகக் கொள்கிறது. மேலும் பறவைகள் மற்றும் சிறுவிலங்குகளுக்கு இது உணவாகவும் பயன்படுகிறது. எனவே இப்பூச்சி உணவுச் சங்கிலியில் நடுஇடத்தைப் பெறுகிறது.
இதனுடைய அழிவால் கொசு, ஈ உள்ளிட்ட சிறுபூச்சிகளின் பெருக்கத்திற்கும், மேனிலை விலங்குகளின் உணவுத் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.
தட்டானில் பொறியாளர்களின் ஆராய்ச்சி
தட்டானினால் தன்னுடைய நான்கு இறக்கைகளையும் தனித்தனி அசைக்கவும், கட்டுப்படுத்தவும், மேலும் கீழும் அசைக்கவும், முன்னும் பின்னும் சுழற்றவும் முடியும்.
எனவே இப்பூச்சியால் மேல்நோக்கி, கீழ்நோக்கி, பின்னோக்கி, முன்னோக்கி பறக்கவும், பறந்தபடி ஒரே இடத்தில் நிற்கவும் முடியும். அதே போல் இப்பூச்சியால் வேகமாகவோ, மெதுவாகவோ திடீரென்று திரும்ப இயலும்.
பறக்கும் தன்மையில் சிறப்புகளைக் கொண்டுள்ள இப்பூச்சியின் பறக்கும் திறன் பொறியாளர்களைக் கவர்ந்திழுக்கிறது.
பொறியாளர்கள் இப்பூச்சியின் பறக்கும் திறனை முன்மாதிரியாகக் கொண்டு பறக்கும் சிறப்பியல்புகளை உடைய ரோபோக்கள் மற்றும் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வரலாற்றில் தட்டானின் முக்கியத்துவம்
ஜப்பான் நாட்டில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ஜப்பானின் புராண கால அரசனான ஜின்மு என்பவனை கொசு ஒன்று கடித்துவிட்டது. ஆந்தக் கொசுவை தட்டான் பூச்சி ஒன்று கொன்று சாப்பிட்டுவிட்டது.
மனிதர்களைக் கொசுவிடமிருந்து காப்பாற்றுவதால், அரசனும் தட்டானும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டனர் என்கிறது அக்கதை.
அன்றிலிருந்து ஜப்பானிய மக்கள் இதனை மகிழ்ச்சி,தைரியம், வலிமை ஆகியவற்றின் அடையாளமாகக் கொண்டாடுகின்றனர்.
சில பூர்வீக அமெரிக்க பழங்குடியினர்கள் இப்பூச்சியை விரைவு மற்றும் செயல்பாட்டின் அடையாளமாக கருதினர். நவாஜோ மக்கள் இதனை தூய்மையின் அடையாளமாகப் பயன்படுத்தினர்.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இப்பூச்சியைப் பிடித்து வறுத்து நொறுக்குத் தீனியாக உண்கின்றனர்.
இன்னும் சில இடங்களில் இப்பூச்சி தலை மற்றும் கைகளில் அமர்வதை அதிர்ஷ்டாகக் கருதுகின்றனர்.
தட்டானின் இன்றைய நிலை
இன்றைக்கு மனிதனுடைய செயல்பாடுகளால் பெரும்பான்மையான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் அழிக்கபட்டுவிட்டன. மேலும் இருக்கின்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மாசுபாடு அடைந்துள்ளது.
இதனால் நன்னீரை வாழிடமாகக் கொண்ட தட்டான் பூச்சியின் வாழ்க்கை இன்றைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இயற்கை பூச்சிகொல்லியான தட்டான் பூச்சிகளின் அழிவால் கொசு மற்றும் ஈக்களின் ஆதிக்கம் அதிகரிக்கவே செய்து, புதவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகிறது.
எனவே நீர்நிலைகளுக்கு கேடு விளைவிக்கும் மனித செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, தட்டான் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வைச் செழிக்கச் செய்து, புவியின் உயிர்சூழலை மேம்படுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இனிமேல் எங்கேனும் தட்டான் பூச்சியைப் பார்த்தால் அவ்விடத்தில் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது என்பதை அறிந்து கொள்வீர்கள் தானே?
தங்களின் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.