தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.
அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.
‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.
வீட்டிலுள்ள வசதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சமையலுக்கும், வீட்டு வேலைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள். குனிந்து, நிமிர்ந்து எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை.
லேட்டஸ்டாக வீட்டு உபயோக சாதனங்கள் என்னென்ன உள்ளதோ அவ்வளவும் இருக்கின்றன. ‘பவர் கட்’ பற்றியும் கவலையில்லை. இன்வெட்டர் முதல் ஜெனரேட்டர் வரை அவ்வளவு வசதிகளும் உள்ளன.
அவ்வளவு வசதிகளும் அப்பாவின் சம்பாத்தியப் பணத்திலேயே செய்திருக்கிறார்.
தன் திருமணத்திற்கு ஐந்து வருடங்கள் முன்பே வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் தன்னிடம் ஒரு பைசாகூட எதிர்பார்க்காமல் சகல வசதிகளுடன் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி, வேலைக்குச் செல்லும் பெண்ணாகப் பார்த்து திருமணமும் செய்து வைத்து அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வைத்திருக்கும் அப்பாவையும் அம்மாவையும் பிரிந்து தனிக்குடித்தனம் போகவேண்டும் என்கிறாளே?’ என நினைத்து நினைத்து மனம் புழுங்கினான் பாலன்.
அன்று எல்லோருமாய் சேர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், வித்யாவின் எண்ணத்தை அப்பா அம்மாவிடம் சொல்லிவிட முடிவு செய்தான் பாலன்.
ரொம்பவும் தயக்கத்திற்குப் பிறகு, இனம் புரியாத ஓர் பயம் மனதில் தொற்றிக் கொள்ள “அப்பா உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும். தப்பா நினைக்கமாட்டீங்களே?” எனப் பீடிகையோடு ஆரம்பித்தான்.
“என்னடா, நேரிடையாய் விஷயத்துக்கு வாயேன். என்ன தயக்கம்? தனிக்குடித்தன விஷயம் தானே?”
பாலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அப்பாவை ஒருவித கலவரத்துடன் பார்த்தவனுக்குப் பேச நா எழவில்லை.
“வித்யா ஏற்கனவே இதுகுறித்துப் பேசிவிட்டாள். எங்களுக்கு ஆட்சேபனையே இல்லை. மாறாக, மனசுக்கு ரொம்ப சந்தோசமாயிக்கு. தனிக்குடித்தனம் போகணும்ங்கிற அவளோட ஆசையைவிட, அதற்காக அவள் சொன்ன உண்மையான காரணங்கள் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சின்ன வயசிலேயே அவளுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து நாங்கள் வாயடைத்துப் போய் இருக்கிறோம்.”
அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் ஒருவித குழப்பத்துடன் பதிலேதும் கூறாமல் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பாலன்.
“என்னதான் கணவனின் பெற்றோர் சொகுசு வாழ்க்கை தந்தாலும், வித்யா அதை விரும்பவில்லை. கஷ்டம், துயரம் என்றால் என்ன என்பதை வாழ்க்கையில் தானாகவே எதிர்கொண்டு போராடி வாழ ஆசைப்படுகிறாள்.
என்னதான் அறுசுவையுடன் கூடிய உணவைப் பிறர் வழங்கினாலும், தன் உழைப்பில் தானும் தன் பிள்ளைகளும் சாப்பிட்டு, இன்ப துன்பங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சமாளித்து வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறாள்.
வாழ்க்கையிலுள்ள கஷ்ட-நஷ்டங்களை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளமளவுக்குத் தன் குழந்தைகளையும் வளர்க்கப் பிரியப்படுகிறாள். நியாயமான அவளது ஆசையும் எண்ணங்களும் நிறைவேறணும். அதனால்…” என்று சற்று நிறுத்தினார்.
“சொல்லுங்கப்பா! அதனால்?..” பாலன் கேட்க, பாலனின் அப்பா தொடர்ந்தார்.
“வித்யா விருப்பம் போல் நீங்கள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்கலாம். வேறு எங்குமில்லை. இந்த வீட்டிலேயே இருக்கலாம். என் போன்ற ரிடையர்டு ஆட்களுக்காகவே இப்போது எவ்வளவோ குடியிருப்புகள் எல்லா வசதிகளுடன் கட்டி வைத்திருக்கிறார்கள்.
அவற்றில் ஒன்றில் நானும், உன் அம்மாவும் போய் இருந்து கொள்கிறோம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். உள்ளுர் தானே? நீங்களும் வந்து போகலாம். நாங்களும் வந்து போகிறோம்.
வாழ்க்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அந்தப் பயிரைத் தாங்களே நட்டு, வளர்த்து, அறுவடை செய்ய இந்த காலத்துப் பிள்ளைகளின் மனதில் ‘நினைப்பு’ வருவதே மிகப்பெரிய விஷயம்.
எங்களைப் போன்று வாழ்க்கையை நன்கு வாழ்ந்து அனுபவித்தவர்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி, அவர்களை ஆதரித்து, அவர்களது நியாயமான ஆசைகளையும் நிறைவேற்றுவதுதான் அழகு” என்று சொல்லி முடித்த அப்பாவை கண்களில் நீர் மல்க, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாலன்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998