தண்டுக்கீரை பொரியல் சுவையான மற்றும் சத்தான உணவு. மேலும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவும் ஆகும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, தண்டுக் கீரை என கீரைகளில் பலவகைகள் இருக்கின்றன. இக்கீரைகளை மசியல் செய்தும், பொரித்தும் உண்ணலாம்.
அவ்வாறு பொரித்து உண்ணக் கூடிய கீரை வகைகளுள் அதிக ருசியைத் தருவது தண்டுக்கீரை ஆகும்.
தண்டுக்கீரையில் சிவப்பு தண்டுக் கீரை, பச்சைத் தண்டு கீரை என இரு வகை உண்டு. தண்டுக்கீரையைக் கொண்டு செய்யும் கீரைப் பொரியல் பார்ப்பதற்கு அழகாகவும், சுவையாகவும் இருக்கும்.
இனி சுவையான தண்டுக்கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்டுக்கீரை – 1 கட்டு
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
மிளகாய் வத்தல் – 2 எண்ணம்
சின்ன வெங்காயம் – 4 எண்ணம்
சீரகம் – 2 ஸ்பூன்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தண்டுக் கீரைச் செடியின் அடிப்பாகத்தை சுண்டு விரல் அளவுக்கு நறுக்கி விடவும். மீதி உள்ளவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் கீரையை சிறிது மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். கீரையில் உள்ள மண் நீங்கி விடும். கீரையை வடிதட்டில் வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல் சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.
பின் அதனுடன் தண்டுக் கீரை, சீரகம், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு துருவிய தேங்காயைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான தண்டுக் கீரை பொரியல் தயார்.
இதனை சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
கீரையை நிறைய நேரம் வதக்கக் கூடாது. ஏனெனில் கீரையில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். எனவே கீரை வெந்ததை அவ்வப்போது எடுத்து நசுக்கி உறுதி செய்யவும்.
–ஜான்சிராணி வேலாயுதம்