தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான பரப்புகளையும் அடையாளப் படுத்தும் மிகச்சரியான இணையதளமாகத் “தமிழ்ஆதர்ஸ்.காம்” எனும் இணையதளம் அமைந்திருக்கிறது.
தேவையற்ற பகட்டான பக்கங்களைக் கொஞ்சம் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், தேவையான, சிறப்பான சிலவற்றை மட்டும் பெரிய அளவில் பதிவு செய்து இருக்கின்ற அற்புதமான தளமாக இத்தளம் அமைந்திருக்கிறது.
”தமிழ்ஆதர்ஸ்.காம்” இணையதளம், பக்க வடிவமைப்பிலும் சிறந்த வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. பார்த்தவுடன் பிரமிப்பைத் தருகிற சில இணையதளங்கள் போல அல்லாமல் மிக நேர்த்தியாக, எளிமையும் வளமும் உடையதாக இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
இந்த இணையதளத்தின் ஆசிரியராக எழுத்தாளர் அகில் இருக்கின்றார். அவரது பக்கத்தில், சமூகம் சார்பான பல கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது அவரது சமூகச் சிந்தனையைக் காட்டுகிறது. இத்தளத்தை உருவாக்குவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக அப்பகுதி விளக்குகின்றது.
குறிப்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை அவசியமா? மாட்டிறைச்சிக்குத் தடை? சர்வதேச தாய்மொழி தினம், இந்தப் பிரபஞ்சத்தை ஆண்ட பிரபஞ்சன் எனும் கட்டுரைகள் அவரது இலக்கியத் தன்மையை, சமூகப் பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இந்த இணையதளத்தில், கட்டுரைகள் எனும் பகுதியில் கட்டுரை எழுதிய ஆசிரியரின் பெயரும், கட்டுரையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன.
அனைத்துத் தலைப்புக்களும் வெவ்வேறு கோணத்தை உடைய, பல்வேறு விதமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, ஈழத்தில் நாட்டுக் கூத்துகலை, மன அழுத்தமும் தற்கொலைச் சிந்தனையும், கடல்கோள்களும் சுனாமிகளும் எனும் தலைப்புகள் வெவ்வேறு கோணத்தை நமக்குக் காட்டுகின்றன.
இதுபோல் பல நூறு கட்டுரைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த சிந்தனைகளின் தொகுப்பாகவே இவைகள் அமைந்திருக்கின்றன. இவை கருத்துக் கருவூலமாக இருப்பதாகப்படுகிறது.
சிறுகதைகள் எனும் தலைப்பின் கீழ், கட்டுரைகள் பகுதி போல் ஆசிரியர் பெயரும், சிறுகதையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன. இத்தலைப்பின் கீழ் பலநூறு சிறுகதைகள் காணப்படுகின்றன.
நவீன சிறுகதைகளை உள்ளடக்கியதாகச் சிறுகதைகளின் கருத்தாக்கம் அமைந்துள்ளன என்பதை சிறுகதைகளைப் படிக்கும் பொழுது நாம் உணர்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளின் தொகுப்பு இத் தொகுப்பாகும்.
கவிதைகள் எனும் தலைப்பும் இவ்வாறு அமைந்துள்ளது. நவீனம் சார்ந்திருக்கிற கவிஞர்கள் இப்பகுதியில் தமது கவிதைகளைத் தந்திருக்கின்றனர்.
கவிதை குறித்து அறிய விரும்புகிறவர்கள் இக்காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கவிதையின் தரத்தை இப்பகுதியில் கண்டு உணரலாம்.
ஒரு சில தலைப்புகளைக் கொடுத்துக் கவிஞர்களுக்கு எழுதச்சொல்லியும் அதனை வெளியிட்டுள்ளனர். இது, ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு கவிஞர்களின் சிந்தனைப் போக்குகளை அடையாளப்படுத்துகின்றது.
நூல் ஆய்வு எனும் பகுதியில் தமிழில் வெளியிடப்பட்டு இருக்கிற நூல்களின் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகமான நூல் ஆய்வுகளைக் கவிஞர் இரா.இரவி அவர்கள் செய்திருக்கின்றார்.
உலகக் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாளர்கள் ஆகியவர்களின் நூல்கள் குறித்தான, வாசகர்களின் எண்ணப் போக்கை இங்கு தெரிந்துகொள்ள முடிகிறது.
ஒரே இடத்தில் பல நூறு நூல்கள் குறித்தான ஆய்வுகளைக் கண்டறிய முடிகின்றது.
மின் நூலகம் எனும் பகுதி, எழுத்தாளர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாகும். காரணம் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. மின்நூலகம், 104 படைப்பாளர்களின் நூல்கள் அனைத்திலும் கூடுமானவரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும்.
நேர்காணல் பகுதியில் 42 தமிழ் எழுத்தாளர்களிடம் சென்று நேர்காணல் செய்து, பதிவிட்டு இருக்கிறார்கள். இத்தளத்தின் ஆசிரியர் அகில் நிறைய தமிழ் இலக்கிய ஆளுமைகள் உடன் நேர்காணல் செய்து இருக்கிறார்.
மருத்துவம் என்னும் பகுதியில், மருத்துவக் கட்டுரைகள் பலநூறு இடம்பெற்றுள்ளன. மருத்துவம் சார்பான அனைத்துச் செய்திகளையும் தருவதற்கு இப்பகுதி முயற்சி செய்கிறது எனலாம்.
இலங்கையின் எழுத்தாளர் கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் அதிகமான மருத்துவக் கட்டுரைகளை இப்பகுதியில் எழுதியுள்ளார்.
சினிமா எனும் பகுதியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் மொழி மாற்றத் திரைப்படங்கள் ஆகியவைகள் குறித்தான விமர்சனங்கள், திறனாய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கவிஞர் இரா.இரவி, ஞா.ஆரணி, வித்யாசாகர் ஆகிய எழுத்தாளர்கள் அதிகமான திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். விரிவான திரைப்படத் திறனாய்வான இப்பகுதி திரைப்பட ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
பலதும் பத்தும் எனும் பகுதியில் உலகில் காணலாகும் இலக்கிய நிகழ்வுகள் அல்லது சமூக நடத்தைகள் குறித்தான விளக்கங்களாக அல்லது விமர்சனங்களாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்துக் கட்டுரைகளும் மிக ஆழமான செய்திகளைச் சரியான நோக்கத்துடன் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி எடுத்துக் கூறுகின்றன. கட்சி, ஜாதி, மதம் எனும் எந்தவிதமான பாகுபாடுகளையும் காட்டாமல் விமர்சனங்கள் தரப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.
குறும்படம் எனும் பகுதியில், தமிழில் தற்பொழுது எடுக்கப்பட்டிருக்கின்ற தரமிக்கதான குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். குறும்படங்கள் குறித்து காண விரும்பும் வாசகர் பல்வேறு சேனல்களில் காணப்படும் தரமற்ற குறும்படங்களைக் கண்டு ஏமாற வேண்டியுள்ளது.
ஆனால் இத்தளத்தில் காணப்படும் அனைத்துக் குறும்படங்களும், அது குறித்த தகவல்களும் தமிழ்க் குறும்படத்தின் மேன்மையை கருத்தில் கொண்டவைகளாக அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, 2020-இல் வெளிவந்த குறும்படத்தில் ஒன்று. கம்பளிப்பூச்சி எனும் குறும்படம் குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் பள்ளி ஆசிரியர்களின் தவறான தொடுதல்களினால் மனம் வேதனைப் படும் நிலையை நேர்த்தியாகச் சுட்டிக்காட்டுகிறது.
ஆசிரியர்களின் தவறான நடத்தைகள், குழந்தைகளின் மனதில் எதிர்கால வாழ்வையே சூறையாடி விடுகிறது என்பதை குறும்படம் வெளிப்படுத்துகிறது.
இலக்கியத் தகவல்கள் எனும் பகுதியில் உலக அளவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன.
எழுத்தாளர்கள் எனும் பகுதியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலும், அவர்கள் தம் நூல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பு மிகச்சிறந்த தொகுப்பாகக் காணப்படுகின்றது.
இந்தியாவில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலை ஒரே இடத்தில் காண வேண்டுமானால் இத்தளத்தில் காணலாம்.
தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு தொகுப்பாகச் சிற்றிதழ்கள் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சிற்றிதழ்களின் முகவரி, அவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆசிரியர் பெயரும் தரப்பட்டுள்ளன.
காணொளிக் காட்சிகளின் தொகுப்புகள் இங்கு ஒளிப்பேழை எனும் பகுதியில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பல அற்புதமான காணொளிகள் இங்கு காட்சிக்கு உள்ளன.
இவ்வாறாகப் படைப்புகள், படைப்புகள் சார்ந்த எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பேட்டி, இலக்கியம் குறித்தான காணொளிகள், சமூகம் சார்பான பல கட்டுரைகள் என ஒரு ஜனரஞ்சகமான மற்றும் இலக்கிய மேம்பாட்டைக் கருதுகோளாகக் கொண்ட இணையதளமாக “தமிழ்ஆதர்ஸ்.காம்” அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அதைப் பார்வையிட www.tamilauthors.com ஐ சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!