தமிழகத்தில் ஆங்கிலத்தின் நிலை

தமிழகத்தில் ஆங்கிலத்தின் நிலை என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், 1982ம் வருடம் பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

பாசாங்குப் பேச்சு

பரங்கி மொழிப் பக்தர்கள் கொள்கை அளவில் தமிழைப் பயிற்சி மொழியாக்க ஒப்புக்கொள்கிறார்கள். ஒப்புக்கொண்டு, விஞ்ஞானப் புத்தகங்கள் தமிழில் போதிய அளவு இல்லையே?” என்கின்றனர்.

“புத்தகங்களைத் தயாரிக்கத் திட்டமிடுவோம்” – என்று நாம் கூறினால், “தமிழில் கலைச் சொற்கள் இல்லையே?” என்று கண்ணீர் வடிக்கின்றனர். கலைச் சொற்களுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

ஆங்கிலம் அல்லது சர்வதேசச் சொற்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றால், “பயிற்சி மொழி இந்தியா முழுவதற்கும் ஒரே மொழியாக இருக்க வேண்டும்” என்று கூறி, தடம்புரளுகின்றனர்.

இவர்களோடு சிறிது வாதிட்டுப் பார்த்தால், இவர்களுடைய அந்தரங்க சுத்தியிலேயே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது.

இவர்களுடைய ஒரே குறிக்கோள் “ஆங்கிலமே என்றென்றும் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்” என்பதுதான்!

சந்தித்தால் கேளுங்கள்

நீங்கள் பரங்கி மொழிப் பக்தர்களைச் சந்தித்தால், “உலகில் சுதந்திரமாக வாழும் எந்த ஒரு நாட்டிலேனும் அந்நிய மொழி, பயிற்சி மொழியாக இருக்கிறதா?” – என்று கேட்டுப் பாருங்கள்.

“சோவியத் ருஷியாவில் கூட ஆங்கில மொழி கற்கிறார்கள்! சுவிட்சர்லாந்தில் ஐந்து மொழிகள் கற்கப்படுகின்றன. இன்னும் அந்த நாட்டில் – இந்த நாட்டில்..” என்றெல்லாம் நாடுகளின் பெயர்ப் பட்டியல் கொடுத்து அங்கெல்லாம் ஆங்கிலமொழியை மக்கள் கட்டாயமாகப் பயில்வதாகச் சான்று காட்டுவார்கள்.

இது நாம் கேட்ட கேள்விக்கு நேரான பதிலன்று, நாம் கேட்டது, பயிற்சி மொழிபற்றி, பரங்கி மொழிப் பக்தர்கள் பதில் கொடுப்பது பாடமொழி பற்றி.

இது, ஏமாற்று வித்தை! சோவியத் ருஷ்யா போன்ற நாடுகளின் கல்வித் திட்டத்தில் ‘ஏதேனுமொரு அன்னிய மொழியைக் கற்க வேண்டும்’ என்பதே கட்டாயம்.

இந்தியாவைப் போல அங்கெல்லாம் ஆங்கிலம் ஒன்றை மட்டுமே கட்டாயப் பாடமாக்கவில்லை. என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

தமிழகத்தில் தமிழே பயிற்சி மொழியாக – நீதிமன்ற நிர்வாக மொழியாக வந்த பிறகு, இந்த நாட்டுப் பள்ளிகளில் சுவிட்சர்லாந்தைப் போலவோ, ருஷ்யாவைப் போலவோ அன்னிய மொழி ஒன்று கட்டாயப்பாட மொழியாக இருப்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை.

இன்னும் சொன்னால் ஒரு இடைக்காலத்திற்கு அந்த அந்நிய மொழி ஆங்கிலமாகவே இருப்பதையும் நாம் வரவேற்கிறோம்.

அது போதாதென்றால், பரங்கி மொழிப் பக்தர்கள் தங்கள் சொந்தச் செலவில் ஆங்கில பாணியில் கல்வி பயில்வதற்குக் கான்வெண்டு’ பள்ளிகள் – கல்லூரிகள் அமைத்துக் கொள்வதையும் நாம் எதிர்க்கவில்லை.

ஆகவே, “ருஷ்யாவைப் பார்! சுவிட்சர்லாந்தைப் பார்!” என்ற பேச்சுப் பொருளற்றது. நாம் சொல்வதெல்லாம் அன்னிய மொழியைப் படிக்கக் கூடாது என்பதல்ல.

பல்கலைக்கழகப் பாடங்களைப் போதிக்கும் மொழியாக ஒரு அந்நிய மொழி இருக்கக் கூடாது என்பது தான்.

தமிழில் விஞ்ஞானப் பாடப் புத்தகங்கள் இல்லாததைக் காரணம் காட்டி ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கு ஆசிகூற முயல்கின்றன.

பல்கலைக் கழகத்தின் கபட நாடகம்

தமிழில் விஞ்ஞான பாட புத்தகங்களைத் தயாரிக்க வேண்டிய கடமை யாருடையது? சட்டப்படி இதில் முதல் முயற்சி எடுக்க வேண்டிய கடமை சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய தல்லவா?.

இந்தக் கழகம் இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடாத காரணம் என்ன?

1926ஆம் ஆண்டிலேயே, “விரும்புகின்ற கல்லூரிகள் தமிழைப் பயிற்சி மொழியாகச் செய்து கொள்ளலாம்” என்ற ஒரு தீர்மானம் சென்னைப் பல்கலைக்கழகத்தல் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்திற்குப் பிறகேனும் விஞ்ஞானப் பாடங்களைத் தமிழில் தயாரிக்கும் கடமையை சென்னைப் பல்கலைக்கழகம் நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா? நிறைவேற்றவில்லையே, ஏன்?

1939-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் மொழி பயிற்சி மொழி ஆக்கப்பட்டது. அதனைச் சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்க்கவில்லை.

அடுத்தாற் போலக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்சிமொழி ஆக்குவது என்ற உறுதியுடன் தான், உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்சிமொழி பீடத்திலிருந்து ஆங்கிலம் அகற்றப்பட்டது.

இந்த நிலைக்குப் பிறகேனும் விஞ்ஞானப் பாட நூல்களைத் தமிழில் தயாரிக்க சென்னைப் பல்கலைக் கழகம் திட்டமிட்டிருக்க வேண்டும்.

அப்போதும் செய்யவில்லையே, ஏன்? இற்றை நாள் வரைகூட அத்துறையில் சென்னைப் பல்கலைக் கழகம் தன் கவனத்தைச் செலுத்திதாகத் தெரியவில்லையே, காரணம் என்ன?.

உண்மை இதுவாக, ‘தமிழில் விஞ்ஞானப் பாட நூல்கள் இல்லையே?” என்று கூறுவது, வெறும் பாசாங்குவாதம்.

தமிழகத்தில் ஆங்கிலத்தின் நிலை

ஆங்கிலம், தமிழருக்கும் தமிழகத்துக்கும் அன்னை மொழியல்ல, அந்நிய மொழி!

‘இந்தியர்’ என்ற தேசிய சமுதாய ஒருமைப் பாட்டினை ஒப்புக் கொள்ளும் தமிழர்களுக்கு, இந்தி மொழியோடு இயற்கையாகவே உறவு ஏற்பட்டுள்ளது.

அந்த உறவு, அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியும் உறுதிப்பட்டு விட்டது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் இந்தி மொழியோடு தமிழகத்திற்குள்ள தார்மீக உறவுக்கு ஜனநாயக முத்திரையும் போடப்பட்டு விட்டது.

போதாக்குறைக்கு வரம்பு கட்டப்படாத ஒரு காலத்திற்கு ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் 1965க்கு மேல் இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக வருவதற்கு தென்னிந்திய ராஜ்யங்களும் இந்தி எதிர்ப்பாளர்களும் இசைவு தெரிவித்துவிட்டார்கள்.

இந்தி மொழிக்குள்ள இந்தச சந்தர்ப்ப, சாதனங்கள் ஆங்கில மொழிக்கு இல்லை. ஆங்கிலம், இந்தியைப் போலத் தமிழகத்துக்கு தேசிய உறவு மொழியல்ல. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தூர தேசத்து மொழி.

இலக்கண, இலக்கிய ரீதியிலும் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் அணுவளவும் தொடர்பில்லை. இவை, ஆராய்ச்சி தேவையில்லாமலே அங்கீகரிக்கப்பட வேண்டிய உண்மைகள்.

இத்துடன், கடந்த 150 ஆண்டுகளாக, ஆங்கில மொழியின் வாழ்விலே – வளர்ச்சியிலே, நமது தாய்மொழியான தமிழ் அழிந்து வந்ததையே கண்டோம். ஆங்கிலக் கல்வியின் விளைவாக, ஒரு புதிய சாதி உயர்சாதி சிருஷ்டிக்கப்பட்டு விட்டதையும் பார்க்கிறோம்.

இந்த நிலையில், ஆங்கிலத்தோடு தமிழ் மொழி நல்லெண்ணத்துடன் உறவு கொள்ள முடியுமா? அத்தகைய உறவு இப்போதே இருப்பதாகச் சொல்வது பொய்யல்லவா?.

தமிழகப்பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயப் பாடமொழியாக இத்துணைக் காலமும் இருந்து வந்ததென்றால், பல்கலைக் கழகங்களிலும் பயிற்சி மொழி என்ற ஆதிக்க வாழ்வினைப் பெற்றிருந்ததென்றால், அதற்குக் காரணம் என்ன?.

தமிழ் மக்கள், தங்கள் விருப்பத்தின் பேரில் ஆங்கில மொழியைக் கற்க முன் வந்தார்களா? – இல்லை. தமிழைவிட ஆங்கிலம் வளமான மொழி என்பதற்காகத் தான் அந்த மொழியில் தமிழ் மக்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டதா? அதுவுமில்லை.

ஆங்கிலத்திற்கு இன்றுள்ள விஞ்ஞான ஆற்றல், வாழ்வு, வளம், கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் நுழைந்த காலத்திலேயே இருந்தனவா? அப்படியுமில்லை.

சுருங்கச் சொன்னால், தமிழகம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அம்மொழி தமிழகத்துப் பள்ளிகளிலே கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களிலும் போதனா மொழியாக்கப்பட்டது.

பாடமொழியாகப் பயில்வோம்

பரங்கி மொழிப் பக்தர்களைக் கேட்கிறோம், தமிழகம் ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைப்படாமலிருந்திருந்தால் நமது தாயகத்தில் ஆங்கில மொழிக்கு இன்றுள்ள ஆதிக்கமும் அதிகாரமும் ஏற்பட்டிருக்குமா?

ஒரு போதுமில்லை. ஆகவே, இன்றளவும் ஆங்கில மொழி, அறிவு மொழி என்பதற்காக அல்லாமல், ஆதிக்க மொழி என்ற அளவிலேயே தமிழர் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ஆதிக்க நிலையகன்று, தமிழர் தங்கள் விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொண்ட பாடமொழியாக மட்டும் ஆங்கிலம் நீடிப்பதென்றால், அதிலே நமக்கு ஆட்சேபனை இல்லை.

அந்த நிலையிலும், ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் தேவையில்லை. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்படலாம்.

அங்கும் விருப்பப் பாடமாகத் தான் , கட்டாயமாக அல்ல. கல்லூரிகளில் ஆங்கிலம் இலக்கிய மொழியாகப் பயிலப்படலாம்.

ஆனால், பயிற்சி மொழியாக இருக்க ஆங்கிலத்தை அனுமதிக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால், ஒரு ஆங்கிலேயனைப் போல அல்லது ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தைப் போல, தமிழர் ஆங்கில மொழியைப் பயில முடியாது, பயிலவும் கூடாது.

‘தமிழர்’ என்ற உணர்வோடு சுதந்திர நாட்டின் மக்களுக்குரிய தாய்மொழிப் பற்றோடு, தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாத வகையில் ஆங்கிலம் பயிலலாம்.

இதுவே, நம் கொள்கை, ஏன்? ஊலக நியதியும் இது தான். நீண்ட காலம் இந்த நாட்டில் ஆங்கில மொழி பயிலப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலம் பிரதான இடத்தைப் பெற்றுவிட்டது.

ஒரு இடைக்காலத்திற்கு ஆங்கில மொழியானது தமிழகத்துப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக இருக்கலாம். அதுவும், ஆரம்பப் பள்ளியில் அல்ல, உயர்நிலைப் பள்ளி தொடங்கி கல்லூரிப் படிப்புவரை.

ஆங்கிலேயரும் சிரிப்பர்

இதுவரை கூறியவற்றால், தமிழ் மொழிப்பற்றாளரின் பார்வையில், நிகழ்கால-எதிர்காலத் தமிழகத்தில் ஆங்கில மொழிக்குரிய அந்தஸ்து என்னவென்பது தெளிவாக்கப்பட்டு விட்டது.

ஆனால், பரங்கி மொழிப் பக்தர்களாக உள்ள தமிழர்கள், தாய்மொழிப் பற்றாளரின் இந்தக் கொள்கையை ஏற்கத் தயாராக இல்லை.

அவர்கள் குறிக்கோள், ஆங்கில நாட்டு மக்களைப் போலவே தமிழகத்து மக்கள் ஆங்கில மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டும் என்பதுதான்.

தெளிவாகச் சொன்னால், நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் அமுலிலிருந்த கல்வி முறையே, சுதந்திரம் பெற்றுவிட்ட தமிழகத்திலும் அமுல் நடத்தப்பட வேண்டும். என்பதுதான்.

இதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் ஆங்கிலத்தின் நிலை.

இதனை ஏற்பதை விட மானக்கேடு தமிழர் வாழ்வில் வேறு இருக்க முடியாது! இவர்களுடைய புத்தியைப் பார்த்து ஆங்கிலேயனும் சிரிப்பான், சிரித்துக்கொண்டுதான் இருக்கிறான்.

பரங்கி மொழிப் பக்தர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகச் சொல்லும் காரணங்களை மேலும் ஆராய்வோம்.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.