தமிழ்நாட்டின் பாசன முறைகள்

தமிழ்நாடு மழையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெற்று, ஆண்டு முழுவதும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பினைக் கொண்டுள்ளது.

எனவே வேளாண்மைக்குத் தேவையான நீர், தேவையான அளவு தேவையான நேரத்தில் கிடைப்பதற்காக தமிழ்நாட்டின் பாசன முறைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பயிருக்கு வேண்டிய நீரினை ஒழுங்குபடுத்தி அளிப்பதே நீர்ப்பாய்ச்சல் அல்லது பாசன முறை ஆகும். வேளாண்மையில் மகசூலை அதிகப்படுத்த நீர்ப்பாய்ச்சல் தேவையானது.

தமிழ்நாட்டில் நீர்ப்பாய்ச்சல் கிணற்று பாசனம், ஏரிப் பாசனம், கால்வாய் பாசனம் என்ற மூன்று வகைகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் பாசன முறைகள்

கிணற்றுப் பாசனம்

கிணற்றுப் பாசனம்கிணற்றுப் பாசனம்

இப்பாசனமுறை மிகவும் பழமையான ஒன்றாகும். ஆனால் எளிமையானது.

விவசாயிகள் தங்களின் நிலத்தில் தாங்களே கிணறு அமைத்துக் கொண்டு தேவையானபோது நீரினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலத்தடி நீரினைப் பயன்படுத்தும் இப்பாசனமுறையானது தமிழ்நாட்டின் முக்கியமான நீர்ப்பாய்ச்சல் முறையாகும்.

சுமார் 52 சதவீத வேளாண்பரப்பு இப்பாசனமுறையின்படி நீர்ப்பாய்ச்சலைப் பெறுகின்றன.

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதிகளில் குறிப்பாக வேலூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கிணற்றுப் பாசனம் முக்கியமாக உள்ளது.

கிணற்றுப் பாசனமுறையில் உள்ள குறைகள்

இம்முறையில் சிறுபரப்பிற்கு மட்டுமே பாசனம் அளிக்க இயலுகிறது.

நீரின் மட்டும் அடிக்கடி மாறுபடுவதோடு கோடையில் வறண்டு விடுகிறது.

அதிகளவு பயன்படுத்தும்போது நீர்மட்டம் குறைந்து விடுகிறது.

மின்மோட்டார்கள் வைத்து நீர் இறைக்க அதிக மின்சக்தி தேவைப்படுகிறது.

ஏரிப் பாசனம்

ஏரிப் பாசனம்
ஏரிப் பாசனம்

இந்தியாவில் ஏரிப் பாசனம் அதிகளவு நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

மழைநீர் ஓட்டத்தை இயற்கையாக உள்ள பள்ளங்களிலோ அல்லது மனிதர்களால் வெட்டி அமைக்கப்படும் பள்ளங்களிலோ தேக்கி வைப்பதே ஏரி, கண்மாய், குளங்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஏரிகள் அமைக்கும் பணி நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. அரசர்கள், குறுநிலமன்னர்கள், உள்ளுர் நிலக்கிழார்கள் முதலியோர் ஏரிகளை அமைத்துள்ளனர்.

ஏரிகள் நேரடியாக மழை மூலம் அல்லது ஆறுகளிலிருந்தும், பிற ஏரிகளிலிருந்தும் நீரினைப் பெறுகின்றன.

சுமார் 20 சதவீத வேளாண்பரப்பு இப்பாசனமுறையின்படி நீர்ப்பாய்ச்சலைப் பெறுகின்றன.

செம்பரம்பாக்கம், மாமண்டூர், வீராணம், மதுராந்தகம், காவேரிப்பாக்கம், இராஜசிங்க மங்களம் முதலியன தமிழ்நாட்டின் முக்கிய சில பெரிய ஏரிகளாகும்.

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இப்பாசனமுறை முக்கியமானதாக உள்ளது.

ஏரிப் பாசனத்தில் உள்ள குறைகள்

வேளாண்மைக்குப் பயன்படும் நிலப்பரப்பில் ஒருபகுதியை ஏரிகள் பிடித்துக் கொள்கின்றன.

இதில் ஆவியாதல் அதிகம்.

நீரின் தேவை அதிகம் உள்ள கோடையில் இவை வறண்டு விடுகின்றன.

படிவுகளால் இவை மேடாகி ஆழம் குறைந்து விடுகின்றன.

கால்வாய்ப் பாசனம்

கால்வாய்ப் பாசனம்
கால்வாய்ப் பாசனம்

ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் இந்தப் பாய்ச்சலே முக்கியமானதாக உள்ளது. ஆற்றின் இருபக்கங்களிலும் கால்வாய்கள் அமைக்கலாம்.

ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்கும்போது ஆற்றின் வாய்க்கால்களில் நீர் செல்லலாம். ஆற்றின் குறுக்காக அணைகள் கட்டி கால்வாய்கள் வழியாக நீரை வயலுக்கு எடுத்துச் செல்லலாம்.

இப்பாசனமுறையின்படி 27சதவீதம் வேளாண்பரப்பு பாசன வசதி பெறுகிறது.

இதில் பாதியளவு தஞ்சாவூர், நாகபட்டிணம் மாவட்டங்களில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கடலூர், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இப்பாசனமுறை முக்கியமானது.

காவிரி, பரம்பிக்குளம் ஆழியாறு, பாலாறு, பெண்ணையாறு, பெரியாறு, வைகை மற்றும் அவற்றின் துணையாறுகளால் இப்பகுதி பாய்ச்சல் வசதி பெறுகிறது.

கால்வாய்களின் மூலம் பாய்ச்சல் வசதி அளிக்கும் நீர்த்தேக்கங்கள் மேட்டூர், சாத்தனூர், பவானிசாகர், பரம்பிக்குளம்-ஆழியார், பெரியார், வைகை, அமராவதி, கிருஷ்ணகிரி ஆகியவை ஆகும்.

கால்வாய்ப் பாசனத்தில் உள்ள குறைகள்

நீரானது பூமிக்குள் தொடர்ந்து இறங்குவதால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து சதுப்புநிலங்கள் உருவாகுகின்றன.

நீரினை உறிஞ்சும் தன்மையை மண் இழந்து விடுகிறது.

கால்வாய்கள் அமைக்க அதிக மூலதனம் தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டின் பாசன முறைகள் மூன்றாக இருந்தாலும் தற்போது கிணற்றுப் பாசனமே அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் ஆறுகளில் உள்ள நீரானது ஏறக்குறைய முழுவதுமே பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

One Reply to “தமிழ்நாட்டின் பாசன முறைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.