தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.

மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.

தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.

அத்தகு இணையதளங்களில் நாள்தோறும் நாள்தோறும் கணக்கிலடங்கா படைப்புகள் எழுதப்பட்டும், பகிரப்பட்டும் பேசப்படுகின்றன. அவற்றைத் தேடித் தேடிப் படிப்பது என்பது இயலாத காரியம். வானத்து நட்சத்திரங்களைத் தேடிப்பிடித்து ரசிப்பது போன்றது அதுவாகும்.

தனக்குத் தெரிந்த இணையதளப் படைப்புகளோடு வாசகன் நின்றுவிட்டால், கிணற்றுத் தவளை ஆகிவிடுகிறான் அவன். வான் நோக்கிப் பறந்து பால்வீதி முழுவதும் காணலாகும் அற்புதங்களை ரசிக்க வேண்டும்; உணர வேண்டும்; அறிய வேண்டும். அப்பொழுது தான் வாழ்வு ஓரளவாவது முழுமை பெறும்.

அவ்வகையில், இணையதளங்களைப் பார்க்கும் போதும் இதே நிலைதான். பால்வீதி போன்றவை இணையதளங்கள். அவற்றைத் தேடிப் பிடித்து அனைத்தையும் படிப்பது கடல் மணலை எண்ணுவதற்குச் சமமாகும்.

இதுபோன்ற நிலையில், பல இணையதளங்களில் பகிரப்படும் முக்கியமானவைகளை, ஒரே இடத்தில் திரட்டித் தந்தால் வாசகனுக்கு எப்படி இருக்கும் எனும் நோக்கில், இணையதள வாசிப்பில் இன்னொரு மைல்கல்லாக வந்தது தான் ”திரட்டி” எனும் மென்பொருளாகும்.

இவ்வகை மென்பொருளில் தமிழ் இன்னொரு படிநிலையை அடைந்தது. இவ்வகை திரட்டிகளின் பணி அளப்பரியது மற்றும் சிறப்பானது ஆகும்.

தனக்குத் தேவையான செய்தியை மட்டும் கண்டு, பிறவற்றை படிக்காமல் விட்டால் மட்டுமே ஒரு எல்லையை வாசகன் இக்காலகட்டத்தில் தொட முடியும். காரணம் படைப்புப் பெருக்கம் இன்று காணப்படுகிறது. அவை அனைத்தையும் ஒரு வாசகனால் கண்டு தெளிந்து உணர்ந்து விட முடியாது.

தேவையற்றவைகளைக் காண்பது நேர விரயமும் தன் வளர்ச்சிக்குப் பாதிப்பும் ஆகும். எனவே அதற்கு உதவும் வகையில் இவ்வகைத் திரட்டிகள் பெரும் பங்கினைச் செய்கின்றன.

இணையத்தில் இது போன்ற திரட்டிகள் பல காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற திரட்டி தான் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டி ஆகும்.

ஆரூர் பாஸ்கர் மற்றும் நீச்சல்காரன் ஆகியோரின் பெருமுயற்சியால் இத்திரட்டி செயல்படுகின்றது. இருவரும் தமிழில் மென்பொருள்கள் பலவற்றைக் கண்டுபிடித்துத் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள்; செய்து கொண்டிருப்பவர்கள்.

இத்திரட்டியில் பொது, திரைப்படம், அரசியல், ஆன்மீகம், வீட்டுக்குறிப்பு, வணிகம், புத்தகம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், காணொளி எனும் தலைப்புகளில் தினந்தோறும் பல்வேறு வலைத்தளங்களில் வெளியிடும் படைப்புகளின் சரம் இனம் காட்டப்பெறுகின்றன.

”ஆன்மீகம்’ எனும் பகுதியைச் சொடுக்கினால் ஆன்மீகம் சார்பாக வெளிவந்த பல்வேறு படைப்புகள் காண்பிக்கப்பெறும். அவற்றைச் சொடுக்கினால், அதன் இணையதளம் மற்றொரு பக்கத்தில் திறக்கும். அக்கட்டுரையை அங்கு படிக்கலாம்.

இவ்வாறு தேவையானதை மட்டும் தேர்வு செய்து நாம் படிப்பதற்கு இது மிகப் பெரும் பயனாக இருக்கும். அனைத்து வலைத்தளங்களையும் திறந்து திறந்து தேடிப்பிடித்து பார்க்கும் நேர விரயத்தை இவ்வகைத் திரட்டிகள் தடுக்கின்றன.


வாசகன் சில நேரம், சில இணையதளங்களைப் பார்வையிடாமல் விட்டு விடலாம். அங்கு வெளியிடப்பட்ட படைப்பைத் தவறவிட வாய்ப்பு நிறைய இருக்கின்றது.

ஆனால், இது போன்ற திரட்டிகளில் வாசிக்கப் பழகினால், அனைத்து வலைத்தளங்களையும் சென்று பார்த்து வந்த திருப்தி அனைவருக்கும் ஏற்பட்டுவிடும்.

தேவையற்ற செய்தியாக, படைப்பாக இருந்தால் அதைப் பார்க்காமலும் அந்த இணையதளத்திற்குச் செல்லாமலும் விட்டுவிடலாம். திரட்டியின் முன்பகுதியில், ”தேடுதல்” பகுதியும் உள்ளது.

தேவையான சொல் அல்லது விபரத்தைப் பதிவு செய்து தேடினால், அவ்விவரம் இருக்கும் இணையதளப் பக்கங்களைக் கொண்டு வந்து குவித்து விடும்.
இவ்வாறான உடனுக்குடனான படைப்பு வரலாற்றினை இன்னும் எளிமையாகத் தேட, இன்று, இந்த வாரம், கடந்த வாரம், முன்னணி எனும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் சொடுக்கினால் அந்த அந்தக் காலத்தில் வெளிவந்த படைப்புகளைத் திரட்டிப் பெறலாம்.

பல்வேறு வலைத்தளங்களை உள்ளீடு செய்ய ”இணைக்க” எனும் பகுதியும் உள்ளது. இதன் மூலம் வலைத்தள நிர்வாகிகள் இப்பகுதியில் அவர்களின் வலைத்தளங்களை உள்ளீடு செய்து கொள்ளலாம்.

தமிழ் மாலைகளில் இந்தப் பல்மலர் திரட்டியான ”தமிழ்ச்சரம்” மணம் வீசும் சரமாகும்.

வலைத்தள மேன்மையின் மற்றுமொரு சாதனையாகத் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டியை க்கூறலாம். அத்திரட்டியைக்காண https://tamilcharam.com/faq/faq.html சொடுக்கவும்

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

2 Replies to “தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி”

  1. வணக்கம், இணையத்தளம் ஓர் இணையற்றத் தளம் என விளக்கிய தங்கள் பதிவு மிக அருமை 🙏வாழ்த்துக்கள், நன்றி.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.