தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்

தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.

தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.

அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.

புலவர்கள் அரிய கருத்துக்களை நூல் வடிவில் இயற்றினார்கள். அந்த நூல்களில் சில திருக்குறள் போல உலகம் முழுதும் பவனி வந்தன. பல குடத்திலிட்ட விளக்காய்க் கவனம் பெறாமல் போய்விட்டன. காணாமல் போன நூல்களும் உண்டு.

தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்ந்த உ. வே. சாமிநாதையர் மற்றும் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் பழைய நூல்களைச் சரி செய்து புதிய தொழில் நுட்பத்தில் அச்சேற்றினர். இன்று பழைய நூல்கள் பலவும் இணையத்திற்கும் வந்து விட்டன.

ஆனாலும் இன்றும் அரிய நூல்கள் பல பிறர் கவனம் பெறாமலே இருக்கின்றன என மருகுகிறார் பாரதிசந்திரன் என்று இலக்கிய உலகில் புகழ் பெற்ற முனைவர் செ சு நா சந்திரசேகரன்.

உலகம் அறியாத அரிய தமிழ்ப் புதையலைத் தேடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறார் பாரதிசந்திரன். நம்மையும் வழித்துணையாக வர அழைக்கிறார்.

கவனம் பெறாத பல அரிய தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பலரும் அறியும் வண்ணம் வெளிச்சம் பாய்ச்ச விழைகிறார் பாரதிசந்திரன்.

தொகுத்தல் என்பது பேராசிரியர் பாரதிசந்திரனின் கைவந்த கலை. அவர் நமது இனிது இதழில் தமிழ் இணைய இதழ்கள் பற்றியும் குறும்படங்கள் பற்றியும் சிறப்பான‌ தொடர்கள் எழுதியிருக்கின்றார்.

பிற நாட்டு நல்லறிஞர் படைப்புக்கள் தமிழில் வேண்டும் என்று பலர் உழைக்கின்றார்கள். அதே நேரத்தில் நல்ல தமிழ் படைப்புகள் நலிந்து விடக் கூடாது என்று பாரதிசந்திரன் போராடுகிறார்.

தமிழின் வளர்ச்சிக்கு அபார உழைப்பை நல்கும் பாரதிசந்திரன் அவர்களுக்குத் தலை வணங்கும் இனிது இணைய இதழ், அவரது நல்ல முயற்சிக்கு மேடையாய் அமைவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

இனிது வாசகர்கள், மாணவர்கள், தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ் மேல் பற்றுள்ள அனைவரும் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற தங்கள் பங்களிப்பை நல்குமாறு வேண்டுகிறோம்.

இதோ பாரதிசந்திரனுடன் இணைந்து தமிழ்ப் புதையலைத் தேடி நம் பயணம் ஆரம்பம்.

ஏன் இந்தப் பயணம்?

காலம் வெகுவேகமாய் உருண்டோடுகின்றது. மனிதனுக்காய்த் தோற்றுவிக்கப்பட்ட எல்லாமே தமக்குள் ஆதார சுருதியை மையம் வைத்துப் பல்வேறு கோணங்களில் புதிதாகிக் கொண்டேயிருக்கின்றன.

வாழ்வியலில் உள்ளமைப்பும் நிகழ்வுகளும் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை உருமாறிக் கொண்டே இருக்கின்றன.

அவ்வகையில் மொழியும் மொழியில் பதிவான நூல்களும் காலத்தால் அதீத வளர்ச்சியினைக் கொண்டுள்ளன.

உலக மொழிகளில் தோன்றிய அனைத்து நூல்களும் இன்று வரை உயிரோடு இருக்கின்றனவா?

அவை மக்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உண்டு செய்கின்றனவா?

இல்லை என்பதே உண்மை.

வலிமையான சில நூல்கள் மட்டும், உயிரியல் தத்துவமான ’பரிணாமக் கோட்பாடு’ போல இன்று வரை நீடித்து நிலைத்திருக்கின்றன. மற்றவை கொஞ்சம் கொஞ்சமாக மறைகின்றன; அல்லது மறைக்கப் படுகின்றன அல்லது மறக்கடிக்கப் படுகின்றன. காலம் அவற்றை அப்படியே விட்டு விடுகின்றது.

சில நூல்கள் இன்னும் எங்கோ ஒளிந்திருக்கலாம். சில நூல்கள் வெளிநாடுகளிலுள்ள நூலகங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். சில நூல்கள் ஆவணக் காப்பகங்களில் தூசிகளுடன் தூங்கிக் கொண்டிருக்கலாம்.

சில நூல்கள் பழைய பேப்பர்களோடு போய்க் கூழாகி நாம் எழுதிக் கொண்டிருக்கும் காகிதங்களாக மாறியிருக்கலாம்.. அறிவு, அது முழுவதும் அப்படியே பாதுகாக்கப்படாமல் கவனிப்பாரன்றியும் போயிருக்கின்றது.

சமண சைவச் சொற்போர்களில் சிதைந்தவையும் எரிக்கப்பட்டவையும் நீரில் விட்டவையும் எத்தனை எத்தனையோ?

ஆடிப்பெருக்கில் ஆற்றில் பழைய ஏடு விடுதல் சாலச் சிறந்தது‘ என்ற தமிழ் அழித்தல் எனும் சூட்சுமப் பொருளுணரா பூர்வீகக் குடிகள் செய்தவைகள் எத்தனை எத்தனையோ?

பிறமொழிகள் காலூன்றத் தமிழ்மொழிச் சிறப்பைக் கெடுக்கச் செய்த திருவினைகளால் வரலாறு கெட்டவைகள் தான் இலக்கியத்தில் எத்தனை எத்தனையோ?

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1959-ல் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்று நானூறு பக்க நூலொன்றை எழுதியுள்ளார்.

அதில் மறைந்துபோன இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், இசைத் தமிழ் நூல்கள், நாடகத் தமிழ் நூல்கள், பெயர் தெரியாத நூல்கள், சிதையுண்ட தமிழ் நூல்கள் எனப் பலநூறு அபூர்வத் தமிழ் நூல்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இந்நூலினைப் போலவே ‘பொற்காலங்களும் இருண்ட காலமும்’ எனும் நூலில் அறிஞர் பொ.வேல்சாமி, 20-ஆம் நூற்றாண்டு வரையிலான மறைக்கப்பட்ட தமிழ் நூல்களின் வரலாற்றில் சிலவற்றைப் பேசுகின்றார்.
வரலாற்று ஆவணங்களில் மிக முக்கியமான நூலாக இந்நூல் உள்ளது.

அதிலொன்று, கனகசபை பிள்ளை எழுதிய ‘1800-ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ எனும் நூல் 1900-ல் வெளிவந்தது. இதுவே தமிழ் நிலத்தின் வரலாறு கூறிய முதல் நூல். இந்நூல் குறித்து எந்த வரலாற்று நூலும் விரிவாகப் பேசப்படவில்லை.

நீதிபதி சேலம் ராமஸ்வாமி அவர்களின் இலக்கிய முன்னெடுப்புக்களினால் தான், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா பெரியளவில் பெயர் வாங்கினார் என்பது உண்மையாகும். அவரால் தான் பெரும்பதிப்பாளர் ஆனார் என்பதை அவரைக் குறித்துக் கூறியவர்கள் யாரும் எவ்விடத்திலும் கூறவில்லை.

“கம்பனை ஆதரித்தவர் என்பதால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பல தமிழிறிஞர்களில் ஒருவர் எஸ்.வையாபுரிப் பிள்ளை” என்று ‘புத்தகம் பேசுது’ ஆசிரியர் குழுவின் கட்டுரை பேசுகிறது.

இலக்கிய வரலாற்றின் பக்கங்களில், தமிழ்ச் சான்றோர்களின் பட்டியலில், தமிழ் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இவரின் தமிழ்ப் பணிகளைக் குறிப்பட்டது உண்டா? என்றால், இல்லை என்பதே பதிலாகும்.

அரங்கநாதக் கவிராயர், இராமசாமி பிள்ளை, சரவணப் பெருமாள் பிள்ளை, இராமானுஜக் கவிராயர், அப்துல் காதர், சின்ன இபுறாசீம் மொகையதீன், சபாபதி முதலியார் எனப் பல அவதானிகள் இருந்திருக்கின்றனர்.

இவர்கள் போன்ற எண்ணற்ற அவதானிகளான தசவதானிகளின், அஷ்டாவதானிகளின், சோடச அவதானிகளின், சதாவதானிகளின் தமிழ்ப் புலமையில் வெளிவந்தவைகளை எங்கே நாம் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம்?

அவர்களின் இலக்கியங்கள் குறித்த குறிப்புக்களை இலக்கிய வரலாற்றில் எங்கும் முழுமையாக இதுவரை எழுதவில்லையே? இது ஏன்?

சித்தர் இலக்கியங்களில், ஊடுறுவலான இலக்கியங்களை வேண்டுமென்றே உள்புகுத்தி, உண்மை இலக்கியத்தின் மகத்துவத்தைக் குறைத்து, உண்மை இலக்கியத்தைக் குறித்து மோசமாய் இருட்டடிப்புச் செய்து விட்ட மாபெரும் இலக்கியப் பாதுகாப்பாளர்கள் தானே நாம்?

சைவ சமயம் சமண மதத்துடன் சொற்போர் நடத்திய போது எழுந்த பற்பல இலக்கியங்கள், சைவ சமயம், அத்வைத சமயம் இவற்றுக்கிடையில் நடந்த சொற்போரின் போது எழுந்த எண்ணற்ற இலக்கியங்கள் எங்கே?

மொழியாக்கம் என்ற நிலையில், வேதாந்த, தத்துவ, புராண, இதிகாச வடநூற்களைத் தமிழ்ப்படுத்திய அல்லது அதைப் போன்றதொரு தமிழ் நூலை உருவாக்கியவைகளில், குறிப்பிட்டவைகளை மட்டும் பெரிதாய்ப் பதிவு செய்துவிட்டு, நல்ல இலக்கியமாக இருந்தாலும், பிற‌வற்றையெலாம் மறைத்துக் காணாமல் போகச் செய்திருப்பது தான் நம் சாதனை.

சில மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட‌ வரலாறுகள் இன்று காலத்தின் அதீத அறிவியல் வளர்ச்சியால் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

இன்னும் காணாமல் போனவைகளைத் தேடித் தேடிக் கொண்டு வரவேண்டிய இடத்தில் இப்போது நாம் எல்லோரும் இருக்கின்றோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் திருமதி. சுபாஷினி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளி நாடுகளிலுள்ள நூலகங்களிலுள்ள அரிய நூல்களையெல்லாம் கண்டெடுத்து, அரிதின் முயன்று அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

அவர்களின் வழியில் அதே அமைப்பைச் சார்ந்த திருமதி.தேமொழி அவர்களும் பல நூல்களை வெளிக்கொண்டு வரும் இலக்கிய முன்னெடுப்புகளை ’மின்தமிழ் மேடை’ என்னும் தமிழ் மரபு அறக்கட்டளை இணைய இதழ் வழியாக‌க் கொண்டு வருகிறார்.

இவர்கள் போல் இன்னும் சில அமைப்புகள் அதாவது இணையக் காப்பகம் (INTERNET ARCHIVE), தமிழ் மின்னூலகம் (Tamil Digital Library) போன்றவை மறைந்து போன, மறந்து போன பல ஆயிரம் நூல்களை இலவசமாகத் தம‌க்குள் ஆவணப்படுத்தி உள்ளன.

இதுபோல், அழிவின் ஓரத்தில் இருந்து கொண்டு காணாமல் போகப் போகும் தமிழ் நூல்களை வெளியுலகிற்குக் கொண்டுவரும் சிறு முயற்சிதான் தமிழ்ப் புதையலைத் தேடி என்ற‌ இம்முயற்சியாகும்.

அரிதின் முயன்று வரலாறுகளைத் தேடியும், இளைய தலைமுறை மறக்கக் கூடாத அபூர்வ நூல்களை அடையாளப்படுத்தியும் இத்தொடர் அமையவிருக்கிறது.

வாசகர்கள் இதனைக் கூட்டு முயற்சியாக எடுத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த இது போன்ற அபூர்வத் தமிழ் நூல்களை விமர்சனக் கடிதப் பகுதியில் அடையாளப்படுத்துங்கள். அந்த நூல்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்து இத்தொடரில் இணைத்துக் கொள்வோம்.

இக்கூட்டு முயற்சியால் சிறிதளவு நூல்களாவது தமிழ் இலக்கிய வரலாற்றில் மீட்டெடுக்கப்படும் என்றால், அதுவே இத்தொடரின் பெருவெற்றியாகும்.

நூறு நூல்கள் என்ற இலக்குடன் தொடர்வோம்.

ஆயிரமானாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

தமிழ் வளர, நாமும் அறிவால் வளர தொடர்ந்து பயணிப்போம்.

அபூர்வ நூல்களைத்தேடி ஒரு பயணம் செல்ல அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

One Reply to “தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்”

  1. ஆகச் சிறந்த பணி இது. வரலாறு எல்லாவற்றையும் ஒரு முறை நினைத்துப் பார்க்கும். அப்பொழுது யாருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதற்குத் தெரியும்.

    அந்த அளவிற்கு தமிழை ஓர் அங்குலம் உயர்த துடிக்கும் நோக்கத்தை கண்டு அகம் மகிழ்கிறேன்.

    தமிழ் என்றாலே இனிமை என்பது பொருள். உங்கள் தொடர் கட்டுரைகள் இனிமையாக இருக்கும். தொடர்ந்து வாசிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இந்நேரத்தில் பதிவிட விரும்புகிறேன்.

    மகிழ்ச்சி!

    வாழ்த்துக்கள் பேராசிரியர்!

Comments are closed.