தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம்.

 

மெரீனா கடற்கரை

மெரீனா கடற்கரை
மெரீனா கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ளது. இது கோரமண்டல கடற்கரையில் சுமார் 13 கிமீ தொலைவிற்கு அமைந்துள்ளது.

இது உலகில் நகர்ப்பகுதியில் அமைந்த இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாகும்.

பொன்னிறமாக ஜொலிக்கும் மணல், வெண்ணிற நுரைதள்ளும் கடல் அலைகள், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் ஆகியவை இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. இவ்விடம் அழகோடு தூய்மையாக இருப்பதால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.

பொதுவாக சூரிய அஸ்தமனத்தைப் பார்வையிடவும், குளிர்ந்த காற்றை அனுபவிக்கவும் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இங்கு கடல் நீரில் காலை நனைப்பதும், ஆழமற்ற கடலில் குளிப்பதும் சுகமான நிகழ்வுகள் ஆகும். இந்தியாவில் உள்ள உலாவல் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இவ்விடத்தில் புகழ் பெற்ற வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் உள்ளன.

 

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரி கடற்கரை

 

இவ்விடம் இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் குமரிமுனை, திரிவேணி சங்கமம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அரபிக்கடல், வங்காள‌ விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் இவ்விடத்தில் ஒன்று கூடுகின்றன.

பாறைகளுடன் கூடிய ராட்சத அலைகள் எழும் கடல், பலவித நிறங்களுடன் பளபளக்கும் கடற்கரை மணற்பரப்பு, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் ஆகியவை இங்கு காண்போரை வியக்க வைக்கின்றன.

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி அம்மன் கோவில், காந்தி மண்டபம் ஆகியவை இங்கு காண வேண்டிய முக்கிய இடங்களாகும்.

பவுர்ணமி நாட்களில் சூரிய அஸ்தமனத்தையும், சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் இவ்விடத்தில் காண முடியும். இவ்விடத்தின் தனித்தன்மையால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

 

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை
இராமேஸ்வரம் கடற்கரை

 

இவ்விடம் இந்தியாவின் தென்கிழக்கு முனையான இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இந்துகள் புனித யாத்திரை செல்லும் முக்கிய இடங்களில் ஒன்று.

இவ்விடத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் ஆழமில்லாமல் இருப்பதால் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் ஏதுவாக உள்ளது. இவ்விடத்தில் கடற்கரையைச் சுற்றிலும் மதச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இக்கடற்கரையை ஒட்டியுள்ள ராமநாதர் கோவிலின் உள்ளே 21 தீர்த்தங்கள் இவ்விடத்தின் சிறப்பம்சமாகும்.

இராமநாதர் கோவில், பாம்பன் பாலம், கோதண்ட ராமர் கோயில், வில்லூண்டி தீர்த்தம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இவ்விடம் நீந்துவதற்கும், சூரியக் குளியல் எடுப்பதற்கும் மிகச்சிறந்த இடமாகும்.

மாமல்லபுரக் கடற்கரை

மாமல்லபுரக் கடற்கரை
மாமல்லபுரக் கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை ஒட்டி 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 20 கிமீ தொலைவிற்கு அமைந்துள்ள இவ்விடம் பல்லவர்களின் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. இவ்விடம் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள உலகப் ப‌ராம்பரியச் சின்னங்களில் இவ்விடமும் ஒன்று. இங்கு காணப்படும் புகழ் பெற்ற குடைவரைக் கோயில்கள் இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன. இக்கோயில்கள் திராவிடக் கட்டகலையின் சாதனையை எடுத்துரைக்கின்றன.

பஞ்ச பாண்டவர் இரதங்கள், அர்ஜூனனின் தவம் போன்றவை காண்போரை வியக்கச் செய்கின்றன. சாகச தண்ணீர் விளையாட்டுப் பிரியர்களுக்கு இவ்விடம் சிறந்த தேர்வாகும்.

ஆண்டுதோறும் இவ்விடத்தில் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நடைபெறும் மாமல்லபுரம் நடனத்திருவிழாவானது பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக்களி, மோகினி ஆட்டம், ஒடிசி, கதக் போன்ற நாட்டிய கலைஞர்களை பெரிதும் கவர்ந்திழுக்கிறது.

 

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை
பூம்புகார் கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது காவேரிப்பூம்பட்டிணம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கிறது.

கடலில் காவிரி ஆறு கலக்கும் இடமாதலின் ‘ஆறு புகும் இடம்’ என்பது புகும் ஆறு என்றாகி புகாறு என மருவி புகார் ஆனது. இவ்விடம் பண்டைய சோழ நாட்டின் முக்கிய துறைமுகமாகும்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்கள் இவ்விடத்தைப் போற்றுகின்றன. இக்கடற்கரை காவிரி நதியில் தொடங்கி வடக்கே நித்தவாசல் வரை சுமார் 3 கிமீ தொலைவிற்கு நீண்டுள்ளது.

இவ்விடத்தில் சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் மக்கள் கூடி புனித நீராடுகின்றனர். இவ்விடம் பண்டையகால வரலாற்றைக் கொண்டுள்ள கோவில்கள், நினைவுச்சின்னங்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பெற்று சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.

 

வேளாங்கன்னி கடற்கரை

வேளாங்கன்னி கடற்கரை
வேளாங்கன்னி கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கடற்கரையின் அருகே அமைந்துள்ள ஆரோக்கிய மாதா ஆலயம் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய புனிதத் தலமாக உள்ளது.

இவ்விடம் கிருத்துவர் அல்லாத ஏனையோர்களையும் கவர்ந்திழுத்து முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

இவ்விடத்தில் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். நீந்துவதற்கு இக்கடற்கரை சிறந்தது எனினும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இவ்விடத்தில் உள்ள பசிலிக்கா அருங்காட்சியகம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.

இக்கடற்கரையில் உள்ள கடைத் தெருக்களில் உள்ள அழகான கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் போன்றவை பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதோடு, இவ்விடம் ஷாப்பிங் செய்ய சிறந்த இடமாகவும் உள்ளது.

 

கோவலம் கடற்கரை

கோவலம் கடற்கரை
கோவலம் கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 40 கிமீ தெற்கில் கிழக்கு கடற்கரையில் மாமல்லபுரம் செல்லம் வழியில் உள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தளமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வந்து முட்டைகள் இட்டுகின்றன. அமைதியான நீலக்கடல், தங்க மணல் கடற்கரைகள், உயர்ந்த தென்னை மற்றும் பனை மரங்கள் இவ்விடத்திற்கு அழகு சேர்க்கின்றன.

பழங்காலத்தில் இவ்விடம் கர்நாட நாவாப்புகளின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இங்கு காணப்படும் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்கள் இவ்விடத்தின் பழமையை பறைசாற்றுகின்றன.

இவ்விடம் மீன்பிடிக்கவும், நீந்துவதற்கும், நீர்சறுக்கு விளையாட்டிற்கும் சரியான தேர்வாகும். அமைதி மற்றும் இயற்கை காற்றை சுவாசிக்க விரும்புவர்கள் இவ்விடத்திற்கு சுற்றலா செல்லலாம்.

 

சில்வர் கடற்கரை

சில்வர் கடற்கரை
சில்வர் கடற்கரை

 

இவ்விடம் கடலூர் மாவட்டத்தில் கடலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடம் கோர மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும்.

சுமார் 57 கிமீ நீளத்தைக் கொண்டுள்ள இவ்விடம் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. அமைதியான இக்கடற்கரையில் தண்ணீர் விளையாட்டு, படகுச் சவ்வாரி ஆகியவை பிரபலமானவை.

பேக் வாட்டரினால் இவ்விடம் தனி தீவுபோலத் தோன்றி அழகாக இருக்கிறது. இங்கு மேற்குப் பகுதியில் ஆறு ஒன்று பறவைகள் அதிகம் கொண்ட அடர்ந்த மாங்குரோவ் காட்டுப்பகுதியில் பாய்கிறது.

இங்கு நூறாண்டுகள் கடந்த கலங்கரை விளக்கம், புனித டேவிட் கோட்டை, பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை உள்ளன. இங்கு கடல் நீரானது வெள்ளியைப் போல் பளபளப்பாக நம் கால்களைத் தழுவி செல்கிறது. அதனால் இவ்விடம் சில்வர் கடற்கரை என்றழைக்கப்படுகிறது.

 

முட்டுக்காடுக் கடற்கரை

முட்டுக்காடுக் கடற்கரை
முட்டுக்காடுக் கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் சிறந்த பொழுதுபோக்கு இடமாகும்.

இக்கடற்கரை அமைதியும், அழகும் நிறைந்தது. இவ்விடத்தில் வின்ட் சர்பிங், கனோ, கயாக், பெடல் படகு, ரோ படகு போன்றவை மிகவும் பிரபலமானவை.

இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள் காண மிகவும் ரம்மியமாக இருக்கும். படகு சவாரி செய்யவும், நீந்தவும், சூரிய குளியல் எடுக்கவும் இவ்விடம் மிகச்சிறந்த தேர்வு.

இங்கு கடல்வாழ் உயிரிகளான மீன்கள், நண்டுகள், ஆமைகள் மற்றும் பறவையினங்களான நாரை, கொக்கு, அன்ரில், மீன்கொத்தி, தேனீ பிடிக்கும் பறவை ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

 

தனுஷ்கோடி கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரை
தனுஷ்கோடி கடற்கரை

 

இவ்விடம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரத் தீவின் தென்கோடியில் உள்ளது. இலங்கையுடன் வாணிபம் செய்ய பழங்காலத்தில் இவ்விடம் சிறந்த துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது.

இவ்விடத்தில் வங்காள வரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒன்று கூடுகின்றன. இவ்விடத்தில் புனித நீராடியே இந்துக்கள் தங்களின் காசியாத்திரை நிறைவுறுவதாகக் கருதுகின்றனர்.

வெண்ணநிற மணற்பரப்பு, குளிர்ந்த காற்று, தெளிவான கடல் நீர்பரப்பு, பழங்காலக் கட்டிடங்கள் ஆகியவை காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன. அதிகாலையில் இவ்விடத்தில் சூரிய உதயம் காண்பது மனதில் நீங்காக் காட்சியாகும்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.