நாம் யாரேனும் ஒருவரைப் பார்க்க நேரும் போது ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களின் படியே பார்ப்பவர்களை எண்ணுகிறோம். இதனைத் தான் தன்னைப் போலவே உலகம் என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.
அது ஒரு நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் நிழலில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீதும் பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது ஆலமரத்தினை விறகு வெட்டி ஒருவன் கடந்து சென்றான். மரத்தின் நிழலில் தூங்கிக் கொண்டிருப்பவனைப் பார்த்ததும் “இவன் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். உழைத்த களைப்பில் தான் இவன் அயர்ந்து உறங்குகிறான்.” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு திருடி இருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப் போட்டது போல இப்படி தூங்குகிறான்.” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் ஆலமரத்திற்கு அடியில் வந்தான். மரநிழலில் தூங்கிக் கொண்டிருப்பவனை உற்று நோக்கினான். பின்னர் “காலையிலேயே இவன் நன்றாக குடித்து விட்டான் போல் இருக்கிறது. அதனால் தான் குடி மயக்கத்தில் இங்கே இப்படி விழுந்து கிடக்கிறான்.” என்று சொல்லிச் சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியே வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த முனிவராகத் தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய இயலும்.” என்று கூறி அவனை வணங்கி விட்டுச் சென்றார்.
பின்னர் அவ்விடத்திற்கு சோம்பேறி ஒருவன் வந்தான். “இந்த பகல் நேரத்தில் வெயிலில் மரத்தடியில் படுத்துத் தூங்கி கொண்டிருக்கிறான் என்றால் இவன் ஒரு சோம்பேறியாகத் தான் இருக்க முடியும.” என்று சொல்லி அவ்விடத்தை விட்டுச் சென்றான்.
இவ்வாறாக அவ்விடத்திற்கு வந்த ஒவ்வொருவரும் தூங்கிக் கொண்டிருப்பவனைப் பார்த்து தங்களைப் போலவே எண்ணிக் கொண்டு அதாவது தங்களுடைய இயல்பின் படியே எண்ணினர்.
இப்படித் தான் நாமும் புதிதாக காண்போரை நம்முடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அதனால் தன்னைப் போலவே உலகம் இருப்பதாக் காண்கிறோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!