தத்தும் தண்டால் செய்வது எப்படி?

தத்தும் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

தவளை தண்டால் என்றும் இதனைக் கூறுவார்கள். தவளையின் இயல்பான தத்திச் செல்லும் முறையே இத்தண்டாலின் செய்முறையாக அமைந்திருக்கிறது.

தத்திச் செல்லும் தண்டால் என்றால் கேட்க இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், தவளையை மாற்றி, தத்தும் தண்டால் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

தொடக்க நிலை

நேர்த்தண்டால் எடுக்கின்ற நிலையில் முதலில் உட்கார வேண்டும். நேர்த்தண்டாலுக்குரிய தொடக்க முறைகள் அத்தனையையும் இதில் கடைபிடிக்க வேண்டும்.

நேர்தண்டால் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

பிறகு  அமர்ந்த நிலையில் இருந்து இரண்டு கால்களையும் சீராகவும் நேராகவும் பின் புறம் விறைப்பாக நீட்டி விட வேண்டும்.

அதன்பிறகு ஊன்றியுள்ள கைகளை மெதுவாக மடக்கி, நெஞ்சுப்பகுதியானது (Chest) தரைக்கு இணையாக நேர்க்கோட்டில் வருவதுபோல, கீழே இறக்கிக் கொண்டுவந்து, தரையைத் தொட்டுவிடாமல், சற்று மேலேயே இருத்தி வைக்கவேண்டும். முன்பாதங்களாலும் ஊன்றியுள்ள கைகளாலுமே இப்பொழுது உடல் தாங்கப்பட்டிருக்கிறது.

இதுதான், தத்தும் தண்டாலின் தொடக்க நிலையாகும்.

தத்தும் தண்டால் செய்முறை

ஊன்றியுள்ள கைகளை நன்கு உறுதியாகத் தரையில் பதித்தவாறு 6 அங்குல தூரம் முன்புறமாகத் தாவிக் குதித்து உள்ளங்கைகளால் ஊன்றியவாறு, முன்னர் தொடங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்க வேண்டும். (எண்ணிக்கை 1)

பிறகு, மடக்கியிருந்த (Bend) கைகளை மீண்டும் உயர்த்தி நிமிர்த்திக் கொண்டு அடுத்ததாக 6 அங்குல தூரம் உடலை முன்புறமாகத் தூக்கிக் குதித்து தாவிவிடவும். (எண்ணிக்கை 2)

அதே தாவும் முறையைப் பின்பற்றி 6 அங்குல தூரம் பின்புறமாகத் தாவி, பின் பக்கமாக வரவும். (எண்ணிக்கை 3)

பின்புறம் வந்தவுடன் மீண்டும் பின்புறமாக தாவிக் குதித்து தண்டாலின் ஆரம்ப நிலைக்கு வந்து விடவேண்டும். (எண்ணிக்கை 4)

குறிப்பு

தாவிக் குதிக்கும் பொழுது, உடல் சற்று மேலே எழும்பி, மீண்டும் தரைக்கு வரும். அப்பொழுது, உடலானது கைகளினால்தான் தாங்கப்படுகிறது.

கைகளில் பலம் இல்லாவிட்டால் கைபிசகிக் கொள்ளும். கீழே விழ நேரின், முகமும் வயிறும் அடிபடவும் கூடும்.

ஆகவே, அவசரப்படாமல், நிதானமாக மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.

6 அங்குலம் தாவவேண்டும் என்று குறித்திருக்கிறோம். சரியாக 6 அங்குலம் என்று கருத வேண்டாம். தாவும் தூரம் சுமாராகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் உடலைத் தூக்கவே முடியாமல், கையைத் தூக்கி அதே இடத்தில் வைப்பவரும் உண்டு. பழகிவிட்டால், அதிக தூரம் கூட தாண்டிட முடியும்.

ஆகவே, 6 அங்குலம் என்பது சுமாராக ஒரு தூரத்தைக் குறிப்பதற்காகக் கூறப்பட்டது என்று கொள்ளவும்.

இத்தண்டாலினால் கைத்தசைகள் நன்கு வலிமையும் வனப்பும் பெறுகின்றன.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.