சேகரன், வீரம்மாள் இருவரும் விரைவாக வீட்டைவிட்டு வெளியேறி வந்து கொண்டிருந்தார்கள். ஒருவழியாக ரோடு போட்டுக் கொண்டிருக்கும் இடத்தை வந்தடைந்தனர்.
மணி 8.30 ஆனது. இருவரும் காலை சாப்பாடு, சாப்பிட்டு முடித்துவிட்டு சரியாக 9:00 மணிக்கு ரோடு போடும் வேலையை தொடங்கினார்கள்.
சேகரன் ரோடு போடுவதற்கு ஏதுவாக மண்வெட்டியை கொண்டு இரண்டு பக்கமும் உள்ள புற்களை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். அவரது மனைவி அதனை எடுத்து ஒரு ஓரமாக குவித்து வைத்துக் கொண்டிருந்தார்.
மற்றவர்களும் ரோடு போடுவதற்கு தேவையான அளவு ஜல்லி, சிமெண்ட் போன்ற கலவைகளை கொண்டு வந்து வேலை செய்யும் இடத்தில் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
சூரியன் உச்சியில் வந்து நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அனைவரும் மதிய உணவிற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்ததைக் கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சரியாக இரண்டு மணி ஆனது. ரோடு காண்ட்ராக்டர் “வாங்க வேலையை பாருங்க! எந்திரிங்க ஐயா! எந்திரிங்க! எந்திரிங்கம்மா போங்கம்மா!” என்று எல்லோரையும் வேலையை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சேகரனின் மனைவிக்கு காலில் ஏதோ கடித்து விட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
என்ன கடித்தது என்று எதுவும் தெரியவில்லை! மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகுதான் பாம்பு கடித்திருக்கிறது என்பது உறுதியானது. சிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சை பலனளிக்காததால் சேகரின் மனைவி உயிர் பிரிந்தது. சேகரனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குழந்தைகளும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாக தங்களை பார்த்துக் கொள்வார்கள்.
இனி வீரம்மாள் இறந்த பிறகு சேகரனுக்கு துணை யார்? ஒன்றுமே புலப்படவில்லை! அவனுக்கு மனது மிகவும் வேதனை பட்டுக் கொண்டிருந்தது.
வீரம்மாளை தென்னை ஓலை பாடையில் வைத்து ஊரின் வழியாக சுடுகாட்டை நோக்கி கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவளுடைய பிணத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தார்கள் ஒரு பிரிவினர்.
“போங்கய்யா ஊரை சுத்தி போங்கய்யா! எங்கள் தெருவில் நடந்து போக கூடாது! உங்களுக்கு தனிச் சுடுகாடு இருக்கு. அங்க போங்கய்யா!” என்று கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள்.
“என்னங்க சாமி! நாங்கதானே இந்த ரோட போட்டு வேலை செஞ்சுகிட்டு இருக்கோம். எங்களையே இந்த ரோட்ல நடக்க விடாமல் பண்ணுறீங்களே!”
“நடக்க கூடாதுன்னா! நடக்க கூடாது! உனக்கு என்ன இவ்வளவு வாய் பேச்சு கேக்குது!” என்று அந்த ஊரின் ஒருபிரிவு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிணத்தை போடப்பட்டுக் கொண்டிருக்கும் ரோடு வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று வழிமறித்தார்கள்.
தன்னுடைய மனைவியின் பிணத்தை தாங்கள் போட்டுக் கொண்டிருக்கும் தெரு வழியாக கொண்டு செல்ல இப்படி செய்கிறார்களே என்று சேகரனுக்கு மனம் நொந்து போனது!
ஒருவழியாக பிணத்தை சுமந்து கொண்டு 1 மைல் தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் கிடந்த அந்த சுடுகாட்டில் வீரம்மாளின் பிணத்தை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.
‘இன்று வீரம்மாளுக்கு நேர்ந்த கொடுமையைப் போல நாளைக்கு நமக்கும் இந்த கொடுமை நேருமே நாம் அப்போது என்ன செய்வது? இந்த ஊரில் இனி வாழ்வது மிகவும் சிரமம் என்று சேகர் இனத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
‘இந்த ஊர் நமக்கு வேண்டாம்; வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வோம்’ என்று கண்ணீர் சிந்திக் கொண்டே சில நாட்களுக்குப் பிறகு ஊரை விட்டு புலம்பெயர்ந்து சென்றார்கள் அந்த அப்பாவி மக்கள்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு அடை மழை தொடர்ந்து பெய்தது. ஊர் மக்கள் வீட்டை விட்டு செல்ல முடியாமல் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மின்சார விளக்குகள் அனைத்தும் எரியாமல் போயின. மின் கம்பங்கள் கீழே விழுந்து விட்டன. அந்த ஊர் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி மாண்டு போனார்கள். அந்த ஊர் தனிச் சுடுகாடு ஆனது.
பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com