தமிழைக் காப்போம்!

காலங்கள் கடந்தும் கவின்குன்றாச் செம்மொழியே!
கன்னித்தமிழே, செந்தமிழே, உனக்கு நிகர்நீயே!

எத்தனையோ மொழிகள் உலகில் இருப்பினும்,
எனதன்னைத் தமிழே எங்கள் உயிர்மூச்சு!

தாயின் அருமை குழந்தைக்கு மறந்திடுமா?
இல்லவே இல்லை ஒருபோதும் இல்லை!

புதுப்புது அறிவியல் பெருகிடும் காலத்திலும்
நுட்பமான கருத்துக்கள் நுழைந்திடும் போதிலும்

உன் சொல்லாற்றல் என்றும் அளப்பரியது!
உன் இலக்கண செம்மை நிகரற்றது!

இலக்கிய உலகில் நிலைத்து நிற்கின்றாய்!
தொழில்நுட்ப உலகில் நிமிர்ந்து நிற்கின்றாய்!

இளைஞர்கள் கையில் எடுத்திடுவோம் உன்னை!
இனிமையாய் பேசி போற்றிடுவோம் உன்னை!

வலைதளமெங்கும் உன் புகழ் பாடிடுவோம்!
வையகமெல்லாம் உன் பெருமை பறைசாற்றிடுவோம்!

தமிழ் பள்ளியில் குழந்தைகளை சேர்த்திடுவோம்!
தமிழ்மொழிப் போட்டிகள் உலகெங்கும் நடத்திடுவோம்!

அன்னிய மொழி மோகம் கலைந்திடுவோம்!
அன்னியமொழி புகா நற்றமிழ் பேசிடுவோம்!

சங்க இலக்கியங்களின் பெருமை பரப்பிடுவோம்!
திருக்குறள் ஆய்வரங்கம் உலகெங்கும் நடத்திடுவோம்!

செந்தமிழ் இலக்கிய மன்றங்கள் தொடங்கிடுவோம்!
கன்னித்தமிழை காத்து தலைநிமிர்ந்து நிற்போம்!

கவிஞர் இரா.கலைச்செல்வி
சென்னை