தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்

கோடைவிடுமுறைக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாழிடங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மலைவாழிடங்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்டவைகள் ஆகும். அவர்கள் இந்தியாவில் கோடையில் நிலவும் வெப்பத்தினை சமாளிக்க உயரமான மலைப்பகுதிகளை தேர்வு செய்து அங்கு சென்று தங்கி கோடைகாலத்தை சமாளித்தனர்.

இவ்வாறே மலைவாழிடங்கள் உருவாக்கப்பட்டு பின் நாட்களில் அவை விரிவுபடுத்தப்பட்டு தற்போது அவை சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன.

நகரத்தின் மக்கள் நெருக்கடி, வெப்பம், புகை ஆகியவற்றிலிருந்து விலகி உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சிக்கு மலைவாழிடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும்.

மலைவாழிடங்களில் பொதுவாக மலைஏற்றம், மீன்பிடித்தல், படகுசவாரி, குதிரை சவாரி, சைக்கிளில் சுற்றுதல், கோல்ப் ஆடுதல் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் மனம் மற்றும் உடலுக்கு புத்தணர்ச்சியை அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆறு முக்கிய மலைவாழிடங்கள் உள்ளன. அவை உதகமண்டலம் (ஊட்டி), கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குன்னூர், கோத்தகிரி ஆகியவைகள் ஆகும். அவற்றைப் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.

 

உதகமண்டலம் (ஊட்டி)

ஊட்டி

 

இவ்விடம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது நீலகிரி மலையில் 2240மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இவ்விடத்தில் காணப்படும் உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக இது மலைகளின் ராணி என்றழைக்கப்படுகிறது.

இவ்விடம் தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களின் மகுடமாகத் திகழ்கிறது. இது பிரபலமான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது.

ஊட்டி இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆங்கில ஆட்சியில் மதராஸ் பிரசிடென்சிக்கு கோடைகால தலைநகராக விளங்கிய பெருமை இவ்விடத்தைச் சாரும்.

இங்கு நிலவும் அற்புதமான காலநிலையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.

ஊட்டி ஏரி, ரோஜாத்தோட்டம், தொட்டபெட்டா சிகரம், பைன் காடுகள், தேயிலை தோட்டங்கள், பைகாரா நீர்வீழ்ச்சி, பைகாரா ஏரி, முதுமலை தேசியப்பூங்கா, முக்கூர்த்தி தேசியப்பூங்கா, ஊசி மலைக் கண்ணோட்டம், எமரால்டு ஏரி, மேல்பவானி ஏரி, காமராஜ் சாகர் ஏரி, பனிச்சரிவு ஏரி, அரசு அருங்காட்சியகம், செயின்ட் ஸ்டீபன்ஸ் சர்ச் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் தேயிலை மற்றும் சுற்றுலா விழா மற்றும் கோடை விழா ஆகியவற்றிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.

 

கொடைக்கானல்

கொடைக்கானல்

 

இவ்விடம் பழனி மலைகளின் தென்பகுதியின் உச்சியில் அமைந்துள்ளது. இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 2100மீ உயரத்தில் அமைந்துள்ளது. அதிக கண்ணிற்கினிய இயற்கை இடங்களைக் கொண்டுள்ளதால் இவ்விடம் மலைகளின் இளவரசி என்றழைப்படுகிறது.

அற்புத காலநிலை மற்றும் இயற்கை அழகு மிகுந்து இவ்விடம் காணப்படுகிறது. நடுத்தர பட்ஜெட்டில் உயர் மதிப்பிலான சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இவ்விடம் விளங்குகிறது.

கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரயான் பூங்கா, செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறைகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு கண்ணோட்டம், பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. ஏப்ரல் முதல் ஜீலை வரை இவ்விடத்தை காண ஏற்ற காலமாகும்.

 

ஏற்காடு

ஏற்காடு

இவ்விடம் கிழக்கு மலைத் தொடரைச் சேர்ந்த சேர்வராயன் மலைத் தொடரில் சேலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 1515மீ உயரத்தில் அமைந்துள்ளது.

அவ்விடம் தென்இந்தியாவின் ஆபரணம் என்றும் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நிலவும் குளிர் சூழல், மூடுபனி வானிலை மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. மலையேற்றத்திற்கு இவ்விடம் சிறப்பானது.

இங்கு ஆரஞ்சு, காப்பி, ஏலக்காய், கறுப்பு மிளகு ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. இங்குள்ள பழத்தோட்டத்தில் 3000 வகை மரங்கள், 1800 குற்றுச்செடிகள் இந்திய தாவர ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகின்றன.

ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில், கரடி குகை, கிரேஞ்ச், ஹெவன் தொங்கு பாறை, பகோடா பாயிண்ட், ரோஜாத் தோட்டம் மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை ஆகும்.

இவ்விடத்தைக் காண பிப்ரவரி முதல் ஜீன் வரையிலும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் உள்ள காலம் ஏற்றது.

 

ஏலகிரி

ஏலகிரி

 

இவ்விடம் வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி நகருக்கு இடையில் அமைந்துள்ளது. இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 1410மீ உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு பழத்தோட்டங்கள், ரோஜாத் தோட்டங்கள் மற்றும் பச்சை பள்ளத்தாக்குகள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவ்விடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு ஏற்ற இடமாகும்.

சாகச விளையாட்டான பாராகிளைடிங் மற்றும் பாறை ஏறுதல் போன்ற விளையாட்டுக்க‌ள் இவ்விடத்தில் பிரபலமானவை.

புங்கானூர் ஏரி, வேலவன் கோவில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, சுவாமிமலை மலை மற்றும் தொலைநோக்கி ஆய்வு மையம் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.

இவ்விடம் ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்றது எனினும் நவம்பர் முதல் பிப்ரவரி உள்ள காலம் மிகச் சிறந்தது.

 

குன்னூர்

குன்னூர்

 

இவ்விடம் நீலகிரி மலையில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மலைவாழிடம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1800மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் ஊட்டிலிருந்து 18கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு நிலவும் இனிமையான காலநிலையின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் இங்கு தங்கிச் செல்கின்றனர். இவ்விடம் கோடைகாலத்தில் தமிழகச்சுற்றுலாவில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இங்கு காணப்படும் புல்வெளிகள், தேயிலைகள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன. சிம்ஸ் பூங்கா, டால்பின் மூக்கு கண்ணோட்டம், லாம்ப் பாறை ஆகிய இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை ஆகும்.

இவ்விடத்தைப் பார்வையிட செப்டம்பர் முதல் மார்ச் உள்ள வரை காலம் சிறந்ததாகும்.

 

கோத்தகிரி

கோத்தகிரி

 

இவ்விடம் நீலகிரி மலையில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய மற்றும் பழைமையான மலைவாழிடம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1793மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் ஊட்டிலிருந்து 29கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இதன் இயற்கை அழகு காண்போரை திகைக்கச் செய்கின்றது. இங்கு தற்போது சுமார் 30000 ஏக்கர் பரப்பில் தேயிலைத் தோட்டம் உள்ளது.

இங்கு மலைஏற்றம் மற்றும் பாறைஏற்றம் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொட்டாபட்டா ரேஞ்ச், கேத்தரின் நீர்வீழ்ச்சி, எல்க் நீர்வீழ்ச்சி மற்றும் ரெங்கசாமி தூண் போன்றவை காண வேண்டிய இடங்கள் ஆகும்.

இவ்விடத்தைப் பார்வையிட டிசம்பர் முதல் மே உள்ள வரை காலம் சிறந்ததாகும்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.