என் நண்பர் ஒருவருக்கு பிரபல வங்கி ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பெண் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார்.
நண்பர் தமிழில் பேசினார்.
அந்தப் பெண் அவரிடம் ஆங்கிலத்தில், “சார், நீங்க பேசுறது எனக்குப் புரியவில்லை; எந்த மொழியில் உங்களுடன் பேச வேண்டும்” என்று கேட்டிருக்கின்றார்.
அவர் “தமிழில் பேசலாம்” என்று சொன்னார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவருக்கு தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் மூன்றும் நன்றாகவே தெரியும்.
உடனே அந்தப்பெண் இணைப்பைத் துண்டித்தாள். அடுத்த இரண்டு நிமிடங்களில் தமிழில் அவருக்கு அழைப்பு வந்தது.
நான் நண்பரிடம் கேட்டேன், ” உங்களுக்குத்தான் மூன்று மொழிகளும் தெரியுமே, பிறகு ஏன் தமிழ் வேண்டும் என்று இணைப்பைத் துண்டித்தீர்கள்” என்றேன்.
அதற்கு அவர் “எனக்கு மூன்று மொழிகளும் தெரியும்; தேவைப்படும்போது தேவையான மொழியை நான் பயன்படுத்துவேன். ஆனால் நான் இப்போது தமிழில் பேசச் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கின்றது” என்றார்.
“என்ன தமிழ்ப் பற்றா?” என்றேன்.
உடனே அவர் சிரித்துக் கொண்டே “தமிழ்ப் பற்று மட்டுமல்ல; தமிழர் பற்றும்” என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன். அவர் ஒரு விளக்கம் கொடுத்தார்.
ஆங்கிலம் அல்லது இந்தியில் வரும் எந்த வங்கி அல்லது மற்ற நிறுவன அழைப்பையும் நாம் தமிழில் பேசுவோம் என்று முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு இரண்டு மொழிகளும் தெரிந்திருந்தாலும் தமிழில் பேச வேண்டும்.
அப்போது தான், அர்களுக்கு தமிழில் வாடிக்கையாளர் சேவை செய்யவேண்டிய அவசியம் புரியும்.
இதனால் தமிழ் மட்டுமே அறிந்த வாடிக்கையாளர்களுக்கும் நல்ல சேவை கிடைக்கும்.
மேலும் தமிழ் அறிந்த நமது பிள்ளைகளுக்கு உரிய வேலை வாய்ப்புகள் இத்துறைகளில் கிடைக்கும்.
தற்போது வாடிக்கையாளர் சேவை துறையில் பலவித வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவோம் எனக் கூறினால் தான் அந்த வேலைகள் நமக்கு கிடைக்கும். இதில் கொஞ்சம் உறுதியாக இருக்கலாமே.
அவர் இவ்வாறு கூறியதும் எனக்கு அவர் மீது மரியாதை பல மடங்காக உயர்ந்தது.
உயர்ந்த நிலையில் இருக்கும் பலர் தமிழை மறந்து விட்டார்கள் என்ற என் எண்ணமும் உடைந்தது.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!