தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள் சில. அவற்றை பற்றி  இக்கட்டுரையில் பார்ப்போம்.

தவிட்டுச் சிலம்பன், மைனா, கருஞ்சிட்டு, செம்போத்து, தூக்கணாங்குருவி மற்றும் இருவாட்சி போன்றவை தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்.

தவிட்டுச் சிலம்பன்

நாம் சாம்பல் நிறத்தில் நீளமான வாலுள்ள இப்பறவையைப் பார்த்திருப்போம். இது தவிட்டுப் புறா, சாதா சிலம்பன், நாட்டுப் பூணியல் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

 

தவிட்டுச் சிலம்பன்
தவிட்டுச் சிலம்பன்

 

தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பறவைகளுகள் இது மிகவும் பழமையானது.

இவைகள் ஏழு சகோதரர்கள் அல்லது ஏழு சகோதரிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவைகள் ஆறு முதல் இருபது வரை எண்ணிக்கை கொண்ட கூட்டமாகவே காணப்படும்.

இவைகள் சாம்பல் நிறத்தில் நீளமான வாலினையும் கழுத்துப்பகுதியில் வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும்.

 

தவிட்டுப் புறா

இவைகள் சத்தமாக ‘கிரீச் கிரீச்’ என்று ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கும். இவைகள் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு சமூகப் பறவைகளாக இருக்கின்றன.

பொதுவாக இப்பறவையானது உலர்ந்த திறந்தவெளி காட்டுப்பகுதியை வாழிடமாகக் கொண்டுள்ளது. இப்பறவைகள் தானியங்கள், பூச்சிகள், பூக்களின் மகரந்தங்கள், பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன.

மைனா

மைனா
மைனா

 

இது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சார்ந்த பறவையாகும். இது அனைத்துண்ணிப் பறவையாகும்.

திறந்த வெளிக்காட்டுப்பகுதியே இதனுடைய வசிப்பிடமாகும். எனினும் நகர்புறத்தில் மனிதர்களுக்கு அருகாமையில் வசிக்கும் திறனையும் இது பெற்றுள்ளது. 

 

மரப்பொந்தினுள் மைனா குஞ்சு
மரப்பொந்தினுள் மைனா குஞ்சு

 

இப்பறவையின் உடலானது பழுப்புநிறத்திலும், தலை மற்றும் வால்பகுதி கறுப்பு நிறத்திலும், கண்களைச் சுற்றிலும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதனுடைய அலகும், கால்களும் அடர்மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.

 

பூச்சியை உண்ணும் மைனா
பூச்சியை உண்ணும் மைனா

 

இவை விதைகள், தானியங்கள், பழங்கள், சிறுபூச்சிகள் உள்ளிட்டவைகளை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை பிற ஒலிகளை கேட்டு அவற்றைப்போல் ஒலி எழுப்பும் திறன் உடையவை.

கருஞ்சிட்டு

கருஞ்சிட்டு
கருஞ்சிட்டு

 

கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் என்பது சிட்டுவகையைச் சார்ந்த சிறுபறவையாகும். இது மகிழ்ச்சியான நட்பான பறவையாகும். இது தமிழ்நாட்டை தாயகமாக கொண்டது.

உலர்ந்த புதர் காடுகளை வசிப்பிடமாகக் கொண்டுள்ளது. இப்பறவை பொதுவாக கிராமப்புறங்களில் அதிகம் காணப்படும். பாதையோரப் புதர்களிலும், கற்களிலும் அமர்ந்து கொண்டு வாலை ஆட்டியபடி இருக்கும்.

 

குஞ்சுக்கு உணவு ஊட்டும் கருஞ்சிட்டு
குஞ்சுக்கு உணவு ஊட்டும் கருஞ்சிட்டு

 

ஆண் பறவை தவிட்டு நிறமும், ஒளிரும் கறுப்பு நிறமும் உடையது. இதனுடைய வாலின் அடிப்புறம் செந்தவிட்டு நிறமாக இருக்கும். பெண் பறவை சாம்பல் கலந்த தவிட்டு நிறமுடையது.

இப்பறவையானது பூச்சிகள், உலர்நிலத் தாவரப் பூக்களின் மகரந்தத்தை உண்ணும். இது மரப்பொந்திலும், புற்களிலும் கூடுகளைக் கட்டும். இப்பறவையானது கத்தும்போது அதனுடைய வாலானது மேலும் கீழும் ஏறி இறங்கும்.

செம்போத்து

செம்போத்துசெம்போத்து

 

இன்றைக்கும் அடர்ந்த தோப்புகளில் அல்லது அடர்ந்த மரங்கள் நிறைந்த இடங்களில் குகுக் குகுக் என்ற ஒலியை கேட்கலாம்.

அது செம்போத்து எனப்படும் தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவையின் ஒலியாகும். இது செங்காகம், செம்பகம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவைகள் காடுகள், மலைகள், வயல்வெளிகள், மரங்களைக் கொண்ட நகர்ப்புறங்கள் என எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றன.

 

சூரியஒளி வாங்கும் செம்போத்து
சூரியஒளி வாங்கும் செம்போத்து

 

இப்பறவை கருமையான தலைப்பகுதியையும், உடலின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியானது நாவல் கலந்த கறுப்பு நிறத்திலும் இருக்கும். உடலின் நடுப்பகுதியானது செம்மையாகவும் இருக்கும்.

நன்கு சிவந்த கண்களைக் கொண்ட இப்பறவையானது சிறுபூச்சிகள், நத்தைகள், முட்டைகள், பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை உண்ணும் தன்மை உடையவை.

குறைந்த தொலைவே பறக்கும் திறன் கொண்ட இவை மரங்களில் தத்தி தத்தி நடந்து செல்லும். இதனுடைய ஒலியானது நீண்ட தொலைவு வரை கேட்கும்.

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவி

 

சிறந்த கூட்டினை நிர்மாணிக்கும் இப்பறவையை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இப்பறவையின் கூடானது மழைநீர் உள்ளே செல்லாமலும், காற்றில் கீழே விழாமலும் இருக்கும்.

 

கூடுகட்டும் தூக்கணாங்குருவி
கூடுகட்டும் தூக்கணாங்குருவி

 

தூங்கணாங்குருவி கூடு
தூக்கணாங்குருவி கூடு

 

தூங்கணாங்குருவி கூடுகள்
தூங்கணாங்குருவி கூடுகள்

 

இவை தண்ணீர் வளமான பகுதிகளில் கூட்டமாக இலைகளின் நரம்புகள், நார்கள் ஆகியவற்றைக் கொண்டு கீழ்நோக்கி தொங்கும் கூட்டினைக் கட்டுகின்றன. இப்பறவையானது 15 செமீ நீளத்திலும், 20 கிராம் எடையிலும் காணப்படும்.

 

குஞ்குக்கு உணவு ஊட்டும் தூங்கணாங்குருவி
குஞ்குக்கு உணவு ஊட்டும் தூக்கணாங்குருவி

 

அரிசி, கோதுமை, சோளம், தினை, ஈக்கள், வண்டுகள், கரையான், சிலந்தி, சிறிய நத்தைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.

இருவாட்சி

இருவாட்சி
இருவாட்சி

 

இப்பறவை பார்ப்பதற்கு இரண்டு வாய்களைக் கொண்டுள்ளதைப் போல் உள்ளதால் இருவாய்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இது பறக்கும்போது வானூர்தியைப் போல் ஒலி எழுப்பிய வண்ணம் பறக்கும்.

பெரிய அலகினைக் கொண்ட இவை 30 முதல் 40 ஆண்டுகள் வாழும். இப்பறவையை மழைக்காட்டின் குறியீடு என்பர். ஏனெனில் வளமான காட்டுப்பகுதியில் மட்டுமே இவை வாழும்.

பழங்கள், பூச்சிகள், சிறுவிலங்குகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். தமிழ் இலக்கியங்களில் இவை மலை முழுங்கான் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி, சாம்பல்நிற இருவாட்சி, மலபார் பாத இருவாட்சி என நான்கு வகைகள் தமிழ்நாட்டில் மேற்குதொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள் சிறந்து வாழ இயற்கை வளங்களான காடுகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகளைப் போற்றிப் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.

வ.முனீஸ்வரன்

 

இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

உயிரினங்களில் தாய்மை