பிரிவுத் துயரின் வலி மற்றும் குழந்தையின் பாசம் எத்தகையது என்பதை மனதின் அடிஆழம் வரை சென்று உணர்த்தும் இயங்குபடம் (ANIMATION) தந்தையும் மகளும் குறும்படம்.
ஒரு பெண் குழந்தை, தன் தகப்பனார் மேல் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துவாள்.
இன்னொரு தாயாக, இன்னொரு தங்கையாக, இவ்வாறாக அவள் காட்டும் பாசம் இந்த உலகில் வேறு எங்கும் இல்லாதது.
அதன் விசுவரூப தரிசனம் எங்கும் கிடைக்காது. பெண் குழந்தைகளின் அந்தப் பாசவலையில் எந்தத் தகப்பனாரும் சிக்காமல் இருந்ததில்லை.
பெண் குழந்தையின் இந்த மனம், தந்தை மேல் கொண்டிருக்கிற அளவில்லாத பாசம், தன் தந்தையை மானசீக குருவாக, கடவுளாக, எல்லாமாக நினைக்கின்ற பக்குவம் எளிதாய் கிடைத்து விடுகிறது.
அப்படிப்பட்ட தந்தையை ஒரு பெண் குழந்தை, தன் அன்பால், பாசத்தால், பிணைப்பால் கட்டிப்போட்டுத் தானே முழுமையாகத் தன் தந்தையை ஆக்கிரமித்துக் கொள்கிறாள்.
இப்படிப்பட்ட உலகியல் நிலையில், பெண் குழந்தை தன் தந்தையைப் பிரிய நேர்ந்தால், தன் தந்தையை இழக்க நேர்ந்தால், தன் தந்தையைப் பார்க்க முடியாமல் போனால், அவள் மனம் என்ன செய்யும்? எவ்வளவு வேதனைப்படும்?
எவ்வளவு துயரத்தை அந்தப் பிஞ்சு மனம் சுமக்கும் என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்த வலி கொடுமையானது.
அந்த வலியின் உள்ளாக இருக்கிற, அதீதமான மரணம் நம்மைப் பிடித்து ஆட்டி வைக்கிறது. அப்படிப்பட்ட சோகத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிப்பட்ட வலியைத்தான் இக்குறும்படம் பேசுகிறது.
தன்னில் அன்புமிக்க ஒருவர், என்ன காரணத்தினாலோ தன்னை விட்டுப் பிரிந்தார் என்று நினைத்து நினைத்து உயிரோடு சாகும் விதமாக, ஏன் பிரிந்து சென்றார் என்கிற எண்ணப்பாடு வாட்டி வதைப்பதை இக்குறும்படம் அழகாக எடுத்தியம்புகிறது.
வாழ்க்கையில் இழப்புக்கள் பலவிதம், அந்த இழப்பின் உச்சத்தில் இருக்கிற இழப்பாக இதைக் கூறலாம்.
ஏன் எதற்காகத் தன்னை விட்டுப் பிரிந்தார் என்று கூட தெரியாமல், அந்தப் பிரிவின் முடிவில், இல்லாமல் போய்விடுமோ என்று இயங்குகிற இயக்கத்தின் நாட்கள் மிகவும் கொடூரமானது.
அந்த நாட்களின் மிதமிஞ்சிய வேதனையை அப்பட்டமாகக் கூறி, ஒரு பெண்குழந்தையின் அடிமனதில் பட்ட இன்னல்களை மையப்புள்ளி நிலையிலிருந்து விளக்குகிறது தந்தையும் மகளும் குறும்படம்.
குறும்படத்தின் கதை
தந்தை ஒருவர் தன் மகளுடன் தனித்தனியான சைக்கிளில், அழகான பனிப்பிரதேசத்தில் அப்படியே சுற்றித் திரிகின்றார்.
திடீரென்று ஒரு இடத்தில் தந்தை தன் சைக்கிளை நிறுத்திவிட்டு, பெண் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி, ”இங்கேயே இரு நான் விரைவில் வருகிறேன்” என்பதைப்போல் கூறிவிட்டு, மிகப்பெரும் நீர்ப்பரப்பின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த படகில் ஏறிச் சென்று விடுகிறார்.
குழந்தையும் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் தந்தை திரும்பி வரவில்லை என்றவுடன், சைக்கிளை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்கிறாள். மீண்டும் வந்து பார்க்கிறாள்.
இப்படியாக ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பத்து முறை அல்ல, சின்ன குழந்தையிலிருந்து, திருமணமாகித் தன் குழந்தைகளுடன் கூட சைக்கிளில் அந்த இடத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து அதே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, தன் தந்தை திரும்பி வந்து விட மாட்டாரா? தன் தந்தையோடு நாம் வாழ்ந்து விட மாட்டோமா? என்று ஏங்கிப் பார்த்துவிட்டுப் பார்த்துவிட்டுச் செல்லுகிறாள்.
ஒவ்வொரு முறை வருகிற போதும், தன் தந்தையோடு செல்லப் போகிறோம் என்கிற ஆவலோடு வருவாள். ஆனால், செல்லுகிற போது தன் தந்தை இல்லாமல் சோகத்துடன், மிக மெதுவாக, முகம் வாடிய நிலையில், இல்லத்திற்குச் செல்லுவாள்.
முதிர்ந்த வயதில், அவள் இன்னும் தன் தந்தையை எதிர்பார்த்து அந்த இடத்திற்கு வந்தாள். சைக்கிளை நிறுத்தினாள், துணிவோடு அந்த நீர்ப்பரப்பின் உள்ளாக நடந்தே சென்றாள்.
நீர்ப்பரப்பின் அந்தப்புரத்தில் சென்று பார்த்தால், அவளின் தந்தை சென்ற அந்தப் படகு சிதைந்த நிலையில் அங்கு அனாதையாகக் கிடக்கிறது.
அதைப் பார்த்தவுடன் அதில் ஏறி, அந்தப் படகின் ஓரத்தில் அந்தப் படகை ஒட்டிக்கொண்டு அப்படியே சுருங்கிப் படுத்துக் கொள்கிறாள். தன் தந்தையின் மடியில் படுத்து இருப்பதை போல,
அந்த நேரத்தில் அவளுக்குள் ஒரு காட்சி ஓடுகிறது. தூரத்தில் தன் தந்தை நிற்பதையும், இவள் குழந்தையாகி வேக வேகமாக ஓடிப் போய்த் தன் தந்தையைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போலவும் காண்கிறாள். இத்தோடு இக்குறும்படம் முடிகிறது.
குறும்படத்தின் சிறப்பு
ஒரே ஒரு இடத்தை மட்டும் காட்சி அமைப்பில் வைத்து, அந்த இடத்திற்குள் சைக்கிளில் வருவதும், நிற்பதும், பிறகு செல்வதுமான காட்சி அமைப்பை வைத்து, இவ்வளவு ஆழமான பாசப்பிணைப்பை இக்குறும்படம் இவ்வளவு கதையையும் கூறுகிறது.
காட்சியமைப்பு, குறும்படத்தின் மிகப்பெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. பனிக்காலத்தை, காற்று வீசும் காலத்தை, இலையுதிர்க் காலத்தை, நீர்ப்பரப்பை, வயது முதிர்வை, இளமையை, எல்லாவற்றையும் இரு நிறங்களை வைத்துக் (கருப்பு- வெள்ளை) கோட்டுஓவியங்களைப் போல, இந்தக் குறும்படத்தைத் தயாரித்திருப்பது மிகப்பெரும் சவாலான செயலாகும்.
இப்படி ஒரு கதையை இயங்குபடமாக எடுப்பதற்கு ஒரு மாபெரும் துணிவு இருந்தால் தான் முடியும். அது சாத்தியப்பட்டதால் ஆஸ்கர் வரை சென்று பரிசைப் பெற்றிருக்கிறது.
ஓவியக் கலையின் உச்சத்தை இத்திரைப்படம் நமக்கு காட்டிச் செல்லுகிறது. பாச உணர்வுகளைப் பின்னணி இசை வெளிப்படுத்தும் அற்புதத்தைச் செய்கிறது.
நம் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும் சோகத்தை, இந்த இசை தான் நமக்குள் ஊடுருவி வரவழைக்கிறது. அற்புதமான கூட்டமைப்பில் வெளிவந்திருக்கும் குறும்படம் இது.
உலகில் வேறு ஒன்றும் செய்திட முடியாத ஒன்றைப் பாசம் எனும் மாபெரும் ஒன்று செய்து காட்டுகிறது. இதன் ஆத்மசொரூபம் ஒற்றைச் சாம்ராஜ்யத்தில் கோலோச்சுகிறது.
இந்தக் குறும்படத்திற்கான ஏற்புக் கோட்பாட்டின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், இந்தப் பிரிவின் வலியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அனுபவிக்கின்றோம் என்பதுதான்.
படம் தந்த சோகத்தை விட, விமர்சனம் எழுதியவர்களின் பிரிவுச்சோகம் மிக நுண்ணியதாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டை இங்கு காண்போம்.
ஒரு தந்தை இவ்வாறு தன் மகளைப் பிரிந்த சோகத்தை எழுதுகிறார்.
” படகில் உறங்கும் போது நமக்குத்தான் கண்ணீர் வரும். இரவு 11. 15 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோதும், என் கையை எடுக்க முடியாத அளவுக்கு என் விரல்களை மிகவும் இறுக்கமாகப் பிடித்த, எனது 3 வயது மகள் குறித்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது.
300 கிலோமீட்டர் தொலைவில் என் வேலையைச் செய்ய நான் அவளை அம்மாவிடம் விட்டுவிடுவேன் என்று அவள் பயந்தாள். அடுத்த நாள் காலையில், என் அழகான மூன்று வயது மகள் வீட்டில் எல்லா இடங்களிலும் என்னைத் தேடினாள் என்று என் மனைவி சொன்னாள். மிகவும் வேதனையாக இருந்தது. பலமுறை அது நடந்தது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் எனது குடும்பம் நான் வேலை செய்யும் இடத்திற்கு மாறியது”.
”எனக்கு 5 வயதாக இருந்தபோது என் தந்தை எங்களை விட்டுச் சென்றார். இன்னும் நான் அவருக்காக காத்திருக்கிறேன்” என்று ஸ்வேதா என்ற பெண் கூறுகிறார்.
கணவரை இழந்து வாடும் ஒரு பெண் கூறும்போது, ”நான் ஒரு துயரமான வேலை விபத்தில் என் கணவரை இழந்தேன். மொத்தம் 6 குழந்தைகள். ஐந்து பெண்கள். ஒரு ஆண். அந்த நேரத்தில் அப்பாவை இழந்த என் குழந்தைகள் ஒருபோதும் மீளவில்லை. அவர் மறைந்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். சொல்ல எதுவும் இல்லை அல்லது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த வீடியோ மிகவும் வருத்தமாக உள்ளது” என்கிறார்.
படக்குழு
எழுத்து மற்றும் இயக்கம்: மைக்கேல் டூடோக் டி விட்
இசை: நார்மண்ட் ரோஜர்
அனிமேஷன்: மைக்கேல் டூடோக் டி விட்
அகாடமி விருது: 2000 சிறந்த அனிமேஷன் குறும்படம் (ஆஸ்கார்)
தந்தையும் மகளும் குறும்படம் பாருங்கள்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!