அடர்ந்த காட்டில், கடுமையான பசியுடன் சிங்கம் ஒன்று தன் இரையை தேடி சுற்றி திரிந்து கொண்டிருந்தது. சிங்கத்தின் பார்வையில் ஓநாய் ஒன்று தென்பட, ஓநாயை விரட்டி பிடித்தது சிங்கம்.
ஒநாயானது, ‘எப்படியாவது சிங்கத்திடம் இருந்து தப்ப வேண்டும்’ என்று தந்திரமாக யோசித்தது. சிங்கம் ஓநாயை விடுவதாக இல்லை.
சிங்கத்திடம், “காட்டு ராஜா சிங்கம் அவர்களே! உங்கள் பசிக்கு, இன்று நான் இரையாக போகிறேன் என்று, எனக்கு தெரியும். எனக்கு மரணம் உறுதியானதால், என் கடைசி ஆசையை கேட்பீர்களா?” என்று ஓநாய் கேட்டது.
“அதற்கென்ன உன் ஆசையை கூறு; கேட்கிறேன்!” என்று சிங்கம் கூறியது.
“உங்களின் பசிக்கு ஒரு இரை வேணும். அதற்கு நான் வேறு ஒரு மிருகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டு, என்னை காப்பாற்றி கொள்கிறேன்” என்று தந்திரமாக ஓநாய் கூறியது.
“எனக்கு சம்மதம். என் பசி தீர வேண்டும் அவ்வளவு தான்!” என்று சிங்கம் கூற, “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டபடி, ஓநாய் யாராவது சிக்குவார்களா? என்று சுற்றி பார்த்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற நரி, அதன் கண்ணில் சிக்கியது. உடனே ஓநாய் தன் தந்திர புத்தியை யோசித்து, நரியை அழைத்தது.
“நரியாரே, எனக்கு ஒரு பிரச்னை உதவலாமா?” என்று ஓநாய் கேட்க, நரியானது எதையும் யோசிக்காமல், “என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்று கூறி ஓநாயை நோக்கி வந்தது நரி.
“என்ன உதவி உனக்கு வேண்டும் என கூறு?” என்று ஓநாயிடம் நரி கேட்டது.
“அது ஒன்றுமில்லை, இன்று சிங்க ராஜா பிறந்த நாளாம். அதனால் பரிசு தருவதற்காக, போட்டி நடத்த திட்டம் தீட்டியுள்ளார். போட்டிக்கு என்னை அழைத்து உள்ளார்.
போட்டி என்றாலே எதிர் போட்டியாளர் வேண்டுமே. அதான் நான் உன்னை அழைத்தேன். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசு தருவதாக சிங்க ராஜா கூறியுள்ளார்” என்று தொடர்ந்து ஓநாய் பேசி கொண்டிருந்தது.
“நாம் இருவரும் அதோ அருகில் உள்ள மா மரத்தை தொட்டு விட்டு, மறுபடியும் இங்கு வந்து சிங்க ராஜாவை தொட வேண்டும்.
யார் முதலில் தொடுகிறார்களோ அவர் தான் வெற்றியாளன். அவருக்கு சிங்க ராஜா பரிசு தருவார். இது தான் போட்டி” என்று கூறியபடி, நரிக்கு தெரியாமல் ஓநாய் சிங்கத்திடம் கண்களை சிமிட்டியது.
“போட்டிக்கு நான் தயார். பரிசு கண்டிப்பாக தருவீர்களா சிங்க ராஜா?” என்று நரி கேட்க , “கண்டிப்பாக பரிசு உண்டு “ என்று சிங்கம் ஒத்துகொண்டது.
உடனே சிங்கத்திடம் மெதுவாக ஓநாய் “ சிங்கராஜ ஓட்ட பந்தயத்துல நான் வேகமாக ஓடுவது போல ஓடி பிறகு, மெதுவாக ஓடி வருவேன், வேகமா இந்த நரி பய வருவான். அவன உங்க இரையாக வச்சு சாப்ட்ருங்க. என்னை விட்ருங்க” என்று ஓநாய் தன் தந்திரத்தை சிங்கத்திடம் கூறியது.
அதற்கு சிங்க ராஜா, “ நன்றி ஓநாய். உன் திட்டப்படி செய்கிறேன்” என்று கூறிவிட்டு, அதன் பங்கிற்கு அது ஒரு தந்திர புத்தியை யோசித்தது.
தனக்கு கிடைத்த இருவரையும் இரையாக்க வேண்டும் என்று தந்திரமாக யோசித்தது சிங்க ராஜா.
போட்டி துவங்கியது.
ஓநாயும் நரியும் ஓட்டத்தை துவங்கின.
இருவரும் எதிரில் இருந்த மா மரத்தை நோக்கி வேகமாக ஓட துவங்கினர்.
மா மரத்தை ஓநாய் முதலில் தொட்டு விட, நரியின் வேகம் அதிகரித்தது.
ஓநாய் தன் தந்திர புத்தியால், ஓடும் வேகத்தை மெதுவாக குறைக்க, நரி மா மரத்தை தொட்டு விட்டு சிங்க ராஜாவை நோக்கி முதலாவதாக ஓடி கொண்டிருந்தது.
இருவரும் சிங்க ராஜாவை நெருங்கிய போது, சிங்கம் இருவரையும் வேட்டையாட தன் தந்திரத்தை நினைத்தது.
இருவரும் சிங்க ராஜாவை நெருங்கி வந்தனர்.
ஓநாய் சிங்க ராஜாவிடம், “சிங்க ராஜாவே, இதோ இந்த நரியை பிடித்து கொள்!” என்று மிக அருகில் செல்லும் போது கூற, நரி சட்டென சுதாரித்து, தன் பாதையை மாற்றி, இருவரிடம் இருந்து தப்பிக்க முயன்றது.
ஓநாய் நரியின் தந்திரத்தை கண்டு வியந்தபடி சிங்கத்திடம் சிக்கியது.
“ஓநாயே, உன் தந்திரம் எனக்கு தெரிந்து தான், இந்த போட்டியில் கலந்து கொண்டேன். சிங்கராஜா கடும் பசியில் இருப்பதை, உனக்கு முன்பே நான் பார்த்து விட்டு, தப்பிக்க வேறு வழி இல்லாமல் அந்த பாறையின் பின்புறம் ஓரமாக ஒளிந்திருந்தேன்.
அப்போது தான் நீ சிங்கத்திடம் சிக்கினாய், நீங்கள் இருவரும் போட்ட திட்டத்தை கேட்டு விட்டு தான் இங்கு வந்தேன்.
உன் மரணம் நிச்சயம். உன்னை காப்பாற்ற என்னிடம் கூறியிருந்தால் கூட, நான் உன்னை காப்பற்ற முயற்சி செய்திருப்பேன்.
நீ என்னை பலியாக்கி தப்பிக்க பார்த்தாய் அல்லவா?
உனக்கு மட்டுமில்லாமல் மற்றவர்க்கும் நல்லதை நினைத்திருந்தால், உனக்கு நல்லதே நடந்திருக்கும்” என்று கூறி நரியானது அங்கிருந்து தப்பியது.
சிங்கத்திடம் மீண்டும் சிக்கியது ஓநாய்.
சிங்கம் கர்ஜனையுடன் ஓநாயை நெருங்கியது. சிங்கத்தின் பசிக்கு ஓநாய் இரையானது.
எப்போதும் நம்மை காப்பாற்றி கொள்ள, மற்றவர்களை எளிதாக பிரச்சினையில் சிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறோம்.
நான் வாழ வேண்டும், நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் நீங்கி, நாம் வாழ்வோம், நம்மை சுற்றி இருப்பவர்களையும் முடிந்தவரை வாழ வைப்போம்.
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104