தமிழ்ப் புத்தாண்டே வருக!

பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமே

வசந்தம் எனும் பெருமகிழ்வை
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே

கடந்த வருடக் கசப்பெல்லாம்
இல்லா தொழிந்து போகட்டுமே
பாரினில் அமைதி நிலவட்டுமே
ஒற்றுமை யெங்கும் பரவட்டுமே
அறமும் மறமும் தழைக்கட்டுமே
ஆன்மிகம் என்றும் வாழட்டுமே

குரோதி வருடம் தீதென்றும்
தீமைகள் அதிகம் தருமென்றும்
பஞ்சாங்கம்கூறுது படிக்கயிலே
பஞ்சாங்கக் கூற்று தவறென்று
அல்லவை அகற்றி அநுதினமும்
நல்லதே செய்வாய் பூமியிலே

லஞ்சம் சுரண்டல் கமிஷனென
கொள்ளையடிக்கும் கூட்டமினி
இல்லா தொழிந்து போகட்டுமே
இயற்கை வளங்கள் வாழட்டுமே

வறுமைக்கே வறுமையது
வந்தேதான் சேரட்டும்
சாதியால் மோதலும்
மதத்தினால் பிரிவினையும்
உண்டாக்கும் கலவரங்கள்
உன்னாலே இனிமேலே
நடக்காது போகட்டும்

சத்தியங்கள் சாகாது
உயிரோடு வாழட்டும்
ஊறில்லா உண்மைகள்
உயிர்ப்போடு இருக்கட்டும்

மொத்தத்தில் குரோதி நீ
எங்கள் சித்தத்தில்
உறவும் நட்பும்
பாசமும் நேசமும்
பரிமளிக்கச் செய்திடுவாய்

சாத்தானின் குணத்தோடு
தன்னலம் காக்கின்ற
வீணர்கள் இனிமேலும்
வாழாது வீழ்ந்திடவே
வரமதனைத் தந்திடுவாய்
நல்லவர்கள் வாழ்வுதனில்
நலம் பல சேர்த்திடுவாய்

வாருங்கள் உடன்பிறப்பே
வரவேற்போம் தமிழாண்டை
தீதில்லா நன்மைகள்
தரணிதோறும் பெற்றிடவே
தமிழர் பண்பாட்டைக்
காலமெலாம் காத்திடவே

அனைவர்க்கும் இனிய தமிழ்ப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்