“இதைவிட சூப்பர் இடம் அமையாது பிரகாஷ். எதற்காக இந்தக் குடும்பம் சரிப்படாதுங்கறே! ஒரே பெண், பிக்கல், பிடுங்கல் இல்லை. பெண்ணின் அப்பா அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க. சொந்த வீடு, நிறைய பணம் இருக்கு. எல்லாமே பெண்ணுக்குத்தான். நாம் கேட்கிற சீர் எல்லாம் செய்ய ஒத்துக்குறாங்க. பெண்ணும் லட்சணமா இருக்கா..”
அம்மா விடாமல் அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்து பிரகாஷ் இடைமறித்தான்.
“சரி… சரி… எல்லாம் சரி, எனக்கு என்னவோ திருப்திகரமா இல்லைம்மா..”
“அதான் ஏன்னு கேட்கிறேன்?”
“கூடப் பிறந்தவங்க யாவரும் இல்லாமல் பெற்றோருக்கு ஒரே பெண்ணாய் இருப்பதால் தான் யோசிக்கிறேம்மா”
“என்னடா இது வேடிக்கையாயிருக்கு! இந்தக் காலத்துல ஒவ்வொருத்தரும் பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பமா இருந்தால் போதும்னு தவம் இருக்காங்க.
அரசாங்கம்கூட ‘சிங்கிள் கேர்ள் சைல்டு’ன்னா சலுகைகள் எல்லாம் வழங்குது. நீ என்னடான்னா தலைகீழாப் பேசறே!”
“புரியாமப் பேசாதாம்மா. நம்ம குடும்பத்தை எடுத்துக்கோ. எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி, தங்கைகள் ரெண்டு பேர் இருக்காங்க. உன்னோடப் பிறந்தவங்க ஆறு, ஏழு பேர்.
குடும்பத்துல நல்லது, கெட்டதுன்னு உறவினர் பல பேர் பக்கத்துலேயே இருக்காங்க. ஆனா, நீங்க ஏற்பாடு செய்திருக்கும் இடம் அப்படியில்லையே? பெண்ணின் அப்பா வழியிலும் எல்லோரும் போயிட்டாங்க.
அம்மா வழியிலுள்ள ஓரிருவரும் அயல் நாட்டில் இருக்காங்க. பெண்ணுக்கும் கூடப்பிறந்தவங்க யாருமில்லை.
மூணு வருஷங்களுக்கொரு தரம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களுரு, கேரளான்னு ஊர் ஊரா சுத்தற உத்தியோகம் எனக்கு. நாங்க தனியா இருந்து கஷ்டப்படனும்னா இந்த வரனை ஏற்பாடு செய்யுங்க.”
“டேய் என்னடா பேசறே? நீ என்னவோ யாருமே இல்லாத அனாதை மாதிரி பேசறே அவசர ஆபத்துன்னா உதவிக்கு வர நாங்க எல்லாம் மனுஷங்களாத் தெரியலையா உனக்கு?” அப்பா ஆக்ரோஷமாப் பேசவும்,
“எல்லாம் பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும்ப்பா. பிராட்டிக்கலா வாழ்க்கையை அனுபவிக்கும்போது தான் தெரியும். தனிமரம் தோப்பு ஆகுமா? சொல்லுங்க” என்றான் பிரகாஷ்.
“டேய் ரொம்பப் பிரமாதமா தான் பேசறே. நாங்க எல்லாம் வாழ்க்கையைப் பிராக்டிக்கலா அனுபவிக்காதது மாதிரியும் பேசறே. உன்னை மாதிரி ஒவ்வொருத்தரும் இப்படிப் பேசினால் ஒரே பெண்ணாய் பிறந்தவங்க கதி?”
அப்பா மீண்டும் விடாப்பிடியாக வாதம் செய்யவும்,
“என்னோட விருப்பத்தைத் தான் நான் சொன்னேன். பிறகு உங்க இஷ்டம்” என்றான் பிரகாஷ்.
“தனி மரம் தோப்பு ஆகாதுன்னு சொன்னியே பிரகாஷ். இந்த உலகத்துல பிறந்திருக்கிற ஒவ்வொருத்தருமே தனி மரம் தான்.
செழித்து வளர்ந்தோங்கி, பூத்துக் குலுங்கி, காயோடும் பழமோடும் மணம் வீசும் தோப்பாக குடும்பத்தை அமைத்துக் கொள்வதும் அவரவர் புத்திசாலித்தனத்திலும், சாமர்த்தியத்திலும், திட்டமிடலிலும்தான் இருக்கிறது. அது ஒரு தனிக்கலை.
‘திடுதிடு’ப்பென தோப்பு உருவாகுமா என்ன? தனிமரம் என்றைக்குமே தனிமரமாக இருப்பதில்லை. அதிலிருந்து இயற்கையின் ஒத்துழைப்போடு எண்ணற்ற மரங்கள் தோன்றுவதுதான் இயல்பு.
பிற்காலத்தில் என்ன நிகழுமோ, நடக்குமோ என்றெல்லாம் அனுமானிக்க முடியாது. சவால்களை தைரியமாக எதிர்க்கொண்டு போராடி ஜெயிப்பது தான் வாழ்க்கை. புரிஞ்சுக்கோ”
பிசிறில்லாத, ஆணித்தரமான அப்பாவின் பேச்சிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர ஆரம்பித்தான் பிரகாஷ்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998