போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே
தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்
அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே
அறுவடை நெற்கதிர்கள் மஞ்சள் போர்வையிட
அகலாத விழியிரண்டும் அதன்மேல் படர்ந்திடுமே
ஆநிரை கூட்டமிங்கு ஆனந்தம் கொண்டிடவே
அதிகாலை முதலாக அலங்காரம் செய்திட்டு
முக்கல் அடுப்பிட்டு முக்காலம் உணர்ந்திட்ட
மதிநிறை மாந்தர் நற்சொல் கேட்டிங்கு
செம்பொன் பானையிட்டு நன்னீரும் பாதியிட்டு
அடுப்பிடையில் விறகிட்டு அக்னியை ஏற்றிவிட்டு
கொதிநிலை கண்டுணர்ந்து மதிசூழ் மங்கையவள்
மறுகணமே இட்டிடுவாள் புத்தரிசி பானையிலே
செம்பொன் பானையிலே வெண்நுரை பொங்கிவர
விண்ணவரை நினைவிட்டு பொங்கலோ பொங்கலென்போம்
தலைவாழை இலையிட்டு மலையாக பொங்கலிட்டு
பூசணியும் சேர்ந்திடவே நற்படையலாய் மாறிடுமே
கருவண்டு விழிகொண்ட காளைக்கும் பசுவிற்கும்
சுவைமிகு படையலினை சுகம்பெற ஊட்டிடுவர்
உற்றாரும் உறவினரும் ஒன்றாக கண்டுணர
காணும் பொங்கலிலே காணாத நிகழ்விதுவே
தமிழரின் திருநாளை தரணியும் வியந்திடுமே
மரபினில் மாறாத மனிதராய் வாழ்ந்திடவே…
க.வடிவேலு
தகடூர்
மறுமொழி இடவும்