தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

தண்ணீர் உலக உயிர்கள் உயிர் வாழ மிகவும் அவசியமான ஒன்று. இப்பூமியின் மொத்த பரப்பில் 70.9 சதவீத்தை தண்ணீர் கொண்டுள்ளது.

இது உலகில் உள்ள முக்கிய வளங்களில் ஒன்று. இது ஒரு தனித்துவமான இயற்கை வளம். இதுபோல் தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இப்புவியில் உள்ள வெப்பநிலையைப் பொறுத்து திட, திரவ, வாயு என மூன்று நிலைகளில் காணப்படக்கூடிய ஒரே பொருள் தண்ணீர் மட்டுமே ஆகும்.

தண்ணீரானது குளிர்ந்து பனியாகும்போது தன்னுடைய அடர்த்தியில் 9 சதவீதத்தை இழப்பதால்தான் பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.

கந்தக அமிலம் உள்ளிட்ட எல்லா திரவங்களையும்விட தண்ணீரானது அதிகப்படியான பொருட்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆதலால்தான் இது அனைத்துக் கரைப்பான் என்றழைக்கப்படுகிறது.

தூய்மையான தண்ணீரானது மணமும், சுவையும் அற்றது. அதேபோல் தூயதண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. தூய தண்ணீரின் பி.எச். மதிப்பு 7 ஆகும்.

சூரிய வெப்பத்தால் ஒருநாளைக்கு சுமார் 1 டிரிலியன் தண்ணீராது ஆவியாகிறது.

இப்புவியில் உள்ள தண்ணீரில் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவே குடிநீராகும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

நமது உடலானது 60-70 சதவீதம் தண்ணீரைக் கொண்டுள்ளது. நமது மூளையில் 75 சதவீதம் தண்ணீரும், நுரையீரலில் 90 தண்ணீரும், இரத்தத்தில் 82 சதவீதம் தண்ணீரும் உள்ளன.

உலகில் உள்ள நன்னீரில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீரானது அன்டார்டிக்காவில் உள்ளது.

நமது உடலின் வெப்பநிலையை தண்ணீரானது சீராக வைக்க உதவுகிறது. ஆதலால்தான் காய்ச்சலின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க மருத்துவர் அறிவுறுத்துவார்.

ஒருமனிதன் உணவில்லாமல் ஒருமாதம் வாழ்வான். ஆனால் நீரில்லாமல் ஒருவாரம்தான் வாழ்வான்.

இப்பூமியில் உள்ள நன்னீரில் 70 சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது.
ஜெல்லி மீன் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவை 95 சதவீதம் தண்ணீரைக் கொண்டுள்ளன.

ஒரு நீர்துளியின் வாழ்நாள் 100 ஆண்டுகள் என கருதினால், அது 98 வருடங்கள் கடலிலும், 20 மாதங்கள் பனிக்கட்டியாகவும், 2 வாரங்கள் ஆறு குளங்களிலும், ஒருவாரத்திற்கும் குறைவாக வளிமண்டலத்திலும் இருக்கிறது.

இப்புவியில் உள்ள நன்னீரின் அளவினைவிட வளிமண்டலத்தில் உள்ள நன்னீரின் அளவு அதிகம்.

ஒருதண்ணீர் குழாயில் இருந்து ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு நீர் வீணாகும்போது ஒருவருடத்தில் சுமார் 11356 லிட்டர் நீரானது வீணாகிறது.

நிலவில் தண்ணீரானது பனிக்கட்டியாக உறைந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வளரும் நாடுகளில் உருவாகும் நோய்களில் 80 சதவீதம் தண்ணீர் தொடர்பானவை.

கடல் மட்டத்தில் தண்ணீரானது 100 செல்சியஸ் வெப்பத்தில் கொதிநிலையை அடைகிறது. ஆனால் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் காற்றின் அழுத்தம் குறைவதால் தண்ணீரானது 68 செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநிலையை அடைகிறது. எனினும் ஆழ்கடலில் 100 செல்சியஸ் வெப்பநிலையில் தண்ணீரானது கொதித்து ஆவியாகுவதில்லை.

தண்ணீரானது மற்ற திரவங்களைவிட சூடாவதற்கு முன்பு அதிகளவு வெப்பத்தை உறிஞ்சுகிறது. ஆதலால்தான் தொழிற்சாலைகளிலும், கார்களின் ரேடியேட்டர்களிலும் குளிர்விப்பானாக இது பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீரின் மூலக்கூறுகள் அதிகளவு ஒட்டும் தன்மையைக் கொண்டுள்ளன. அதாவது தண்ணீர் மூலக்கூறுகள் மற்ற பொருட்களின் மூலக்கூறுகளுடன் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.

தண்ணீருக்கு பரப்பு இழுவிசை அதிகம். இதனுடைய ஒட்டுத்தன்மை (adhesive), மீள்தன்மை (elastic) காரணமாக தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்றிணைந்து சொட்டாக (Drop) விழுகிறது.

தண்ணீரின் பரப்பு இழுவிசை (Surface tension), ஒட்டும்தன்மை (adhesive), ஒத்திசைவு (Cohesive) காரணமாக நுண்ணிய துளைகளுக்கும் இடையில் இதனால் இயங்க இயலுகிறது.

நீரின் நுண்துளை இயக்கம் (Capillary action) காரணமாக நீர் மற்றும் அதனுடன் கரைந்த பொருட்கள் தாவரங்களின் வேர்கள் வழியாகவும், நம் உடலில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் வழியாகவும் செல்ல முடிகிறது.

வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதரமானது ஒரே நேரத்தில் இப்புவியில் மழையாகப் பெய்து சமமாகப் பரவினால் அது இப்புவியை ஒரு அங்குலம் மட்டுமே மூடும்.

சராசரியாக ஒரு கலோரி உணவுக்கு நீர்பாசனம் செய்ய 1 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

வளரும் நாடுகளில் பெண்களும் குழந்தைகளும் சராசரியாக ஒருநாள் பகல் பொழுதில் 25 சதவீத நேரத்தை தண்ணீர் சேகரிப்பதில் செலவிடுகின்றனர்.

தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு ஆச்சர்யமூட்டினாலும் இயற்கையின் கொடையான தண்ணீரைப் பாதுகாப்போம்.

நீர்நிலைகளை மாசடையாமல் வளமான நீரை எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்.

 

2 Replies to “தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.