தன் முகம் தெரியும் போது

‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்பது பழமொழி. விருந்தினராகச் செல்லும்போது எவ்வளவு நாட்கள் அங்கே தங்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லுவதே இக்கதை.

முன்னொரு காலத்தில் தங்கப்பன் என்பவர் தகடூரில் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்லவரான அவருக்கு சூதுவாதில்லாத பாலு என்றொரு மகன் இருந்தான். அவனுக்கு திருமண வயது வந்தது.

தங்கப்பனும் தகடூருக்கு பக்கத்தில் இருந்த தம்பியூரைச் சார்ந்த ‘சந்திரா’ என்னும் பெண்ணை மணம் முடித்து வைத்தார்.

திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து சந்திரா தன்னுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பாலுவிடம் கூறினாள்.

பாலு தங்கப்பனிடம் “சந்திரா தன்னுடைய அம்மா வீட்டிற்குச் செல்ல விருப்பப்படுகிறாள். நானும் அவளுடன் சென்று வருகிறேன்” என்று கூறினான்.

“தாராளமாக நீ சந்திராவுடன் அவளுடைய தாய் வீட்டிற்குச் சென்று வா. ஆனால் தன் முகம் தெரியும் போது நீ அங்கிருந்து கிளம்பி வந்து விடு” என்று தன் மகனிடம் சொல்லி அனுப்பினார்.

பாலுவிற்கு தங்கப்பன் சொன்னது ஏதும் புரியவில்லை. எனினும் மனைவியுடன் அவளுடைய தாய் வீட்டிற்கு விருந்தினராகச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் தந்தை சொன்னது பற்றிய விளக்கம் ஏதும் கேட்காமல் மனைவியுடன் புறப்பட்டுச் சென்றான்.

சந்திராவின் தாய் வீட்டிற்கு பாலுவும் சந்திராவும் வந்ததும் சந்திராவின் பெற்றோர், சகோதர சகோதரிகள் மகிழ்சியுடன் வரவேற்றார்கள். ஆடு வெட்டி தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

பாலுவிற்கும் சந்திராவிற்கும் தலைவாழை இலை விரித்து மட்டன் குழம்பு, குடல் கறி, இரத்தப் பொரியல், ஈரல் வறுவல், எலும்பு சூப் என்று விதவிதமான அசைவ உணவு வகைகளைப் பரிமாறி விருந்தளித்தார்கள்.

சந்திராவின் தாய் வீட்டில் அளித்த விருந்தினை பாலுவும் சந்திராவும் ரசித்து உண்டார்கள்.

அவர்களின் உபசரிப்பில் பாலு திக்குமுக்காடி மகிழ்ச்சியில் திளைத்தான்.
மறுநாள் கோழி அடித்து கோழி வறுவல், கோழி சாப்ஸ், குழம்பு, முட்டை என விருந்து படைத்தார்கள்.

அதற்கடுத்த நாள் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், முட்டைக்கோஸ் பொரியல், பீன்ஸ் கூட்டு, அப்பளம், பாயாசம், வடை என விருத்தளித்தார்கள்.

இவ்வாறாக ஒருவாரம் தடபுடலான உணவு வகைகளைப் படைத்து பாலுவை அசத்தினார்கள். விருந்துணவின் மகிழ்ச்சியில் பாலு தங்கப்பனையும், அவர் சொன்ன சொல்லையும் மறந்தே போனான்.

மறுவாரத்தில் ஓர் நாள் காலையில் பாலு ‘இன்றைக்கு என்ன விருந்தோ?’ என்று எண்ணியபடி சாப்பிட அமர்ந்தான்.

அப்போது சந்திராவின் தாய் ஒரு குண்டானில் பழைய சாதமும், தண்ணீரும் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் கொண்டு வந்து ‘இன்று சீக்கிரம் எழுந்து சமைக்க முடியவில்லை. அதனால்தான் இன்று பழைய சோறும் ஊறுகாயும்’ என்று சொல்லி வைத்தாள்.

பாலுவும் குனிந்து குண்டானில் இருந்த பழைய சோற்றினை தண்ணீருடன் அள்ளி வாயில் வைக்கும்போது தண்ணீரில் தன் முகம் தெரிவதைக் கண்டான்.

அப்போதுதான் ‘தன் முகம் தெரியும் போது நீ அங்கிருந்து கிளம்பி வந்து விடு’ என்று தங்கப்பன் கூறியது பாலுவின் நினைவிற்கு வந்தது.

உடனே தன்னுடைய மனைவி சந்திராவை அழைத்துக் கொண்டு பாலு தகடூரை நோக்கிக் கிளம்பினான்.