தமிழா ஏமாறாதே

தமிழா ஏமாறாதே என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

முன்ஷியின் இந்தி வெறி

பயிற்சி மொழி எதுவாக இருப்பினும், இந்தியா முழுவதும் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்பது ஒரு வாதம். இந்த இடத்தில், பரங்கி மொழிப் பக்தர்களும் ஒன்றுபடுகின்றனர். பிரதேச மொழிகளுக்கு எதிராக!

இதோ சான்று:

ஆங்கிலத்தை வாழ்கையின் பலதுறைகளிலிருந்து அறவே ஒழித்திட வேண்டும் என்ற இயக்கங்கள் பலமாக நடக்கின்றன.

ஆங்கிலம் எவ்வளவு சீக்கிரமாக நீக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கரமாக நீக்கிரமாக இந்தியினால் அதன் இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

நடுவில் இருக்கும் இடைவெளியில் பிரதேச மொழிப்பற்று நுழையப் பார்க்கிறது. ஆங்கிலத்தை நீக்கிவிட வேண்டுமென்ற அளவுக்கு மீறிய வைராக்கியத்தின் மூலம், இந்தி மொழிக்கு எதுவும் லாபம் ஏற்பட்டு விடவில்லை.

அதற்கு மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டிருக்கிறது. நமது தேசபற்றுக்குத் தற்பொழுது கிரஹண பீடை பிடித்திருக்கிறது. தேசத்தைத் துண்டாடும் அளவுக்கு மாகாணப்பித்துத் தலைக் கேறுகிறது.

“ஆங்கிலத்தை நீக்கும் விஷயம் ஏதோ மாபெருந் தேசத்தொண்டு என்று சாதாரணமாகப் படலாம். ஆனால், இன்றைய தினம் நமக்குச் சம்பவிக்க இருக்கும் மிகப் பெரியஅபாயம் பிரதேச மொழிப்பற்றுதான்.”

இப்படிக் கூறியவர், திரு.கே.எம்.முன்ஷியாவார். அவர் பெயரால்            7-3-54 ‘தினமணி கதிரில்’ வெளியான கட்டுரையிலிருந்தே மேற்கண்ட பகுதியை எடுத்துக் காட்டியுள்ளோம். அந்தக் கட்டுரை, அவர் வானொலியில் நிகழ்த்திய சொற்பொழியாகும்.

தமிழா ஏமாறாதே!

இப்போதைக்கு முன்ஷி ஆங்கில மொழியை ஆதரிப்பதில் அக்கறை காட்டுகிறார். அதன் உள்நோக்கம் இந்திக்கு எதிரான தல்ல. இந்தி மொழி தயாராகும் வரை, நாளை அது அடையவேண்டிய பயிற்சி மொழிப் பீடத்தைப் பிரதேசமொழி பிடித்துவிடாமல், ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைத் தற்காலிகமாகக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

இதனை வெளிப்படையாகவே கூறிவிட்டார் திரு. முன்ஷி. ஏன்? “என்றென்றும் ஆங்கிலம்” என்று இன்று கூறுவோரெல்லாம், அந்த நோக்கம் நிறைவேறாவிட்டால், “எங்கெங்கும் இந்தி”- என்று கோஷிக்கவும் தயங்கமாட்டார்கள்,

அவர்கள் குறிக்கோள் ஒரு மொழிகொண்டு குமரி முதல் இமயம் வரை உத்தியோக வேட்டை நடத்த வேண்டும் என்பதுதான். அதற்கு அதிகமாக உயர்ந்த லட்சியம் எதுவும் அவர்களிடமில்லை.

பரங்கிமொழிப் மொழி பக்தர்களுக்கும், இந்தி மொழி வெறியர்களுக்கும் ஒரு விஷயதில் ஒற்றுமை உண்டு. அது பிரதேச மொழி இந்தியாவில் பயிற்சி மொழியாக விடாமல் தடுப்பதுதான்.

பயிற்சிமொழி இந்தியா முழுவதற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுவதில் பொருளிருப்பது போலத் தோன்றலாம். அது வெறும் மாயை!

“தமிழில் மருத்துவக் கலையோ, பொறியற்கலையோ பயின்று தேர்வு பெறும் ஒரு தமிழர் வடக்கே சென்று தொழில் புரிய முடியுமா? அத்தகையவர்கள் மத்திய அரசாங்க நிர்வாகத் துறையில் திறமையுடன் பணிபுரிய இயலுமா?” -என்றெல்லாம் கேட்டுப்படுகின்றன. இது அர்த்தமற்ற கேள்வி

இந்தி-ஆங்கில ஞானம்

தமிழில் மருத்துவக் கலையோ, பொறியிற்கலையோ கற்றுத் தேர்வுபெறும் ஒருவர் 15 ஆண்டு காலம் ஆங்கில மொழியையும் பயின்று, அதில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார்.

அத்துடன் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் தொட்டே இந்தியையும் கட்டாயப் பாடமாக ஏற்று, சுமார் எட்டாண்டு காலம் அம்மொழியை பயின்று தேர்வு பெற்று இருப்பார்.

இப்படி, ஆங்கில- இந்தி மொழிகளில் பெற்ற புலமையைக் கொண்டு எந்த ஒரு பட்டதாரித் தமிழரும் வடஇந்தியாவில் மட்டுமல்லாமல், அதற்கப்பாலுமுள்ள ஆங்கில மொழி உலகத்தில் உத்தியோகம் பெற்றுத் திறமையாகப் பணிபுரிய முடியும்.

ருஷ்ய மொழியில் தொழில் நுட்பக் கலை பயின்ற ருஷ்ய நிபுணர்கள் இந்தியாவிற்கு வந்து ரூர்கேலா தொழிற்சாலையை நிர்மாணிப்பதில் நமக்கு உதவி புரியவில்லையா?.

ருஷ்யமொழி பயிலாத அமைச்சர் பக்தவத்சலம் ஆங்கில மொழி வழங்காத சோவியத் ருஷ்யாவுக்குச் சென்று அங்குள்ள விவசாய முன்னேற்றத்தை ஆராய்ந்து அறிந்து வரவில்லையா?

சீன மொழியில் ஞானமில்லாத இந்தியர் சீனாவுக்குத் தூதுவராக அனுப்படவில்லையா?

இந்தோனேசியர் தாய்மொழியில் ஞானமில்லாத டாக்டர் சுப்பராயன் அவர் நம் நாட்டில் இந்தியத் தாதுவராக இருந்து சிப்பந்திகளின் துணையுடன் செயல்புரியவில்லை?

இதெல்லாம் சாத்தியமாகிறது என்றால், இந்தி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைபெற்ற ஒரு தமிழர் தமிழிலே விஞ்ஞானத் தொழில் பார்ப்பது மட்டும் எப்படிச் சாத்தியமில்லாமற்போகும்?

ஒரே மொழி வாதம்

இந்தியாவில் பல மொழிகள் வழங்குவதால், விஞ்ஞானத் தொழில் நுட்பக்கலை பயில பாரதம் முழுவதற்கும் ஒரே மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுவோர், சோவியத் ருஷ்யாவைப் பார்க்கட்டும்.

அந்த நாட்டில் எழுத்து வடிவத்தோடு கூடிய பதினெட்டு மொழிகள் பயிற்சி மொழிகளாக இருந்து வருகின்றன. ஆம், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியே பயிற்சி மொழியாக்கப்பட்டிருக்கின்றன.

அதுபோல இந்தியாவிலும் செய்வதால் கேடொன்றுமில்லை. சோவியத் ருஷ்யாவில் முடிந்தது இந்தியாவில் ஏன் முடியாது?.

“தமிழில் முடியாது” என்று சொல்லும் இவர்கள் “முடியவும் கூடாது” என்ற எண்ணம் உடையவர்களே!

ஒரே வாசகத்தில் சொன்னால்,தமிழ் மொழியின் வளர்ச்சியில் இவர்களுக்கு அக்கறையில்லை.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.