எல்லாமுமே ஒரு வலியோடுதான்
நம்மை வந்து அடைகிறது
நான் ஒரு மலரை
ரசிக்கவேண்டும் என்றாலும்
துன்பப்படவேண்டி இருக்கிறது
வெறுமனே என்பது
சாத்தியமில்லாத போது
எனது நரம்புகள் வேறுவழியின்றி
அர்த்தங்களைக் கடத்துகின்றது
ஒரு மனிதன்
சபிக்கப் படும்போது தான்
விடுதலையைப் பற்றி நினைக்கிறான்
அவனை நீரில்
கழுவிக் கொள்ளும்போது
தற்காலிகமாகப் பிறக்கிறான்
சூரிய ஒளியில்
துச்சமென எரிகிறான்
ஆற்றின் ஓட்டத்தில்
அமைதி நிலை கொள்ளாமல்
கரையில் ஒதுங்கியது
அதைப் பார்த்தபடி
நின்ற மனிதனின் தனிமை
செதுக்கிய சிலை போல்
நினைவில் வந்தது