தண்ணீரின் மருத்துவ மகத்துவம்

தண்ணீரின் மருத்துவ மகத்துவம்

கடுமையான காய்ச்சலின் போது உடல் அனலாகக் கொதிக்கும். தண்ணீரை இலேசாக சூடு செய்து பஞ்சை அதில் நனைத்து உடல் முழுக்க தேய்த்தால் காய்ச்சல் வேகம் குறையும். பஞ்சினால் தேய்க்கப்பட்ட தண்ணீர் தானாகவே ஆவியாகிக் காய வேண்டும்.

சில சமயம் எச்சிலை விழுங்கும்போதுகூட தொண்டையில் வலிக்கும். உணவை விழுங்க முடியாது. அந்த அளவுக்குத் தொண்டை தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும்.

அரை மேசைக்கரண்டி உப்பை வெந்நீரில் கலந்து மூன்று நான்கு தடவைகள் வாயில் ஊற்றி கொப்பளிக்க (தொண்டையில் படும்படி அண்ணாந்து கொப்பளிக்க) தொண்டை வலி படிப்படியாகக் குறையும்.

உடலில் ஏற்படும் தீக்காயம் எரிச்சல் அடங்க தீக்காயம் ஏற்பட்ட பாகத்தை குழாயில் வரும் குளிர்ந்த நீரில் காண்பித்தால் தோலிலுள்ள ஆழமான திசுக்கள் பாதிக்காது.

மலச்சிக்கலை நீக்குவதில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் நாம் தினம் அருந்தினால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே இல்லை.

வயிற்றுப்போக்கு அதிகம் ஏற்படும்பட்சத்தில் உடலிலுள்ள நீர் முழுவதும் வெளியாகி விடும். மிகுந்த களைப்பும், சோர்வும் ஏற்படும். இழந்த நீரை ஈடுசெய்ய தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்க மீண்டும் சக்தி பெறலாம்.

சிறுநீர் கழிக்கும் சமயம் ஏற்படும் எரிச்சல் நிற்க அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தொற்று ஏதுமிருப்பின் தண்ணீர் வெளியேற்றி விடும்.

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பார்கள். அதைவிடச் சிறந்தது ஐஸ் கட்டி ஒத்தடம். இதனால் வீக்கம் தடுக்கப்பட்டு வலியும் குறையும்.

நிலத்தில் நடக்கும் சமயம் 450 கலோரிகள் எரிக்கப்படுகிறது. நிலத்தில் நடக்கும் சமயம் எரிக்கப்படும் கலோரிகளைவிட இருமடங்கு நீரில் நடக்கும் சமயம் கலோரிகள் எரிக்கப்படுகிறது. மேலும் காற்றைவிட 12 மடங்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்டது நீர்.

மார்புச் சளியால் அவதிப்படும் சமயம் கொஞ்சமாக உறிஞ்சப்படும் வெந்நீர் சளித் தொல்லையைக் கட்டுப்படுத்தும்.

எனிமா மூலம் மலக்குடல் சுத்தம் செய்யப்பட்டு மலச்சிக்கல் நீக்கப்படுகிறது. எனிமா-வில் தண்ணீர் பங்கு அதிகம்.

மூக்கில் ரத்தம் வடிதலைத் தடுக்க குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்து இதமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். கழுத்தின் பின்புறம் ஏற்படும் வலிக்கும் இந்த ஒத்தடம் கை கொடுக்கும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998