தண்ணீர் தேவை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதை நமது தமிழ் சமூகம் அன்று எப்படிக் கையாண்டது; இன்று எப்படிக் கையாள்கிறது என்பதைத் தனது நேரடி அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
அன்றைக்கு ஒரு ஊர் நிர்மானித்தார்கள் என்றால் அந்த ஊருக்குத் தேவையான தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அதைச் சார்ந்த வேளாண் நிலங்கள், கால்நடைகள் மேய்க்க நிலங்கள் மற்றும் விளை பொருட்கள் சேகரித்து வைக்க களத்து மேட்டு நிலங்கள் என்று சுயசார்புடைய கிராமங்களை உருவாக்கினர்.
தண்ணீர் தேக்க பெரிய ஏரியும்,
அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து வெளியேறும் நீரைத் தேக்க சித்தேரியும்,
மேலும் சித்தேரி நிரம்பி வெளியேறும் நீரைத் தாங்க தாங்கல் என்ற ஏரியும் இருக்கும்.
கிராமத்தில் தேவைக்கு ஏற்றாற் போல் துணிகள் துவைக்க மற்றும் கால்நடைகள் நீரருந்த குட்டைகள் இருக்கும்.
ஏரி மற்றும் குட்டைகளில் இயற்கையாக வளரும் மீன்கள் இருந்தன.
கெளுத்தி, வாளை, உளுவை, ஆரால், விரால், குரவை, குள்ளக் கெண்டை, தேளீ, அசரை மற்றும் வெள்ளி போல் மின்னும் சொட்டவாளை போன்ற மீன்கள் நிறைந்திருக்கும்.
இன்றைக்கு மீன் வளர்ப்போரை வளர்ப்பு மீன்களை விடச் செய்து இயற்கை மீன்களை அழிக்க வழி வகுத்தோம்.
அம்மீன்களைச் செயற்கையாக வளர்க்க, வேண்டாத கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளின் தரத்தை சீரழித்தோம்.
இந்நிலை என்று மாறுமோ?
வரும் தலைமுறைக்காவது சிறந்த எண்ணங்கள் மேலோங்க வேண்டும்.
சென்னைக்கு அருகில் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, ஆவடி ஏரி, பட்டாபிராம் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம்பெரிய ஏரி, பாலவேடு ஏரி, ஆலத்தூர் ஏரி, கரலபாக்கம் ஏரி, சிவன்வாயல் ஏரி, கோயம்பாக்கம் ஏரி, புன்னப்பட்டு ஏரி, ஆயலூர் ஏரி, புலியூர் ஏரி, பட்டம்பள்ளம் ஏரி, முரக்கஞ்சேரி ஏரி, மாகரல் ஏரி, வெங்கல் ஏரி, வடமதுரை ஏரி, தண்ணீர்குளம் ஏரி, காவனூர் ஏரி, மேலக்கொண்டையார் ஏரி, வதட்டூர் ஏரி, மிட்டணமல்லி ஏரி, கோவில்பதாகை ஏரி, நடுகுத்தகை ஏரி என்று இருந்தன. சில ஏரிகளை மட்டும் காட்டியுள்ளேன்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றிரண்டு ஏரிகள், குளங்கள் இருந்தன.
எடுத்துக்காட்டாக எங்கள் கிராமமான திருவள்ளுர் மாவட்டதைச் சார்ந்த ஒருங்கிணைந்த பாக்கம் பஞ்சாயத்தில் மட்டும் மூன்று ஏரிகள் மற்றும் பதினாறு குளங்கள் இருந்தன.
ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவைகள் சுருங்கி விட்டன.
இருப்பதையும் அழித்து விடுவோம்; சந்தேகமில்லை!
இன்றைக்கு இயற்கை ஆர்வலர்கள் ஏன் இவற்றைப் பற்றி பேசுவதில்லை?
அன்றைக்கு ஊரைப் பொறுத்து ஏரிகள் இருந்தன. இன்றைய அவலநிலை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆற்றைக் கெடுத்தோம்.
ஏரிகளுக்கு வரும் நீரைத் தடுத்தோம்.
ஆறுகள் குளங்களாயின.
ஏரிகள் வறண்டன.
ஏரிகள் வீடுகளாயின.
தண்ணீரைக் கடலுக்குள் விட்டோம்.
தாகத்திற்கு தண்ணீரைத் தேடுகின்றோம்.
மழை பெய்தால் வெள்ளம் என்று அலறுகின்றோம்.
மழை விட்ட மூன்று மாதங்களில் நீர் இருப்பு குறைந்து விட்டது என்று அலறுகின்றோம்.
காரணம் நீர் சேமித்தலின் அவசியம் அறியாததேயாகும்.
இருப்பதையெல்லாம் அழித்துவிட்டு குடிக்கத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அரசாங்கம் ஆவண செய்ய அறைக்கூவலிடுகின்றோம்.
பிற்காலத்தில் தண்ணீரும் தயாரிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.
இன்று வீடுகள் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
இன்றியமையாத தண்ணீர் உட்பட அனைத்திற்கும் கையேந்தும் நிலையில் உள்ளோம்.
இந்நிலை நாமே உருவாக்கிக் கொண்டதாகும்.
இன்னும் சில நாட்களில் காற்றைக்கூட விலைக்கு வாங்கும் நிலை உருவாகும்.
ஒருநாள் மின்சார மோட்டார் இயங்கவில்லையானால் குடிநீர் தட்டுப்பாடு வந்து விடும். அந்த அளவிற்கு நிலைமையைக் கொண்டு வந்துவிட்டோம்.
காரணம் நீரை சேமிக்காததால் கிணறுகளில் நீர் வற்றி விட்டது. ஆழ்துளைக் கிணறு தேவைப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் இறைக்க மின்சக்தி அவசியம் தேவைப்படுகின்றது.
கிராமப் பகுதிகளில்கூட கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் பழக்கம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இன்றைய நம் தண்ணீர் தேவை மிக அதிகம்!
ஆனால் நம் செயலோ மிக அலட்சியம்!!
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450