தண்டால் பயிற்சி – தலைசிறந்த பயிற்சி

தண்டால் பயிற்சி பற்றிய இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

தண்டால் பயிற்சி இந்திய நாட்டு தேகப் பயிற்சிகளிலே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

எந்தவித சாதனத்தின் துணை இல்லாமலும், எந்த இடத்திலும், எந்த வயதினராக இருந்தாலும் விருப்பத்துடன் ஈடுபட்டுச் செய்யலாம்.

அவ்வாறு செய்யும்பொழுது, இடரினைத் தராமல் ஏற்றத்தைத் தருகின்ற தன்மையில் அமைந்திருக்கிறது.

இந்தியர்களின் வாழ்க்கை நிலையை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்க விரும்புகின்ற ஆசிரியர்கள், எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்பதாகக் கூறுவார்கள்.

அத்தகைய அற்புத வாழ்க்கை முறையை அளிப்பது போலவே தண்டால் அமைந்திருக்கிறது. எளிய பயிற்சி, ஆனால் உயர்ந்த பயனைத் தருகிறது என்றே நாம் கூறலாம்.

தண்ட் (Dand) என்ற சொல்லைத் தான் நாம் தமிழில் தண்டால் என்று கூறுகிறோம்.

தண்டால் என்று கூறப்படும் சொல்லுக்கு புஜம் என்று பொருள் உண்டு.

அதாவது முன்கை (Fore Hand) மேல்கை (Upper Hand) என்று கையைப் பிரித்துக் காட்டுவார்களே, அதில் தண்ட் என்ற சொல்லானது மேல்கையைக் குறிக்கிறது.

தண்டால் வகையின் பயிற்சி முறைகள் எல்லாம் சிறப்பாக மேல்கைத்தசைப் பகுதிகளுக்கே போய்ச் சேருவதால்தான் இதற்கு இவ்வாறு பெயர் சூட்டியிருக்கின்றார்கள்.

இதற்கு ஜோர் (Jor) என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஜோர் என்றால் வலிமை என்று பொருள்படும்.

தண்டால் பயிற்சி  மிகக்குறைந்த நேரத்திற்குள், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் இயக்கி உரிய பயன்களைக் கொடுத்து விடுகிறது.

மேல் நாட்டாளர்கள் கூட தண்டாலின் மகிமையையும் மாட்சியையும் புரிந்து கொண்டு, தங்களுடைய உடற்பயிற்சி முறைகளில் தண்டால் பயிற்சியையும் இசைவுற இணைத்துக் கொண்டார்கள்.

தண்டால் பயிற்சியானது. உடலிலுள்ள தசைநார்கள் அனைத்திற்கும் சிறந்த வலிமையை வழங்குகின்றது. அத்துடன், நல்ல வலிமையுள்ள இருதயத்தையும் ஆக்கித் தருகின்றது.

‘தண்டால் பயிற்சி செய்வதால் இருதயத்திற்கு அதிக சுமையாகி விடுகின்றது. அதனால் இதயம் பாதிக்கப்படுகின்றது. பலவீனப்படுத்தப் படுகின்றது. என்றெல்லாம் தவறான கருத்துக்களைப் பரப்பி திசை திருப்பி விடுகின்ற தீயமனங் கொண்டவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.

இது தண்டாலைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவர்கள் கூறுகின்ற விதண்டாவாதமாகும். இவர்கள் தண்டால் செய்யும் எண்ணிக்கையை விவரம் புரியாமல் அதிகப்படுத்திக் கொள்பவர்கள்.

உடனே உடலுக்கு வலிமை வேண்டும் என்று திடீர் ஆசையாலும், தீராத வெறியினாலும், சிலர் அதிக நேரம் அதிக எண்ணிக்கையில் தண்டால் செய்கின்ற தவறுகளினால் ஏற்படும் கோளாறாகும்.

அதிகம் சாப்பிடுவதும் ஆபத்து என்கிற பொழுது அதிகப் பயிற்சியும் உடம்புக்கு ஆகாது என்பதையும் உணர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

தண்டால் பயிற்சியின் வகைகள்

1. நேர்தண்டால் (Ordinary Dand)

2. தத்தும் தண்டால் (Rog Dand)

3. முறுக்குந் தண்டால் (Twisting Dand)

4. ஒற்றைக்கால் தண்டால் (Alternate leg Dand)

5. சக்கரத் தண்டால் (Circle Dand)

6. பாம்புத் தண்டால் (Snake Dand)

7. நேர் எதிர் தண்டால் (Reverse Dand)

8. தேள் தண்டால் (Scorpion Dand)

9. தாவும் தண்டால் (Leaping Dand)

10. நமஸ்கார் தண்டால் (Namaskar Dand)

11. கைதட்டித் தத்தும் தண்டால் (Frog Dand with Clap- ping of Hands)

12. கைதட்டித் தாவும் தண்டால் (Leaping Dand with Clapping)

தண்டாலைப் புரிந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதால், கீழே காணும் குறிப்புக்களை வாசகர்கள் நன்கு மனதில் முதலில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

தண்டால் பயிற்சி செய்ய குறிப்புகள்

1. தண்டால் பயிற்சிகளைப் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்ய வேண்டும்.

2. தவறின்றி செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக கண்ணாடி முன்னே நின்றுகொண்டு செய்வது சிறப்புடையதாக அமையும்.

3. ஆரம்பத்திலேயே அதிக எண்ணிக்கையில் தண்டாலைச் செய்யக்கூடாது. நாளுக்கு நாள் கொஞ்சங்கொஞ்சமாக அதிகப் படுத்திக்கொண்டு போவது அறிவுடமையாகும்.

4. பயிற்சிக்கு முதலில் உடலைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். உடலை வருத்தியும், கஷ்டப் படுத்தியும் தண்டாலை செய்யக்கூடாது.

5. தண்டால் செய்யும்பொழுது, கைகளையும், கால்களையும் எவ்வளவு தூரம் இடைவெளியில் வைத்திருக்க வேண்டும் என்பதனை அறிந்து, அதற்கேற்ப வைத்து பழகவும்.

6. பயிற்சி முழுமையிலும், சுவாசத்தை ஒழுங்குற செய்யும் முறையை அனுசரித்துக் கொள்ளவும்.

7. தேவைக்கு மேலே தண்டால் பயிற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி விடக்கூடாது. தேவைக்கு மேல் என்பது பயிற்சி செய்யாமல் இருக்கின்ற நிலையைவிட கொடுமை பயப்பதாகும்.

8. வ‌யதாக ஆக, அதாவது 40 வயதுக்கு மேல், தண்டாலின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இனி, தண்டால் பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.