தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.
அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விடவேண்டும்.
இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.
அந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
நாளடைவில் அந்த தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.
ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டுவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.
தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.
எனினும் அரச தண்டனைக்கு பயந்து அவன் தன்னுடைய தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.
மலைப்பகுதியை அடைந்தபோது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.
சாம்பல் கயிறு
ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.
சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வரவேண்டும் என்பதே அப்போட்டியாகும்.
போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.
அரசனின் போட்டி பற்றி அந்த மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.
போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.
மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.
அடி எது? நுனி எது?
ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.
அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.
மரக்கொம்பை வீட்டுக்கு எடுத்துவந்த மகன் தந்தையிடம் காண்பித்து அரசனின் கேள்வியைக் கேட்டான்.
தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்கு செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்
அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.
அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினை தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.
வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.
அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
தந்தை அவனிடம் “மேளத்திற்கு தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.
அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.
இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
அனுபவம் தந்த பதில்கள்
“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்கு தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.
இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.
உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.
அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசி காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதை தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.
மறுமொழி இடவும்