தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்

கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.

“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”

எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.

“இதுல அநியாயத்தை என்ன பார்த்த? அம்மாவுக்கும், பொண்ணுக்கும் பேச ஆயிரம் இருக்கும். உனக்கென்ன கோவம் அதுல.”

“நான் சொல்றத என்னைக்கு நீங்க சரின்னு ஒத்துக்கிட்டிருக்கீங்க. நான் என்ன அம்மாவும் பொண்ணும் பேசக்கூடாதுன்னா சொல்றேன். நம்ம முன்னாடியே பேசலாம் தான, பொண்ணை தனியா கூட்டிப்போய் ஏத்தி விடற மாதிரில்ல இருக்கு? அதுவுமில்லாம தனிக்குடித்தனம், அது இதுன்னு வேற என் காதில விழுந்தது”

“காதில விழுந்தத‌ வெச்சி எதையும் முடிவு பண்ணக்கூடாது வடிவு. மருமகள் நம்ம வீட்டுக்கு வந்து 2 வருஷத்துக்கு மேலாவுது. அப்ப எப்படி இருந்தாளோ அப்படியேதான் நம்ம கிட்ட ஒட்டுதலா இருக்கா. அவங்கம்மா ஏத்தி விடறாங்கன்னு நீ சொல்றதா இருந்தாலும், இப்பவரைக்கும் மருமகள் மாலதி கிட்ட எந்த மாற்றமும் தெரியல.”

“புரியாம ஏதும் பேசாதீங்க. ஆம்பளைங்களுக்கு என்ன தெரியும்? செய்யற சாப்பாட்டுல குத்தம் சொல்லத்தான் தெரியும். மத்தபடி குடும்பத்துல நடக்கிற உள்ளடி வேலை எல்லாம் புரியாது. அதுவும் உங்களுக்கு என்னைத் தவிர மத்தவங்க எது பண்ணாலும் நியாயமாத்தான் இருக்கும்.”

“சரி வடிவு, நீ சொல்றத நான் ஒத்துக்கிறேன். சம்பந்தியம்மா வந்து போனதுக்கு அப்புறம், அதாவது நீ சொல்ற மாதிரி பொண்ணை தனியா பேசி போதனை பண்ணியதுக்கு பிறகு மாலதிகிட்ட ஏதாச்சும் மாற்றம் தெரியுதா சொல்லு? இன்னும் சொல்லப்போனா அவங்க வீட்ல வந்து போனப்பறம் நம்மகிட்ட அதிக ஒட்டுதலா இல்ல இருக்கா? உனக்கு இதெல்லாம் ஏன் தெரிய மாட்டேங்குது?”

“மாற்றம் ஏதும் தெரியலன்னா, நாம அந்தளவுக்கு அவகிட்ட தன்மையா இருக்கோம். அதை விட்டுட்டீங்க.”

“என்னது தன்மையா இருக்கோமா? மனசாட்சி இருக்கா உனக்கு இப்படி சொல்ல? எத்தனைமுறை அவகிட்ட கோவத்துல கத்தியிருப்ப? ஒருமுறையாவது எதிர்த்து ஏதாவது பேசியிருப்பாளா? அமைதியா அவ அதை கடந்து போறதை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டிருக்கேன். மறுபடியும் சொல்றேன் வடிவு, இங்க வெச்சுதான் அவங்க பொண்ணுக்கு தப்பா போதனை பண்ணனும்னு இல்ல, ஒரு ரெண்டு நாள் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் வெச்சுக்கூட பேசலாம், புரிஞ்சுக்க. வீணா நீயே கற்பனைக் கதை கட்டி எல்லார் நிம்மதியையும் கெடுக்காத. அவ்ளோதான் சொல்வேன்.”

அத்தோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றார் மயில்சாமி.

தொடுத்த பூக்கள் அனைத்தையும் மொத்தமாக சுருட்டினாள் வடிவு. “என்னைக்கு என் பேச்சு இங்க எடுபட்டிருக்கு” முணுமுணுத்தபடி எழுந்தாள்.

பூவை டப்பாவில் அடைத்து பிரிட்ஜ்க்குள் வைத்தாள். உச்சத்தில் இருந்த மதிய வெயில் ‘டக்’கென மறைந்து இருள் கவியத் துவங்க, மழைக்கான முன் ஆயத்தத்தை உணர்ந்த வடிவு, மாடியில் உலர்த்தபபட்ட துணிகள் பற்றி நினைவுக்குவர பரபரவென படியேறி விரைந்தாள் மாடிக்கு.

மாடியறையில் சம்பந்தி ரேணுவும் அவளது மகள் மாலதியும் பேசிக் கொண்டிருந்தது துல்லியமாகக் கேட்டது.

‘அவர்கள் பேசுவதை நின்று கேட்கலாமா? வேண்டாமா?’ ஒரு நிமிடம் மனம் பட்டிமன்றம் நிகழ்த்தியது. அடுத்த நிமிடம் தானே நடுவராக இருந்து தீர்ப்பும் வழங்கியது. ‘நின்று கேட்டு என்னதான் பேசுகிறார்கள் என்று பார்க்கலாம். மகளுக்கு தவறான போதனை வழங்கினால் இப்போதே கையும் களவுமாக பிடித்து இதற்கு முடிவு கட்ட வேண்டும்.’ தீர்மானித்த வடிவு சுவரில் காதை வைத்து நின்று கேட்கத் துவங்கினாள்.

“அம்மா, வீணா மனசப் போட்டு குழப்பிக்காதீங்க, கொஞ்ச நாள் அமைதியா இருங்க பார்த்துக்கலாம்”

“இல்லை மாலதி, நானும் அப்பாவும் யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கோம். போன வாரத்துல ஒருநாள் உங்க அப்பா குடிக்க தண்ணி கேட்டிருக்காரு உங்க அண்ணிக்கிட்ட. அதுக்கு அவ தண்ணிய கொண்டாந்து டீபாய் மேல நங்குன்னு வச்சுட்டு, ‘எழுந்துபோய் குடிக்க பழகிக்கங்க. உட்கார்ந்த இடத்துலயே எல்லாம் வரும்னு எதிர்பார்க்காதீங்கன்னு’ சொல்லியிருக்கா”

“அதுக்கு அப்பா அண்ணிகிட்ட ஒண்ணும் சொல்லலயா?”

“அவர் என்ன சொல்வாரு? ‘சரிம்மா’ன்னிருக்காரு. எங்கிட்ட சொல்லும்போதுதான், ‘வயசான காலத்துல ஒரே இடத்துல முடங்காம, சுறுசுறுப்பா இருக்கணுங்கறதுக்காக சொல்றானு நாம எடுத்துக்கணும்’ அப்படின்றார். இப்படியே எத்தனை நாளைக்கு எடுத்துக்க முடியும் சொல்லு. ஒவ்வொரு வார்த்தையையும் அவ அமிலம் கலந்து வீசற மாதிரி பேசறா. ஒரு ஒரு நாளும் ஒரு பாடா போகுது”

“நான் வேணா அண்ணிகிட்ட பேசிப் பார்க்கட்டுமா?”

“நீ வந்து அண்ணிகிட்ட பேசி சரி பண்ணனும்னோ, இல்ல என் மனபாரத்தை உன்கிட்ட சொல்லணும்னோ இதையெல்லாம் சொல்லல. நாங்க படற மனவேதனை உன் அத்தைக்கும், மாமாவுக்கும் உன்னால ஏற்படக் கூடாது அப்படின்னுதான்.”

“அத்தையும், மாமாவும் என்னை நல்லபடியா பார்த்துக்கறாங்கம்மா. ஒரு குறையும் இல்ல”

“அதனாலதான் திரும்பத் திரும்ப சொல்றேன். அவங்க மனசு வருத்தப்படற மாதிரி எந்த சூழ்ல்லயும் பேசிடாத. உங்க அண்ணியால நாங்க படற கஷ்டம் எங்களோடயே போகட்டும். ஊர்ல உலகத்துல நடக்காதது இல்ல.

எல்லாரையும் நாம போய் சொல்லி திருத்த முடியாது. நம்ம நெருங்கின உறவுகள்ல இதை திருத்த முடியும் தானே?

அதனாலதான் திரும்பத் திரும்ப உன்கிட்ட சொல்றேன். எந்த நிலையிலும் உன் அத்தை, மாமா, வருத்தப்படற மாதிரி நடந்துக்காத, பேசாத. உன் அண்ணியால நாங்க பட்ட காயத்துக்கு நீ உன் மாமானார், மாமியார் கிட்ட நடந்துக்கிற விதம்தான் எங்களுக்கு மருந்தாகும். நான் சொல்றது புரியுதா?”

“சரிம்மா, நான் பார்த்துக்கிறேன். அண்ணன் இதுல எதுவும் சொல்றதில்லயா?”

“அவனாலதான் எல்லாம். கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷமாவுது. இன்னும் கூட எல்லாத்துக்கும் அம்மா, அப்பான்னு எங்களையே எதிர்பார்க்கிறான். பொண்டாட்டிய கூட்டிட்டு வெளிய எங்கியாவது போய்வான்னு சொன்னா, நீங்களும் வாங்க எல்லாருமே சேர்ந்து போகலான்றான். கலா எங்ககிட்ட நடந்துக்குறது எதுவும் அவனுக்கு தெரியாது. தெரிஞ்சா அவன் நிம்மதி போய்டும்.”

“இப்ப உங்க நிம்மதி போயிடிச்சேம்மா?”

“அதுக்குத்தான் நானும் உங்க அப்பாவும் யோசித்து ஒரு முடிவு பண்ணியிருக்கோம். நம்ம சொந்த ஊருக்கு போய் இருந்துக்கலாம்னு.”

“தனிக்குடித்தனம் போறதா முடிவு பண்ணிட்டீங்க?”

“அப்படித்தான் வச்சுக்கோ. கல்யாணம் முடிஞ்சாச்சி. அதுக்கப்புறம்கூட எங்களையே உங்க அண்ணன் சுத்தி சுத்தி வந்தா அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த கோவத்தைதான் எங்க மேல காட்றா. அவ பக்கமும் நாம யோசிக்கணும் இல்ல.

யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது அப்படினு நினைச்சு நாங்க இந்த முடிவ எடுத்திருக்கோம். நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு சந்தோஷமா இருக்கட்டும். அவளும் எங்களை புரிஞ்சுக்குவா. அதுவரைக்கும் நாங்க தள்ளி இருக்கிறதுதான் நல்லது. அதே போல நான் உனக்கு சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ சரியா?”

வெளியே இவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த வடிவுக்கு மனம் பாரமானது.

‘சே தப்பா நினைச்சிட்டோமே. ஆணாக இருந்தாலும் பெண்களை சரியாக புரிந்து கொண்ட தன் கணவர் எங்கே? பெண்ணாக இருந்தும் பெண்களை புரிந்து கொள்ளாமல் அபத்தம் வாரியிறைத்த நான் எங்கே?’

மாடியிலிருந்து வேகமாக இறங்கினாள் வடிவு தன் கணவனிடம் மன்னிப்பு கேட்க.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

மஞ்சுளா ரமேஷ் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.