தமிழில் முடியுமா?

தமிழில் முடியுமா? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

தற்போதைய நிலையில், தமிழில் விஞ்ஞானக் கலைச்சொற்கள் போதுமான அளவில் இல்லை என்பது எல்லோருக்கும் அறிந்ததே.

ஆனால், அதற்குக் காரணம் தமிழின் திறமையின்மையா?

இல்லை.

அன்றே செய்திருந்தால்?

விஞ்ஞானக் கலைகள் பற்றிய பாடங்களைப் பள்ளிகளில் போதிக்க தொடங்கியபோதே, ஆங்கிலத்துக்கு பதிலாகத் தமிழைப் பயிற்சி மொழியாக்கி இருந்தால் இதற்குள் விஞ்ஞானச் சொற்கள் தமிழில் கொள்ளை கொள்ளையாகக் குவிந்திருக்கும்.

அப்படி ஒரு வாய்ப்புத்தராததால், தருவதில்லை என்ற முடிவுடன் பரங்கிமொழியை வாழவைத்ததால், தமிழில் கலைசொற்கள் தேவைப்படுமளவிற்குக் குவியவில்லை. ஆனால், இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.

தமிழைப் பயிற்சிமொழி ஆக்கிவிட்டால், நாம் எதிர்பார்ப்பதைவிடக் குறைந்தகால அளவிலேயே விஞ்ஞானச் சொற்கள் தமிழில் பெருகிவிடுவது திண்ணம்.

 

கலைச் சொற்கள்  என்று சொல்லும்போது, அசலா, நகலா? என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு ‘இரண்டும்’ என்று ஒரே சொல்லில் பதிலளிக்கலாம்.

 

ஆங்கில நூற்களிலுள்ள கலைச் சொற்களை அனைத்துமே அம்மொழிக்கேயுரிய அசல் சொற்களல்ல. அங்கும், அசலுண்டு நகலுண்டு.

அதற்கு மரபுப்படி தமிழில் ஆங்கில நூற்களிலுள்ள கலைச் சொற்களை, எடுத்துத் தமிழ் இலக்கணவழித் திருத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உயர்தரக் கல்வியில் ஆங்கிலம் வேண்டுமா, ஆங்கிலச் சொற்கள் வேண்டுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்துத் தீரவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இரண்டுமே வேண்டாம் என்று பதிலளிக்கத் தான் விரும்புகிறோம், ஆனால், நிலைமை அதற்குச் சாதகமாக இல்லை. எனவே, ஆங்கிலம் வேண்டாம்; அவசியமானவிடத்தில் ஆங்கிலச் சொற்கள் வேண்டும் எனப் பதிலளிக்கிறோம்.

நாவலர்- பாவலர் கருத்து

பிறமொழிச் சொற்கள் கூடாது என்ற வைதிகம் விஞ்ஞானத் துறையில் வெற்றிபெற முடியாது.

நல்லவேளையாக, தனித்தமிழக் கட்சியார்கூட, ஆங்கிலச் சொற்களுக்கு எதிராக இல்லை. ஆனால், தமிழின் தனித்தன்மை கெடாமல் பிறமொழிச் சொற்களை ஏற்கவேண்டும்.

இன்றியமையாமை கருதியல்லாது, இந்தி மொழியினின்றோ, ஆற்கில மொழியினின்றோ, சொற்களைக் கடன் வாங்காமை நன்று.

தமிழிச் சொற்களையே தேர்தெடுத்தல் மேன்மை தரும் என்கிறார் இராமகிருஷ்ண விச‌யம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் சுவாமிபாமாத்மானந்தர். இவர், கலைச் சொல்லாக்கப் பணியில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர் ஆவார்.

தனித்தமிழ்க் கொள்கையுடைய நாவலர் சோமசுந்தர பாரதியாரும், பிறமொழிச் சொற்களைத் தமிழில் சேர்த்துக் கொள்வதை சில நிபந்தனைகளோடு வரவேற்கிறார்.

“முன் அறியாத பொருள்களும் கருத்தும், நம் மொழியில் அறிவதற்குரிய புதிய சொற்களைப் படைத்தல் வேண்டும்.

அஃதியாதெனில், வடச்சொல், திசைசொல் வாய்ப்புகளாகக் கொள்ளலாம். அயல்நாட்டுப் பிறமொழிச் சொற்களும் வேண்டுமிடங்களில் வாங்கி வழங்கலாம்.

பிறமொழிச் சொற்களை எடுத்தாளுகையில் தமிழ் எழுத்தியல்பு, மொழி மரபு எதுவும் பிறழவிடாமல் மாற்றி வழங்கலாம்.

எவ்வகையேனும் தமிழ்மொழி இயல்பின் தகவிழாமல் புதிய சொற்களைப் புகுத்தல் வேண்டும்.

அரசவைக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களும் பிறமொழிச் சொற்களை வரவேற்கிறார்.

விஞ்ஞானத்துக்கு வேண்டிய கலைச் சொற்கள் பிரதேச மொழியில் இல்லையே என்பதற்கானக் காத்திருக்காமல், தகுந்த கலை சொற்கள் பிரதேசமொழியில் உருவாகிற வரைக்கும் ஆங்கிலச் சொற்களையே உபயோகிக்கலாம்.

ஆங்கில மொழியின் மூலம் நமக்கு அறிமுகமாகும் கலைச்சொற்களில் பெரும்பாலானவை கிரேக்க, ஜெர்மன், பிரெஞ்சு, லத்தீன் ஆகிய மொழிகளிலிருந்து பிறந்தவையே.

அம்மொழிகளிடமிருந்து கலைச்சொற்களைக் கடன் பெற்றில்லையானால் ஆங்கில மொழிக்கு இன்றிருக்கும் புதுவாழ்வு ஆரம்பத்திலேயே புகைந்து போயிருக்கும்.

பொதுவாக ஆங்கில மொழியிற் கலந்துள்ள கலைச்சொற்களில் பெரும்பாலானவற்றை உலகனைத்திற்குமுரிய பொதுச்சொற்களாகவே கருத வேண்டும். அப்படித்தான் கருதுகின்றது விஞ்ஞான உலகம் .

தமிழகம் மட்டும் இதற்கு விலக்கல்ல. ஆனால், கலைச்சொற்கள் எல்லாமே இரவல்சொற்களாக, இருந்துவிடக்கூடாது. அதனால் தமிழின் வளர்ச்சி தடைப்படும். ஆகவே, தமிழுக்கே உரிய சொந்தச் சொற்களையும் தோற்றுவிக்க வேண்டும்.

தூய தமிழ்ச்சொல் தோன்ற முடியாதவிடத்து திசைச்சொற்களைப் பயன்படுத்தலாம். அதற்கு மேலும் அவசியப்பட்டால் ஆங்கிலத்தின் மூலம் அறிமுகமான கலைச்சொற்களை தமிழ் இலக்கண வழித்திருத்திப் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை.

தமிழில் முடியும் என்று முடிவு கட்டிக் கொண்டு தாய்மொழிப் பற்றோடு செயலாற்றத் தொடங்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் விஞ்ஞானக் கலைகளைப் பயிற்றுவிக்கும் திறமை, ஆங்கிலத்தினும் தமிழுக்கே அதிகம் இருக்கிறது என்று ஆங்கிலேயர்களே சொல்லும்படியான நிலையில் தமிழ் மொழியை வளர்த்து விடலாம்.

இதில் நம்பிக்கையில்லாத ‘டமிலர்கள்’ கொஞ்ச காலம் இல்லத்தில் தங்கி ஓய்வு பெறட்டும்.

தமிழில் முடியுமா?

ஒரு தலைமுறைக்கு முன்பு, அரசியல் நுணுக்கங்களைத் தமிழில் சொல்ல முடியாது என்று பேசி வந்தனர், அக்காலத்து அரசியல் தலைவர்கள்.

ஆம். ஆங்கிலம் படித்தவர்கள்! அதனால், ஆங்கிலச் சொற்களையும் நீளமான ஆங்கில வாசகங்ளையும் இடைஇடையே புகுத்தி மணிப் பிரவாளத்தில் பேசினார்; எழுதினார்.

இன்று, அந்த இழிநிலையிலிருந்து தமிழ்மொழி விடுதலை பெற்றுவிட்டது. ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமலே அரசியல் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது!

மணிப்பிரவாளம் வந்ததேன்?

புராணகால ஆரம்பத்திலும், துவைத, அத்வைத, விசிஷ்டாத்வைத தத்துவக் கருத்துக்களை வடமொழியில்தான் சொல்ல முடியும்.

அவற்றைச் சொல்லக் கூடிய தத்துவக் கலைச் சொற்கள் தமிழிலே இல்லை என்ற எண்ணம் சமயாச்சாரியர்களிடையேயும் நிலவி வந்தது.

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இராமானுஜாச்சாரியார், தாம் தமிழராயிருந்தும் தமிழில் ஒரு நூல்கூட எழுதியதாகத் தெரியவில்லை.

அப்படி எழுதாமைக்குக் காரணம், தமிழ் மொழியின்பால் பற்றின்மை அன்று; தாம் போதிக்க விரும்பிய தத்துவ நுட்பங்களை விளக்கும் கலைச் சொற்கள் தமிழில் இல்லை என்ற எண்ணமேயாம்.

இந்த எண்ணத்திலிருந்து பிறந்தது தான் மணிப்பிரவாள மொழி!
காலம் போகப் போகத் தத்துவக் கலைச்சொற்கள் தமிழில் ஏராளமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன.

தர்மம் அர்த்தம் காமம் – மோட்சம் என்ற திசைச்சொற்கள் நான்குக்கும், அறம்-பொருள்-இன்பம்-வீடு என்ற நான்கு தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆம்; தமிழில் தோன்றிய தத்துவ நூற்களில், கலைச்சொற்கள், அசலும் உண்டு; நகலும் உண்டு. இதையெல்லாம் அறியாதவர்களே, அறிந்துகொள்ள முயலாதவர்களே, ‘தமிழில் முடியாது’ என்று முடிவு கட்டிக் கொண்டுவிட்டனர்.

உயர் ஆரியத்திற்கு நிகர்

தமிழ் மொழியின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்தால் ஓருண்மை நன்கு புலனாகும். அதாவது, 18-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த மல்லன்மா ஞாலம் என்னென்ன புதுமைகளைக் கண்டதோ, அவையெல்லாம் தமிழிலும் இருக்கக் காணலாம்.

 

மெய்ஞ்ஞானத் துறையில் வடமொழியுடன் போட்டியிட்டு, அதற்கு இணையாக நிற்கின்ற ஆற்றல், இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழி ஒன்றிற்குத்தான் இருந்தது.

தமிழில் முடியுமா? என்று கேட்டால், முடியும் என்பதே பதில்.

அதனாற்றான், “உயர் ஆரியத்திற்கு நிகர்” என்றார். வடமொழியோட தமிழைச் சம நிலையில் வைத்துப் பாடிய பாரதியார்.

மெய்ஞ்ஞானத் துறையில் காட்டிய அந்த ஆற்றலை விஞ்ஞானத் துறையிலும் காட்டும் திறம் தமிழுக்கு உண்டு. ஆங்கிலம் கற்ற ‘மேதைகள்’ இந்த உண்மையை அறிய வேண்டும்!

இதுவரை, ஆங்கிலம் உலகப்பொதுமொழி என்ற கூற்று சிறிதளவே உண்மை கலந்த பெரும்பொய் என்பதும், உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அதன் தன்சொந்தமொழியே பயிற்சிமொழியாக இருந்து வருகின்றது என்பதையும் பார்த்தோம்.

அதுபோலத் தமிழகத்திலும் தமிழைப் பயிற்சி மொழியாக்க முடியும்பதையும் பார்த்தோம்.

அவசரமாகத் தேவைப்படும் பாடப்புத்தகங்களை மட்டும் தமிழில் தயாரித்துக்கொண்டு, அதற்குமேல் தேவைப்படும் தகவல் (ரெபரன்ஸ்) புத்தகங்களுக்கு ஆங்கில மொழியில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள் விஷயத்திலும் தற்காலிகமாக ஆங்கிலச் சொற்களையே தமிழ் இலக்கணவழித் திருத்திப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பதும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

பரங்கி மொழிப் பக்தர்களால் மறுக்க முடியாத இந்த உண்மைகள் கலைக் கல்லூரிகளில் மட்டுமின்றித் தொழிலியல் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்சி மொழியாக்குவது சாத்தியமென்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

உறுதியற்றவர்கள்

நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை எனக் கொண்டு தமிழைப் பயிற்சி மொழியாக ஏற்பதாயினும், அதனைப் படிப்படியாகவே செய்ய வேண்டும்.

அவசரப்பட்டுப் போதிய தயாரிப்பின்றி ஆங்கிலத்தை அகற்றிவிடக் கூடாது. அது அபாயம் என்று கூறி, ஆரம்பத்தில் அழிவு வாதம் பேசியவர்கள் இப்போது மிதவாதம் பேசுவோராக மாறுகின்றனர்.

ஆம்; ஆங்கிலந்தான் உலக மொழி. விஞ்ஞான மொழி தமிழ் மொழிக்கு அந்தத் தகுதியில்லை என்ற அவர்கள் கொள்கையில் அவர்களுக்கே உறுதி கிடையாது. அடித்துப் பேசினால், ஆங்கிலத்தையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்!

தமிழைப் பயிற்சிமொழிக்கும் பிரச்னை பரங்கி மொழி பக்தர்களின் தயவுக்கு உட்பட்டதல்ல. அது தமிழ் மொழியின் பிறப்புரிமை. தமிழ் மக்களின் வாழ்க்கை லட்சியம்.

ஆகவே. தமிழைப் பயிற்சி மொழியாக்கும் விஷயத்தில் படிப்படியாக முன்னேறுவோம் என்ற கூற்றில் சிறிதளவும் நியாயமில்லை.

ஆங்கிலேயர்கூட ‘சுதந்திரம் கொடுப்பதென்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். ஆனால், முழுச் சுதந்திரத்திற்கு நீங்கள் தகுதியாகும் வரை சுதந்திரத்தைப் பல கூறிட்டுச் கொஞ்சங் கொஞ்சமாக வழங்குகிறோம்’ என்று கூறினார்கள். பரங்கியர் கூறிய அதனையே பரங்கி மொழிப் பக்தர்களும் கூறுகிறார்கள்.

அன்றும் பயமுறுத்தினார்கள்

விடுதலைப் போராட்டக் காலத்தில்கூட, வெள்ளையன் ஒரே நாளில் வெளியேறிவிட்டால், இந்தியா அராஜகத்தில் மூழ்கி அழிந்துவிடும்’ என்று பயமுறுத்தினார்கள் ராஜ விசுவாசிகள், ஏன்?.

ஆங்கிலேயனை வெளியேற்றுவது சுலபம். ஆங்கிலேயர் இல்லாத இந்தியாவை ஆள்வது கஷ்டம். அதற்கான தகுதி நமக்கில்லை என்று கூடக் கூறினார்கள் பரங்கி ஆட்சியின் பக்தர்கள்.

ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு, அப்படி எல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதை அனுபவத்தில் கண்டுவிட்டோம்.

இந்திய ராஜ்யங்களை மொழிவழியே திருத்தி அமைக்க வேண்டுமென்று கோரியபோதும், இராஜ்யங்களை மொழிவாரி திருத்தி அமைத்தால் ஒரு ராஜ்யத்திற்கும் இன்னொரு ராஜ்யத்திற்கும் மோதல் ஏற்படும்.

இனத்திற்கு இனம் பகை வளரும். ஐந்தாண்டுத் திட்டங்கள் குலைந்து அழிந்துவிடும் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். ‘படித்த மேதைகள். பிரதமர் நேரு, ஜனாதிபதி ராசன்பாபு போன்ற பெருந் தலைவர்கள்கூட இப்படித்தான் நம்மை அச்சுறுத்தினார்கள்.

அபசகுணங்கள்

இராஜ்யங்கள் மொழிவழித் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு படித்த மேதைகள் பயமுறுத்தியபடி எதுவும் நடக்க காணோம். மொழிவாரி அமைந்த மாநிலம் ஒவ்வொன்றும் அதனதன் விருப்பப்படி முன்னேறி வருகின்றன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது திட்டமும் முளைத்துக் கொண்டிருக்கிறது.

இப்போதும், ஆங்கிலம் பயிற்சி மொழியாக இல்லாவிட்டால், அறிவு மங்கிவிடும், விஞ்ஞானக்கலை அழிந்துவிடும், படிப்பு பாழாகிவிடும் என்றெல்லாம் பரங்கி மொழிப் பக்தர்கள் பயமுறுத்துகின்றனர்.

தமிழில் முடியுமா? என்று கேட்கும் இந்த அபசகுனங்களைப் புறக்கணித்து, தமிழைப் பயிற்சி மொழியாக்கிவிட்டால், எல்லாம் சரியாகத்தான் நடக்கும்.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.