செந்தமிழே! என் தமிழே!
தித்திக்கும் செங்கரும்பை ஒத்தவளே
தேன் சிந்தும் கலையழகு கொண்டவளே
எத்திக்கும் என் நா மணக்கும் மலர்தமிழே
புத்திக்குள் புகுந்தென்னை கவிப்பூவுலகில்
கால்பதிக்க வைத்த வளர்தமிழே
சித்திர செவ்விதழ்கள் பல
சித்தரிக்கும் என் தமிழே
கத்தரி வெயிலிலும் எமை
உறையச் செய்யும் பனித்தமிழே
காப்பியங்கள் உனை ஏந்த
காலக் கப்பல் உனை சுமக்க
அசையாத கட்டுமரம் போல்
ஆடிடும் அலைநடுவில்
மிடுக்கோடு பவனி வரும்
மிகையழகே என் தமிழே
காலங்கள் பல கடந்தும்
தமிழ்ப்பால் அதை நிதம் ஊட்டி
தாய்மை குணம் நீ அடைந்தும்
கன்னி அழகு குன்றா
காரிகையே என் தமிழே
கட்டழகு வடிவமே
கருங்குயிலின் இனிமையே
சொட்ட சொட்ட நாவில் எழும்
தீஞ்சுவையே என் தமிழே
கல்லும் மண்ணும் கூட
உனை அடுத்துப் பிறந்ததுவோ
என் நாவில் நீ பிரள
எனதுயிர் என்ன தவம் செய்ததுவோ
கவிதையில் கமழும் கவினுறும் தமிழே
காவிய சிம்மாசனம் ஏறிய குறளோவியமே
கண்போல உனை எண்ணி
கருத்தெல்லாம் உனை வைத்து
மெத்த மேதை ஆனாலும்
பெற்ற தாயை மறவாது
சத்தியமாய் என் தமிழே
உனை நித்தம் நித்தம் தொழுவேனே
பெண்ணோ பேர்அமிழ்தோ
உனை நெஞ்சில் நிறுத்திவிட்டேன்
கண்ணே கலைத்தமிழே
உன் மீது காதல் கொண்டேன்
கடல் தாண்டி பல நிலம் சென்று
கவிச்சிம்மாசனம் படைத்தவளே
இம்மண்ணே அழிந்தாலும்
உனை மறவாது நான் வாழ்வேன்
என் அன்னை குறளினிலே
உனைக் கண்டேன் முதன்முதலில்
என் உயிர் போகும் நொடிவரை
உனை சுமப்பேன் நெஞ்செழுத்தினில்!
சி.பபினா B.Sc
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!