தட்டை தீபாவளிக்கு செய்யப்படும் பலகாரங்களில் ஒன்று. தீபாவளிக்கு லட்டு, பூந்தி, ஜிலேபி என பல இனிப்பு வகைளைச் செய்தாலும் கார வகையில் மிக்சருக்கு அடுத்தபடியாக தட்டை செய்யப்படுகிறது.
இந்த தீபாவளிக்கான இனிதுவின் பலகாரம் தட்டை செய்வது எப்படி? என்பதே. வாருங்கள் சுவையாக எளிமையாக வீட்டில் தட்டை செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லிப் புழுங்கல் அரிசி – 400 கிராம்
உளுந்தம் பருப்பு – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
எள் – 5 மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல் – 8 எண்ணம்
பெருங்காயப் பொடி – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் (அ) நெய் – 3 மேசைக் கரண்டி
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
மிளகாய் வற்றலில் தண்ணீரை வற்றல் மூழ்குமளவுக்கு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
புழுங்கல் அரிசியை கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். புழுங்கல் அரிசியை அரைக்கும் போது ஊற வைத்த வற்றலை கிள்ளிப் போட்டு அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.

வெறும் வாணலியில் உளுந்தம் பருப்பைப் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.
பின் அதனை மிக்சியில் அடித்து சலித்துக் கொள்ளவும்.

எள்ளை வெறும் கடாயில் போட்டு எள் பொரியும் வரை வறுக்கவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவு, வறுத்து சலித்து வைத்துள்ள உளுந்தம் மாவு, ஊறவைத்துள்ள கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வறுத்த எள், பெருங்காயப் பொடி, வெண்ணெய் (அ) நெய், உப்பு ஆகியவற்றை போட்டு ஒரு சேரக் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.

பின் அதிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

சிறிய உருண்டையை எண்ணெய் தடவிய பேப்பரில் வைத்து தட்டையாக கையினால் விரித்து விடவும். இவ்வாறே எல்லா சிறு உருண்டைகளையும் தட்டைகளாக விரித்து விடவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போடவும்.

ஒரு புறம் வெந்ததும் கரண்டியால் திருப்பிவிட்டு எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும்.
கர கர மொறு மொறு தட்டை தயார்.

சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து விடவும். இதனை ஒரு மாதம் வரைகூட வைத்திருந்து உபயோகிக்கலாம்.
இதனை இந்த தீபாவளிக்குச் செய்து அசத்துங்கள்.
குறிப்பு
இட்லி அரிசியை அரைப்பதற்குப் பதில் நனைய வைத்து இடித்து சலித்து அதனைக் கொண்டு தட்டைக்கான மாவு தயார் செய்யலாம்.
வெண்ணெய் (அ) நெய்க்கு பதிலாக சமையல் எண்ணெயை ஆவிவரும்வரை சூடேற்றி தட்டைக்கான மாவில் சேர்க்கலாம்.
தட்டையை விரிக்கும் போது ஒரே சீராக விரிக்கவும். அப்போதுதான் அது ஒருசேர வெந்து சுவையாக இருக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!