தமிழில் நாவல் இதழ்கள்

இன்றும் நாளிதழ் கடைகளிலும், பழைய புத்தகக் கடைகளிலும் நாவல் இதழ்கள் காணக் கிடைக்கின்றன.

கண் முன் தொலைக்காட்சி நாடகங்கள் இருந்தாலும் கூட, மகளிர், நாவல் இதழ்களை வாங்கிச் செல்வதாகவும் வாடகையின் பேரில் எடுத்துச் செல்வதாகவும் பழைய புத்தகக் கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, லைட் ரீடிங் என்ற அடிப்படையிலான நாவல் இதழ்களுக்கு வரவேற்பு குறையவில்லை என்பது புரிகிறது.

திகம்பர சாமியார் உள்ளிட்ட பல மர்ம நாவல்கள் எழுதிய வடுவூர் துரைசாமி அய்யங்கார், இந்திய விடுதலைக்கு முன்பாக, நாவல்களுக்கு என்று பிரத்யேக பத்திரிகை நடத்தியதாக இலக்கியத் திறனாய்வாளர் /எழுத்தாளர் க. நா. சுப்பிரமணியன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

திகம்பர சாமியார் – எம். என். நம்பியார், பல வேடங்களில் நடிக்கும் திரைப்படமாக வெளிவந்தது.

அவர் எழுதிய மேனகா என்ற நாவலும் திரைப்படமாக வெளிவந்தது. கலைவாணர், முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்கள், தமிழில் பல புனைகதைகளை எழுதியவர். இவருடைய நாவல்தான் சித்தி திரைப்படம். வை.மு.கோதைநாயகி, ஜகன்மோகினி என்ற நாவல் இதழைத் தொடங்கி நடத்தினார்.

அதன் பின்னர், அறுபதுகளிலிருந்து புகழ்பெற்ற நாவல்களை ஒரே புத்தமாகத் தரும் ராணிமுத்து நாவல் இதழ் வெளிவரத் தொடங்கியது.

பின்னர் புத்தம் புதிய நாவல்களைத் தாங்கி வரத் தொடங்கியது. இன்றளவும் வாசகர்கள் பலர் ராணிமுத்து இதழை வாங்கி வாசிக்கின்றனர். முன்பு மாத இதழாக இருந்தது இப்பொழுது வார இதழாக வந்து கொண்டிருக்கிறது.

எழுபதுகளின் இறுதியில், நாவல் இதழ்கள் பெருகத் தொடங்கின. பத்திரிகை உலகில் பல புதுமைகளைப் புகுத்திய குமுதம் குழுமத்தின் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள், ‘மாலைமதி‘ என்கிற நாவல் இதழைத் தொடங்கி நடத்தினார்.

வாசகர்கள் இடையே இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மாலைமதி இதழில் வெளியான பல நாவல்கள் திரைப்படங்களாக ஆக்கப்பட்டன. அவற்றை வெற்றிப் படங்கள் என்றும் சொல்லலாம்.

அவற்றுள் சில – மகரிஷியின் புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், ராஜேந்திர குமார் எழுதிய வணக்கத்துக்குரிய காதலியே – இவை மாலைமதியில் வெளிவந்து திரைப்படமானவை.

இந்த காலகட்டத்தில், தினமணி நிறுவனம், கதைக்கதிர் என்ற நாவல் இதழைத் தொடங்கியது. எண்பதுகளில் பல நாவல் இதழ்கள் வெளிவரத் தொடங்கின.

மேகலா நாவல் இதழில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோரின் நாவல்கள் வெளிவந்தன.

இதயம் பேசுகிறது வார இதழை நடத்தி வந்த இதயம் பேசுகிறது மணியன் அவர்கள், தம்முடைய பெயரில் மணியன் மாத இதழை நாவல் இதழாக நடத்தினார்.

திறமையானவர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் பத்திரிகை உலக ஜாம்பவான், ஆசிரியர் சாவி அவர்கள், பல பத்திரிகைககளை நடத்தி வந்த போது, மோனா மாத நாவல் இதழை சில மாதங்களுக்கு நடத்தினார்.

எண்பதுகளில் சில காலம், ஜெயகாந்தன் அவர்களின் ஆசிரியத்துவத்தில் கல்பனா என்ற பெயரில் நாவல் இதழ் வெளிவந்தது.

மக்கள் குரல் மாலை நாளிதழ் நிர்வாகம், நவரத்தினம் என்கிற நாவல் இதழை நடத்தியது.

தொண்ணூறுகளில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருநாவல் இதழ் என்ற கான்செப்ட்டில் பல நாவல் இதழ்கள் வரத் துவங்கின. மாலைமுரசு குழுமத்தின் தேவி வார இதழுக்குப் பிறகு, கண்மணி என்ற நாவல் இதழ் வெளிவந்தது.

பாலகுமாரன் அவர்களின் பழைய /புத்தம் புதிய நாவல்களைத் தாங்கி பல நாவல் இதழ்கள் வெளிவந்தன.

இந்த காலகட்டத்தில் பாக்கெட் நாவல் அசோகன், தம்முடைய பாக்கெட் நாவல் இதழ் மூலம் வாசகர்களை ஈர்த்தார்.

ராஜேஷ் குமார், சுபா, ரமணி சந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்ட எழுத்தாளர்களுக்காக தனி நாவல் இதழ்கள் வெளியிடப்பட்டு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன.

அசோகன், பாக்கெட் நாவல், கிரைம் நாவல், குடும்ப நாவல் இதழ்களை நடத்தினார்; நடத்தி வருகிறார்.

தொலைக்காட்சி தொடர்கள் கோலோச்சும் இந்த காலகட்டத்திலும் பல்வேறு நாவல் இதழ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“தமிழில் நாவல் இதழ்கள்” மீது ஒரு மறுமொழி

  1. […] தமிழில் நாவல் இதழ்கள் உலகம் சுற்றிய தமிழன் – ஏ.கே.செட்டியார் […]