பானையிலே உள்ள தண்ணீர் தன் கதையைச் சொல்லுது –அது
பாதையிலே போகும் நம்மை நின்று கேட்க சொல்லுது
வானிலிருந்து பிறந்தவனாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுது –அந்த
வானம் தன்னைச் சுமந்ததாலே தாயைப் போலே என்றது
தானாக அலையடிக்கும் கடலை தந்தை என்றது –அதை
தகித்து ஆவியாக்குகின்ற ஆதவனை தாய்மாமன் என்றது
கானகத்து மரங்கள் தந்த காற்றை காதலன் போல் என்றது –அந்த
காற்று தொட்டதாலே தான் கருக் கொண்டதாக சொன்னது
நாணமின்றி தன்கதையை சொல்லுகின்ற நீருமே –அங்கு
நம்மிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டுவிட்டு சிரித்தது
ஆணவத்தால் உலகினையே அடிமையாக்கும் மானிடா – நீ
ஆக்கிடத்தான் முயன்று பாரேன் என்போலே செயற்கையாய்
பானைநீரும் கேள்விகேட்க பரிதவித்து நானுமே –அங்கே
பதறிஎழுந்து அமர்ந்திட தூக்கம் கலைந்தும் போனதே
வானில் தினம் ஊர்தி பல ஏவுகின்ற மனிதரே – அந்த
வானம் தரும் நீரைப்போல உருவாக்க இயலுமா?
தானாக பேசாதே தண்ணீரைக் குடித்துப்படு –என்ற
தாயின் குரல் கேட்க தயங்குகிறேன் தூங்கிடவே