தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி

அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன.

இன்னொரு மூலையில் உழுது கிடந்த மண்ணிலிருந்த மண்ணாங்கட்டி ஒன்று துள்ளித் துள்ளி ஓடியது. அங்கிருந்த காய் கறிச் செடிகளிடம் சென்று வம்பிழுப்பதும் கேலி செய்வதுமாக இருந்தது.

ஒரு நாள் அந்த மண்ணாங்கட்டி அங்கிருந்த வாழை மரத்தின் மீது ஏறத்துவங்கியது. வாழை ஒர் இலையில் அதனைப் பிடித்து தூக்கி அங்கிருந்த நீர் நிறைந்த வாய்க்காலில் வீசியது.
வாய்க்கால் நீரோ தன் மீது பொத்தென விழுந்த மண்ணாங்கட்டியைக் கரைக்கப் பார்த்தது.

மெதுவாக உயிர் பெற்ற மண்ணாங்கட்டி நீரில் மிதந்து வந்து ஒரு இலைச் சருகின் உதவியினால் அதன் மீதேறி நீரிடம் இருந்து தப்பித்தது.

தன்னை அழிக்கப்பார்த்த தண்ணீரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற கோபத்துடன் சென்ற மண்ணாங்கட்டி அங்கு ஓரிடத்தில் மண்பாண்டங்கள் செய்யும் ஒருவரை அடைந்தது.

“ஐயா ஐயா நல்லவரே!

ஆற்றல் கொண்ட பெரியவரே!;

மண்ணாய் இருக்கும் என் உடலை

கல் போல் ஆக்கித் தருவீரா?

கல்போல் என்னுடல் ஆனபின்னே

தண்ணீரை ஒரு கை பார்த்திடுவேன்” என்றது.

மண்பாண்டங்கள் செய்யும் அவரும் அந்த மண்ணாங்கட்டியை பானையாக மாற்றினார்.

 

பானையான மண்ணாங்கட்டி விரைந்து சென்று விவசாயியின் வீட்டை அடைந்தது. அவர் மனைவியை அழைத்தது.

“தோட்டக்காரம்மா தோட்டக்காரம்மா!

உன் தோப்பின் மண்ணாங்கட்டி நான்

நாட்டமுடனே நல்லதொரு

பானையாய் மாறி வந்துள்ளேன்

என்னை எடுத்துச் சென்றேதான்

நீரை நிரப்பி வாருங்கள்

என்னை அழிக்க பார்த்த அதை

அழுத்தி அழுத்தி வைத்திருப்பேன்” என்றது.

அதன்படி விவசாயினுடைய‌ மனைவியும் பானை நிறைய தண்ணீரை நிரப்பி மண்ணாங்கட்டியின் ஆசையை நிறைவேற்றினார்.

 

ஒவ்வொரு முறையும் மண்பானை நீருக்குள் மூழ்கும்போதும் “கடமுட கடமுட” என தண்ணீர் அழும் குரலை இன்றும் நாம் கேட்கலாம். மண்ணாங்கட்டியான மண் பானையோ அந்த தண்ணீரை அழுத்தி அழுத்தி குளிரும் வரை அழுத்தி அழ வைக்கின்றது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.